சிங்க அரசனுக்கு ஏற்பட்ட ஆபத்து | The danger to Lion King | Tamil Story Tamil Story

சிங்க அரசனுக்கு ஏற்பட்ட ஆபத்து | The danger to Lion King | tamil story tamil story

தொலைவிலுள்ள காட்டில் வயதான பலம் இழந்த ஒரு சிங்கம் இருந்தது. அதுதான் அக்காட்டுக்கு அரசன், அதற்கு பலம் இல்லாததால் எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு அவரவரிடம் பல பணிகளை செய்யுமாறு கட்டளையிடும்.

சிங்கத்தின் உடலை கவனிக்க வேண்டிய பொறுப்பு காக்கையிடமும்; சிங்கத்திற்கு தேவையான உணவை சுமந்து வரும் பணி கழுதையிடமும் கொடுக்கப்பட்டிருந்தது. கழுதைக்கு உணவை சுமப்பது மிக கடினமான வேலையாக இருந்தது. ‘பொதி சுமக்கும் மிருகம் என்று சிங்கம் என்னை அழைக்கிறதே, அதற்காகத்தான் நான் படைக்கப்பட்டேனா?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வருந்தியது. சுண்டெலி சிங்க ராஜாவின் அரசவை விகடகன். சிங்கத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டியது அதனுடைய பணியாகும். ஒல்லியான பின்னங்கால்களை சுண்டெலி தூக்கி காட்டும்; தன்னுடைய மீசையை தடவி கொடுக்கும்; கண்களை மாறு கண்களாக வைத்துக்கொள்ளும்; தன் கூர்மையான காதுகளில் கிச்சு கிச்சு மூட்டிக்கொள்ளும்.

நரி சிங்கத்திற்கு ஆலோசகராக இருந்தது. காடு சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நரிதான் சிங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தது. நரி எப்போதும் சிங்கத்தைப் புகழ்ந்து பேசும். ஆனால் தனக்கு வேண்டியதை சிங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும். ஆனால் மற்ற மிருகங்கள் சிங்கத்தின் கொடிய ஆட்சியின் கீழ் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தன.

Tamil Story Tamil Story

ஒரு நாள் காட்டு மிருகங்கள் எல்லாம் ரகசியமாக சந்தித்தன. ஆனால், வஞ்சக புத்தியுள்ள நரி சிங்கத்திடம் சென்று அந்த மிருகங்கள் சந்தித்ததையும் அவர்கள் விவாதித்ததையும் கூறியது.

உடனே சிங்கம் எல்லாம் மிருகங்களையும் அழைத்தது, “என்னை அரியனையில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட நீங்கள் ரகசியமாக சந்தித்ததாக நான் கேள்விப்பட்டேனே. சதி செய்தவர்கள் யார்?” என்று கோபமாக கேட்டது.

எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின. யாரோ ஒரு துரோகி தங்களை காட்டிக் கொடுத்ததை அவை உணர்ந்தன. பெரிய தண்டனையை எதிர்பார்த்து நடுங்கியவாறு அவை எழுந்து நின்றன. “எல்லா மிருகங்களையும் கொன்றுவிடுங்கள்,” என்று சிங்கம் கர்ஜித்தது. எல்லா மிருகங்களும் அமைதியாக இருந்தன.

திடீரென்று கிரீச்சென்று ஒரு குரல் கேட்டது. அது அந்த சுண்டெலியின் குரல். “இது நியாயம் அன்று” என்று கத்தியது. “ஆம்” என்று மற்றொன்று முனங்கியது.

“நீதியை நிலை நாட்டுங்கள்,” என்று கத்தியது தவளை.

“ஆம், அது தான் சரி,” என்று யானைகள் சத்தமாகப் பிளிறின. எல்லாம் மிருகங்களும் ஒன்றாக சேர்ந்து “சிங்கம் ஒழிக,” என்று கூச்சலிட்டன.

சிங்கம் மிகவும் வியப்படைந்தது. என்ன செய்வதென்று அதற்கு தெரியவில்லை. அவசர அவசரமாக நரியை கலந்தாலோசித்தது. நரியால் ஒரு தீர்வும் சொல்ல முடியவில்லை. நரியின் மீது சிங்கத்திற்கு கோபம் உண்டாயிற்று. தனக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து கொண்ட நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

இதற்கிடையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தை நோக்கி நகர்ந்து அதை சுற்றி வளைத்துக் கொண்டன. சிங்கத்திற்கு பயம் ஏற்பட்டது. வலிமை இல்லாததால் சிங்கத்தால் அந்த மிருகங்களை தாக்க முடியவில்லை.

காட்டுப்பன்றி சிங்கத்தைக் குத்தியது. எல்லாம் மிருகங்களுமாக ஒன்று சேர்ந்து சிங்கத்தை தாக்கின; கொடிய சிங்கத்தை அவை கொன்று போட்டன.

அன்றிலிருந்து அந்த மிருகங்கள் யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. அவை எல்லாம் ஒன்று கூடி அமைதியாக வாழ்ந்தன.

நீதி : கொடுமை சீரழிவைத் தரும்!
Leave a Comment