எல்லோரையும் திருப்தி படுத்த முடியுமா? | Can everyone be satisfied? | Tamil story reading

எல்லோரையும் திருப்தி படுத்த முடியுமா? | Can everyone be satisfied? | Tamil story reading

ஒருமுறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்றுவிட தீர்மானித்தான். அருகில் உள்ள கிராமத்துக்கு தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்து போனார்கள். கழுதையின் மீது ஏறி சென்றால் அது களைப்படையலாம் அதனால் அதற்கு நல்ல விலை கிடைக்காமல் போகலாம் என்று விவசாயி எண்ணிதால் அதன் மீது ஏறாமல் அதை இழுத்தவாறு சென்றான்.

வழியில் செல்லும்போது சில வழிப்போக்கர்கள் இவர்களை பார்த்து சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாள்களை பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது ஏறி சவாரி செய்யலாமே,” என்று கேலியாக சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தை தொடர்ந்தான்.

சிறிது தொலைவு சென்ற பிறகு வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களை கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சை கேட்டவுடன் அவர்களை திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கி தந்தையை கழுதையின் மீது உட்கார செய்தான். தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். 

இன்னும் சிறிது தொலைவு சென்றதும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களை பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வர சொல்லி கொடுமைப்படுத்துகிறானே,” என்று விவசாயியை குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன்மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.

Tamil story reading

இப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாக கழுதையின் மீது அமர்ந்து பயணத்தை தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களை பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள் பாவம் அந்த கழுதை கண்டிப்பாக சுமை தாங்காமல் நொடிந்து போகும்,” என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீது இருந்து கீழே குதித்தார்கள்.

கழுதையை தூக்கிக் கொண்டு செல்வதுதான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தார்கள். மிகவும் சிரமப்பட்டு கழுதையின் கால்களை கட்டிய பிறகு, ஒரு கொம்பில் அதை கட்டி அதை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். 

கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீது இருந்தவர் பாலத்தை அவர்கள் கடக்க வேண்டி இருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டு கழுதையை தூக்கிக் கொண்டு வரும் வினோத காட்சியை, ஆற்றுக்கு அக்கறையில் இருந்த குழந்தைகள் பார்த்து கை கொட்டி சிரித்தனர். பெரிய சத்தத்தை கேட்டு பயந்துபோன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதை தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்த பரிதாபமான கழுதை ஆற்றில் தூக்கி எறியப்பட்டது!. ஏமாற்றம் அடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான். 

 நீதி : எடுப்பார் கை பிள்ளையாகாதே!

கையில் இருப்பதை இழக்காதே!
Leave a Comment