முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார் | God will not help for those who don’t try | kids bedtime stories tamil 

முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார் | God will not help for those who don’t try | kids bedtime stories tamil 

பூஞ்சோலை என்பது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்தில் எங்குப் பார்த்தாலும் ‘பச்சைப் பசேல்’ என்று பயிர்கள் வளர்ந்து, காண்போர் கண்களுக்கு விருந்தளித்தன . அவ்வூரில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.

அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும் முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார், என்றே எண்ணுவான் . தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.

அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான். கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.

மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். சேற்றில் சிக்கிக்கொண்ட வண்டியின் சக்கரங்களையும், மாடுகளையும் எப்படி மீட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .

kids bedtime stories tamil 

உடனே அவன் “கடவுளே …. என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான். உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன். முதலில் உனது தோள் வலிமையால் சேற்றில் சிக்கிய சக்கரங்களை வெளியே எடுக்க முயற்சி செய். பிறகு மாடுகளை அதட்டி ஒட்டு. இந்த வேலைகளெல்லாம் உன்னால் செய்ய முடிந்தவைகள் தாம். அதற்குப் பின் என்னை உதவிக்கு அழை. நான் வருவேன். முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.

உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான். 

கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார். 

நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற, நம்மாலான முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.
Leave a Comment