பேராசை பேரிழப்பு | Greed is a disaster | online tamil stories

பேராசை பேரிழப்பு | Greed is a disaster | online tamil stories

முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு மிக வயதாகி விட்டது, முன்னை போல் ஓநாயால் வேகமாக ஓட முடியவில்லை. ‘என்னால் இறையை வேட்டையாடி பிடிக்க முடியவில்லை இறையைப் பிடிக்க எளிய வழி ஒன்றை நான் கண்டுபிடிக்க வேண்டும்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. ஆனாலும் அதற்கு எந்த யோசனையும் தோன்றவில்லை.

தன் இருப்பிடத்தை விட்டு ஓநாய் ஒருநாள் வெளியே வந்தது. காட்டின் எல்லை வரை நடந்தது. தொலைவில் ஒரு செம்மறி ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தது. சத்தம் செய்யாமல் மிக மெதுவாக அவற்றை நெருங்கியது. அருகில் இருந்த ஒரு பெரிய கிணற்றுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.

‘இங்கிருந்து நிச்சயமாக ஓர் ஆட்டை பிடிக்க முடியும்,’ என்று எண்ணிக்கொண்டது. பொறுமையாக காத்திருந்தது; அவை அருகில் வந்த போது திடீரென்று பாய்ந்து ஒரு ஆட்டை பிடித்துக் கொன்று தின்றது.

ஆட்டின் தோல் மட்டும் கீழே கிடந்தது. ‘நல்ல யோசனை எனக்குத் தோன்றியுள்ளது; மறுபடியும் நான் பட்டினி கிடக்க வேண்டாம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

online tamil stories

அந்த ஆட்டுத் தோலுக்குள் ஓநாய் புகுந்து கொண்டது. ஆட்டு மந்தையில் இப்போது அது சேர்ந்து கொண்டது. “ஓ!அந்த ஓநாயிடமிருந்து நீ தப்பித்து விட்டாயா? நீ இறந்து விட்டாய் என்று நாங்கள் நினைத்தோம்” என்று ஓர் ஆடு சொல்லிற்று. அவை ஆட்டு தோல் போர்த்திய ஓநாயை தம்மந்தையை சேர்ந்த ஓர் ஆடு என்றே நினைத்துக் கொண்டன. தலையை ஆட்டியவாறு ஆட்டு தோல் போர்த்திய ஓநாய் தனக்குள் சிரித்துக் கொண்டது. 

மாலையில் அவற்றோடு ஓநாயும் ஆடுகளை அடைக்கும் பட்டிக்குச் சென்றது. ஆட்டு தோலால் மூடப்பட்ட ஓநாய் ஆடு போலவே தோற்றமளித்தது. அதனால்  ஆட்டு இடையனுக்கும், ஆடுகளுக்கும் நடுவில் ஓநாய் இருப்பது தெரியவில்லை.

நாட்கள் சென்றன. ஒவ்வொரு நாளும் ஓர் ஆடு காணாமல் போவதை இடையன் கவனித்தான். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஆடுகள் எப்படி காணாமல் போகின்றன?” என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ‘நான் மிக எச்சரிக்கையாக தான் அவற்றை கவனித்துக் கொள்கிறேன்’ என்று எண்ணி வருந்தினான். ஆனால் அவனுக்கு காரணம் தெரியவில்லை. இப்படி இருக்கையில் தினமும் இரவில் அவை தூங்கும் போது ஒவ்வொரு செம்மறி ஆடாக இந்த ஓநாய் கொன்று தின்று நன்றாக கொழுத்து இருந்தது.

ஒரு நாள் இடையன் பட்டிக்கு வந்தான். அவனுடைய உறவினர்கள் வெகு தொலைவில் இருந்து அங்கு வர போவதாக அவனுக்கு செய்தி வந்திருந்தது. அவர்களுக்கு விருந்து படைக்க எண்ணினான். பட்டியை சுற்றிப் பார்த்தான் மூலையில் இருந்த நல்ல கொழுத்த ஆடு அவன் கண்களில் தென்பட்டது. அதை கொண்டு நல்ல விருந்து படைக்கலாம் என்று அவன் தீர்மானித்தான்.  வெட்டும் இடத்திற்கு அதை கொண்டு போன இடையன் அது ஆடு அன்று குண்டு ஓநாய் என்பதை தெரிந்து கொண்டான். 

அவன் மிகவும் வியப்படைந்தான். தினம் இரவில் எவ்வாறு ஒவ்வொரு ஆடாக காணாமல் போகிறது என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. அதற்கு தக்க தண்டனையை கொடுக்க விரும்பினான். அந்த கொடிய ஓநாயை ஆட்டிடையன் கொன்று விட்டான்.

 நீதி : வேடம் கலைந்தால் வேதனை உறுதி.
Leave a Comment