தேனும் கசந்தது | The honey Also became bitter | small tamil stories with moral

தேனும் கசந்தது | The honey Also became bitter | small tamil stories with moral

உணவைத் தேடி ஒரு கரடி காட்டில் லைந்து கொண்டிருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்தமான வேர்கள், கொத்துக்கொத்தான பழங்கள், தேன் முதலியவற்றை நினைத்தாலே அதற்கு நாக்கில் நீர் ஊறிற்று. அது ஓர் அடர்த்தியான காடு; பல மயில்கள் பரவி இருந்தது. தன் பசியை போக்க கூடிய உணவு எப்போது கிடைக்கும் என்று எண்ணியவாறு கரடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது.

சற்றுத் தொலைவில் மரக்கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று திடீரென்று அதன் கண்களுக்கு தென்பட்டது. அந்த மரத்தை நோக்கி கரடி சென்றது. அருகில் நெருங்கியது; தேன்கூடு ஒன்று கிளையில் இருந்து தொங்குவதை கண்டதும் அதற்கு வியப்பு தாங்கவில்லை. நம்ப முடியாமல் தன் கண்களை தேய்த்துக் கொண்டது.

மரக்கிளையிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது தேன்கூடா? ஆம், தேன் கூடுதான். தன் அதிர்ஷ்டத்தை கரடியால் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. தேன்கூட்டுக்குள் தேனீக்கள் இருக்கின்றனவா என்று உற்று நோக்கியது. அங்கு தேனீக்கள் இல்லை மிக உற்சாகத்தோடு சுவையான தேனைத் தேன் கூட்டில் இருந்து எடுக்க தன் காலை தூக்கியது.

அந்த நேரத்தில் சத்தமாக ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீ கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடி துணுக்குற்றது. அந்தக் கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை  நெருங்கும் போது அங்கிருந்த கரடியை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடி அபகரிக்க வருவதைக் கண்ட தேனீக்கள் கரடியை சூழ்ந்து கொண்டு கோபத்துடன் அதை கொட்ட ஆரம்பித்தன.

small tamil stories with moral

தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு அதிகமாக ஆத்திரம்  ஏற்பட்டது. “எனக்கு கிடைக்காத தேன், தேனீக்களுக்கும் கிடைக்கக்கூடாது” என்று கரடி எண்ணியது. மேலே எழும்பி குதித்து கூட்டை கைப்பற்ற எண்ணியது. கைப்பற்றியவுடன் கூட்டை கீழே போட்டு உடைத்து அதை அழிக்க வேண்டும் என்று வெறி அதற்கு ஏற்பட்டது.

ஆனால், புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாரே அவை கரடியை சுற்றி சுற்றி வந்து வலிமையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளால் கொட்டின. மறுமுறையும் தேனீக்கள் தாக்கியவுடன் கரடி திகைத்துப் போனது. தேன் கூட்டை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டது. அவை இன்னமும் அதிகமாக தாக்குவதற்குள் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள தீர்மானித்தது.

கரடி மிக வேகமாக ஓடியது. ஆனால், அதன் உடலில் பல இடங்களிலும் கொட்டியவாறு தேனீக்கள் கரடியை பின் தொடர்ந்தன. தங்களுடைய தேனை பேராசை பிடித்த அந்த கரடி மறுபடியும் திருடாமல் இருக்க தேனீக்கள் அதற்கு ஒரு பாடம் புகட்ட விரும்பின.

அந்த அளவு தேனை சேகரிக்க தேனீக்கள் அரும்பாடு பட்டுள்ளன. தங்களுடைய கடுமையான உழைப்பின் பலனை கரடி அனுபவிக்க எண்ணியதை தேனீக்கள் விரும்பவில்லை. தேனீக்களுக்கு கரடி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்தன.

தேனீக்களிடம் பயந்து போன அந்த கரடிக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. காட்டுக்கு நடுவில் வேகமாக ஓடி ஆற்றுக்கு அருகில் கரடி வந்து சேர்ந்தது. ஓடி வந்த கரடி குளிர்ந்த நீருக்குள் குதித்தது. தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட எரிச்சலை குளிர்ந்த நீர் தணித்தது. நீருக்குள் கரடி நீண்ட நேரம் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டது. பொறுமை இழந்து தேனீகள் தம் கூட்டை நோக்கி திரும்பும் வரையில் தண்ணீருக்கடியிலேயே கரடி காத்திருந்தது.

உடலில் பட்ட காயத்தால் வருந்திய கரடி தண்ணீரை விட்டு வெளியேறி தன் இடத்திற்கு சென்றது. இனிமேல் தேன் கூட்டு பக்கம் போவதில்லை என்று தீர்மானித்தது. இனிப்பான தேனை நினைத்தாலே கசப்பான இந்த அனுபவம் தான் அதன் நினைவுக்கு வரும்.

 நீதி : ஆசை வெறியினால் அழிவு உறுதி.




Leave a Comment