மானும் குள்ளநரியும் | Jackal and deer Tamil story in Tamil

மானும் குள்ளநரியும் | Jackal and deer Tamil story in Tamil

ஒரு அடர்ந்த காட்டில் மானும்,குள்ளநரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள் அவர்கள் இருவரும் உணவு தேடி அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டே இருந்தார்கள். வெகு தூரம் நடந்து நடந்து அவர்கள் இருவரும் காட்டைத் தாண்டி ஊருக்குள் வந்து விட்டார்கள்.

அப்போது அங்கே அழகிய பசுமையான வயல்களை கண்டு சந்தோஷம் அடைந்தார்கள். அந்த வயலில் நிறைய நண்டுகள் இருந்தது. அப்போது அந்த குள்ளநரி மானிடம் சொன்னது,”நண்பா நீ சென்று புல் மேய ஆரம்பி, நான் நண்டுகளை பிடிக்க செல்கிறேன்”என்றது.இருவரும் தனித்தனியாக சென்றார்கள்.

அந்த குள்ளநரி நண்டுகளை பிடிக்க ஆரம்பித்தது இந்த மானும் அங்கே புல் மேய தொடங்கியது. மான் நடந்து நடந்து சிறிது தூரம் புல் மேய்ந்து கொண்டே சென்றது. அப்போது வேட்டைக்காரன் ஒருவன் விறித்திருந்த வலையில் இந்த மான் மாட்டிக் கொண்டது. இந்த மான் சத்தமாக கத்த ஆரம்பித்தது,” நண்பா…. நான் வலையில் மாட்டிக் கொண்டேன் என்னை வந்து இதிலிருந்து காப்பாற்று” என்று சத்தமாக கத்தியது.

இதைக் கேட்ட குள்ளநரி,”இது நம் நண்பனின் குரல் ஆச்சே அவனுக்கு என்ன ஆயிற்று?” என்று மானை நோக்கி ஓடி வந்தது. அப்போது மான் அந்த வலையில் மாட்டியிருப்பதை பார்த்த குள்ளநரி மனதில் எண்ணியது,”இந்த மான் வலைக்குள் மாட்டியுள்ளதை பார்த்தால் கண்டிப்பாக இந்த வலையை விரித்த வேட்டைகாரனும் அருகில் எங்கேயாவது தான் இருக்க வேண்டும். எனவே நான் எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும், என்னால் மானை காப்பாற்ற முடியாது” என்று மனதில் எண்ணியது.

மான் குள்ளநரியிடம்,” நண்பா நீ எப்படியாவது இந்த வலையை கடித்து கிழித்து என்னை இதிலிருந்து காப்பாற்று” என்று கேட்டது. ஆனால் குள்ளநரி சொன்னது,”நண்பா நான் நண்டுகளை சாப்பிட்டு எனது பல் மிகவும் வலியாக இருக்கிறது, என்னால் கண்டிப்பாக உன்னை இதிலிருந்து காப்பாற்ற முடியாது” என்று சொல்லிக்கொண்டு தூரமாக ஓடியது.

இதை பார்த்த மான் மிகவும் அதிர்ச்சி அடைந்தது இப்படிப்பட்ட ஒருவனையா நான் நெருங்கிய நண்பன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். என்னை இப்படி ஏமாற்றி விட்டானே. ஒரு ஆபத்திலிருந்து கூட அவனால் என்னை காப்பாற்ற முடியவில்லை என்று எண்ணி வருந்தியது. மான் வேட்டைக்காரன் வருவதைப் பார்த்து மனதில் எண்ணியது,” கண்டிப்பாக இந்த வேட்டைக்காரன் என்னை கொன்று விடப் போகிறான்” என்று பயந்தது.

எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று மான் எண்ணியது எனவே வலையில் இருந்த மான் செத்தது போல் நடித்தது. வேட்டைக்காரன் கையில் கம்பை எடுத்துக்கொண்டு வந்தான். அருகில் வந்த போது மான் கிடப்பதை பார்த்து அவன் எண்ணினான்,” இந்த மான் செத்துவிட்டது அதனால் இனி இதைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லி கையில் இருந்த தடியை கீழே போட்டான்.

tamil stories in tamil
hunter and deer tamil story

தடியை போட்டுக் கொண்டு வலையை எடுத்தான் வலையை எடுத்த உடனே மான்  அங்கிருந்து தப்பித்து ஓடியது. இதை அனைத்தும் குள்ளநரி மரத்தின் பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டே இருந்தது. மான் குள்ளநரி இருந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தது. இந்த வேட்டைக்காரனும் மானை பின்னால் விரட்டிக் கொண்டே வந்தான். சிறிது தூரம் ஓடிய பின் வேட்டைக்காரன் கையில் இருந்த தடியை இந்த மானை நோக்கி வீசினான். 

ஆனால் குள்ளநரி திடீரென்று அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போது அந்த தடி நரி மீது பட்டு குள்ளநரி கீழே விழுந்தது. உடனே வேட்டைக்காரன் வந்து அந்த குள்ள நரியை கயிறு கட்டி கொண்டு சென்றான். மான் அங்கிருந்து தப்பித்து உயிர் பிழைத்தது.

 நீதி: யாரையும் எளிதாக நம்ப வேண்டாம்




Leave a Comment