நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர் | Even those who pretend to be good people turn out to be good people in real | best short stories in tamil

நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர் | Even those who pretend to be good people turn out to be good people in real | best short stories in tamil

ஒருமுறை திருடன் ஒருவன் சிம்மபுரி நாட்டு  மன்னரின் அரண்மனைக்குள் திருடுவதற்காக சென்றான். அந்த சமயம் அரசர் தமது குலகுருவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கண்டான். 

மறைவாக ஒளிந்திருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவன் கேட்டான். அரசன் குல குருவை பார்த்து “குருவே, நீண்ட நாட்களாக எனது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது” என்றான்.

உடனே குலகுரு அரசனை பார்த்து, “அரசே, கவலைப்படாதே பொழுது விடிந்ததும் நம் ஊரின் எல்லையில் உள்ள நதி கரைக்கு உன் காவலர்களை அனுப்பு அங்கு பல துறவிகள் தவம் செய்து வருகிறார்கள். 

அவர்கள் பாவம் ஏதும் செய்யாத மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் உன் மகளுக்கு ஏற்ற கணவர்” என்றார். மறைவில் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

“நாம் போய் நதிக்கரையில் துறவி போல் அமர்ந்து கொண்டால் காவலர்கள் நம்மை அரசனிடம் அழைத்து செல்வார்கள். அரசனும் தன் குலகுரு சொன்னபடியே அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்.

நான் அரசனின் மாப்பிள்ளை ஆகி விடுவேன். பிறகு இந்த திருட்டு தொழிலை விட்டு விடுவேன்” என்று நினைத்து துறவி போல் வேடம் அணிந்து கொண்டு உண்மையான துறவிகளுடன் சேர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான். 

பொழுது விடிந்ததும் தன் குலகுரு சொன்னபடியே அரசன் சில காவலர்களை நதிகரைக்கு அனுப்பி அங்குள்ள துறவிளுள் ஒருவரை தம் மகளை திருமணம் செய்து கொள்ள வருமாறு கூறி அழைத்து வர சொன்னார். 

காவலர்களும் அரசனின் ஆணைப்படி நதிகரைக்கு சென்று அங்கிருந்த துறவிகளிடம் அரசர் தம் மகளை மணந்து கொள்ள அழைத்து வருமாறு கூறியதாக ஒவ்வொருவரிடம் கூறினார்கள். 

அனைத்து ஆசிகளையும் துறந்து, இறைவனடி சேர்வதற்காக தவம் புரியும் அந்த துறவிகள் காவலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காவலர்கள் இறுதியில் துறவி வேடம் அணிந்திருந்த  திருடனிடம் வந்து, “சுவாமி, நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். 

எங்கள் அரசர் தமது மகளை இங்கிருக்கும் துறவிகளுள் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நாங்கள் இங்கிருக்கும் துறவிகள் அனைவரிடம் கேட்டுவிட்டோம். ஒருவரும் வருவதாக தெரியவில்லை, தாங்கள் ஆவது அருள் கூர்ந்து எங்களுடன் வந்து எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றனர். 

இதை கேட்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் சற்றும் நேரம் சிந்தித்தான். இங்குள்ள அனைத்து துறவிகளும் உண்மையான துறவிகள், நல்லவர்கள் அதனால்தான் இவர்களுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. 

நாம் உடனே ஒப்புக்கொண்டால் நம் மீது மன்னர் சந்தேகப்படுவார், என்று மனதில்  நினைத்தான். இச்சமயத்தில் நாமும் உண்மை துறவிகளைப் போல இருக்க வேண்டும் என்று எண்ணியவனாய் அமைதியாக இருந்தான். 

காவலர் வெகு நேரம் கெஞ்சியும் கேட்டும் துறவி வேடத்திலிருந்து திருடன் ஒன்றும் கூறாமலேயே மௌனமாக இருந்தான். பின்னர் காவலர்கள் அரண்மனைக்கு திரும்பி சென்று அரசனை பார்த்து, “அரசே, நதிக்கரையில் தவம் செய்யும் துறவிகள் எல்லோரிடமும் தாங்கள் கூறியதை சொன்னோம். 

ஒருவர் கூட எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக உட்கார்ந்து இருக்கும் ஒரு துறவி மட்டும் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறார். ஒருவேளை தாங்கள் நேரடியாக சென்று அழைத்தால் அவர் வருவார்” என்றனர். 

அரசனும் உடனே புறப்பட்டான். அரசன் துறவி வேடத்திலிருந்து திருடனைப் பார்த்து, “ஐயா, தாங்கள் அருள் கூர்ந்து என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான். அரசன் கூறியதை கேட்டதும் துறவி வேடத்தில் இருந்த திருடன் ஒரு கணம் சிந்தித்தான். 

இந்த நிலையில் உண்மையான துறவி, என்ன பதில் கூறுவார்? என்று நினைத்துப் பார்த்தான். உண்மையான துறவி ஒன்றும் கூறாமல் மௌனமாக இருப்பார் என்பதை அறிந்தான். 

அவனும் அவ்வாறே மௌனமாக இருந்தான். அரசன் தன்னாட்டில் பாதியை அவனுக்கு அளிப்பதாகவும் தன் மகளை மணந்து கொள்ளுமாறும் வேண்டினான். அப்பொழுதும் திருடன் உண்மையான துறவி போல் மௌனமாகவே இருந்தான். 

best short stories in tamil

முடிவில் அரசன், “சுவாமி, என் மகளை தங்களுக்கு தருவதுடன் என் நாடு முழுவதையும் உங்களுக்கு தருவதாக கூறியும் தாங்கள் என்னுடன் வர சம்மதிக்காமல் இருப்பதிலிருந்து தாங்களே உண்மையான, நல்ல துறவி என்று கண்டு கொண்டேன். 

தங்களைப் போன்ற ஒருவரை நான் இல்லற வாழ்க்கைக்கு அழைத்ததே பெரும் பாவம்” எனக் கூறியபடி துறவி வேடத்திலிருந்த திருடனிடம் காலில் விழுந்து வணங்கினான். 

இதை கண்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் ஆழமாக சிந்திக்க தொடங்கினான். “நாம் உண்மையான, நல்ல துறவி இல்லை நல்லவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வேஷத்திற்கு இவ்வளவு மதிப்பு கிடைக்கிறது என்றால் உண்மையான நல்ல துறவியாக நாம் ஆகிவிட்டால் இதைவிட மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அல்லவா, 

நாம் ஏன் உண்மையான துறவி ஆகிவிடக் கூடாது” இவ்வாறு சிந்தித்து திருடன் அன்று முதல் உண்மையான நல்ல துறவியாகவே மாறிவிட்டான்

 நீதி : நல்லவர்களைப் போல் வேடம் அணிந்து நடிப்பவர்களும் கூட நாளடைவில் நல்லவர்களாகவே மாறிவிடுவர். உண்மையிலேயே நாம் நல்லவர்களாக இருந்துவிட்டால் நமக்கு கூடுதல் மதிப்பு தானே. எனவே நாம் நல்லவர்களாக இருப்போம்.
Leave a Comment