ஆணவத்தின் முடிவு அவமானம் | The end of pride is shame | Tamil stories with moral

ஆணவத்தின் முடிவு அவமானம் | The end of pride is shame | Tamil stories with moral

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.

அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.

ஆனால், வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு கொண்டிருந்ததால் சூரியன் கூறியது எதையும் கேட்பதாக அது இல்லை.

“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.

Tamil stories with moral

இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது

” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.

இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.

சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.

சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.

இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.

ஆனால், காற்று வேகமாக, வலுவாக வீச, வீச, குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.

சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. அவன், மேலும் வெப்பம் பரவுவதை உணர்ந்தான்.

சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; தலையை மூடிக் கொண்டான். இன்னமும் வெப்பம் அதிகரிக்கவே, தன்னுடைய மேலங்கியை எடுத்துவிட்டு அங்கிருந்த குளத்திற்குள் குதித்து விட்டான்.

இவற்றையெல்லாம் பார்த்த காற்று  அவமானமடைந்தது; தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்தது; தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.

 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.
Leave a Comment