ஏமாற்றாதே ஏமாறாதே | Don’t cheat and don’t be fooled | Tamil stories for childrens

ஏமாற்றாதே ஏமாறாதே | Tamil stories for childrens

ஒரு காலத்தில் காட்டில் ஓர் ஓநாய் இருந்தது. மிகவும் வயதாகி விட்டதால் இறையைத் தேட அதற்கு உடலில் வலுவில்லை. நாட்கள் செல்ல செல்ல மிகவும் பலவீனமாக போனதால் நகர்வதற்கு கூட அதற்கு சக்தி இல்லை. காட்டுக்கு நடுவே செல்லும் பாதையில் அது பசித்தவாறு படுத்து கிடந்தது.

ஓநாய் படுத்தவாறு, “நான் விரைவாக இறையை தேடாவிட்டால் நிச்சயமாக இறந்து விடுவேன்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக ஒரு கொழுத்த வெள்ளாடு வந்தது. அதனிடம் ஓநாய், “தயவு செய்து எனக்கு உதவி செய். உடலில் வலுவில்லாததால் நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன் குடிப்பதற்கு சிறிது தண்ணீர் கொடுக்கிறாயா?” என்று கேட்டது.

வெள்ளாட்டுக்கு ஓநாயை பார்க்க பாவமாக இருந்தது. உதவி புரிய அதன் அருகில் சென்றது. தனக்கு அருகில் வெள்ளாடு வந்தவுடன் தன்னிடம் இருந்த சக்தியெல்லாம் ஒன்று திரட்டிய ஓநாய் அதன் மீது பாய்ந்து அதை கொல்ல முயன்றது.

ஆனால் வெள்ளாடு வலிமை உள்ள மிருகம், ஓநாயை உதைத்தும் தள்ளியும் கொம்புகளால் முட்டியும் தடுத்துவிட்டு, அதனிடமிருந்து தப்பித்துக் கொண்டது.

பின்னர் கோபத்துடன், “தந்திரமாக ஏமாற்றி என்னை கொல்ல நினைத்தாயா? நீ ரொம்ப பலவீனமாக இருப்பதால் அதைக் கூட உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஏ, வஞ்சக ஓநாயே! இங்கேயே கிடந்து பசி தாங்காமல் நீ இறந்து போ,” என்று ஓநாயிடம் கத்திவிட்டு வெள்ளாடு அங்கிருந்து ஓடி விட்டது.

Tamil stories for childrens

ஓநாய் அங்கேயே கிடந்த போது ஒரு செம்மறியாடு அந்த பாதை வழியாக வந்தது. செம்மறியாடு வருவதை பார்த்த ஓநாய், ‘இந்த செம்மறி ஆடு நிச்சயமாக வெள்ளாட்டை போல் வலிமையாக இருக்காது. வஞ்சகமாக அதை என் அருகில் நான் வரவழைத்தால் என்னால் அதை கண்டிப்பாக கொல்ல முடியும்’ என்று நினைத்துக் கொண்டது.

செம்மறியாடு வெள்ளாடு போல் வலிமையானது இல்லைதான். ஆனால், இது மிகவும் புத்திசாலி. தந்திரம் செய்து வெள்ளாட்டை ஓநாய் ஏமாற்ற முயன்றதை செம்மறி ஆடு பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறது. வெள்ளாட்டை ஓநாயால் கொல்ல முடியாமல் போனதை கண்டு அது மகிழ்ச்சி அடைந்தது.

செம்மறியாடு நெருங்கியதும் ஓநாய் அதை கூப்பிட்டது. “தயவுசெய்து எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு. நான் மிகவும் களைப்பாகவும் பலவீனமாகவும் இருக்கிறேன். நீ எனக்கு உதவவில்லை என்றால் நான் கண்டிப்பாக இறந்து விடுவேன்” என்று அதனிடம் கெஞ்சியது.

அதைக் கேட்ட செம்மறியாடு ஓநாயை பார்த்து கூறியது, “வஞ்சக ஓநாயே! வெள்ளாட்டை நீ என்ன செய்ய முயன்றாய் என்பதை நான் பார்த்துக் கொண்டுதானே இருந்தேன். நான் இன்னும் சற்று அருகில் வந்தாலும் நீ என் மீது பாய்ந்து கொன்று விடுவாய் என்பது எனக்கு தெரியுமே! பசியால் துடித்து நீ இறப்பதே சிறந்தது. அதனால், உனக்கு நான் கண்டிப்பாக உதவ போவதில்லை,” என்று சொல்லியவாறு அந்த புத்திசாலி செம்மறியாடு ஓநாயை அது கிடக்கும் இடத்திலேயே விட்டுவிட்டுச் சென்றது.
Leave a Comment