பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும் | Greed destroys peace of mind | kids bedtime stories tamil

பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும் | Greed destroys peace of mind | kids bedtime stories tamil

ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது. என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான். 

ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது ஓர் அரசமரத்தின் பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.

விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல். 

kids bedtime stories tamil

விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது. 

ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான். 

அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.

 இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான். இவ்வாறே தொடர்ந்து செய்து வந்தான். ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான். 

விறகு வெட்டி சொன்னதைக் கேட்ட அவன், “நண்பரே, காட்டில் உள்ள அரசமரத்தினடியில் இருந்து தானே அந்த ஜாடியை நீ எடுத்து வந்தாய்?” என்று கேட்டான். அட, ஆமாம் உனக்கு எப்படி இது தெரியும்? என்று நண்பனைப் பார்த்துக் கேட்டான் விறகு வெட்டி. 

அதற்கு அவன், “நானும் இந்த ஏழு ஜாடி தங்கத்திற்கு ஆசைப்பட்டு என் மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டவன் தான் என்றான்.” அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக்கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான், விறகு வெட்டியின் நண்பன். 

விறகு வெட்டியும் மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.

நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக்கொண்டு வாழப் பழக வேண்டும்.
Leave a Comment