மணியோசையும் மக்கள் அச்சமும் | Sound of the bell and fear of the people | kids tamil story

மணியோசையும் மக்கள் அச்சமும் | Sound of the bell and fear of the people | kids tamil story

ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான். ஆனால் துரதிஷ்டவசமாக அன்றே அவனை ஒரு புலி கொன்று தின்று விட்டது.

கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.

 மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர்.

அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்.

 மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு , ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.

குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து  விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.

இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது. ஆனால், நிறைய பழங்களும் கொட்டைகளும் இருக்கவே, மரத்திலேயே மணியை வைத்தது; இறங்கி வந்து அவற்றை பொறுக்க ஆரம்பித்தது.

இந்த சமயத்திற்காக காத்திருந்த சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடி வந்தான். காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்.

 நீதி: பகுத்தறிவு விளக்கை ஏற்று, மூட நம்பிக்கை இருளை ஓட்டு.
Leave a Comment