மகாராஜாவின் ஏழை சகோதரர் | Poor brother of King | Tamil Interesting Story
பிரித்திவிராஜ் மகாராஜா தர்ம குணமும் இரக்க குணமும் உள்ளவர். பண்டிதர்களுக்கும், புத்திசாலிகளுக்கும் அவருடைய சபையில் எப்போதும் தனி மரியாதை உண்டு.
ஒரு நாள் ஒரு வயதான பிச்சைக்காரர் அவருடைய அரசவையை தேடி வந்தார். “எங்கே போகிறாய் அங்கேயே நில்” என்று சிப்பாய்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த பிச்சைக்காரர் சொன்னார், “அப்படி எல்லாம் என்னிடம் பேசாதீர்கள், நான்தான் மகாராஜாவின் சகோதரன்” என்றார்.
“என்ன நீ மகாராஜா உடைய சகோதரனா? மகாராஜாவிற்கு சகோதரர் யாருமில்லை. கோட்டைக்குள் வந்து உன்னை பிச்சை எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என்றார்கள் அந்த சிப்பாய்கள்.
அப்போது அந்த பிச்சைக்காரர் சொன்னார், “இல்லை நான் பொய் சொல்லவில்லை. உங்களுடைய மகாராஜாவிடம் உங்கள் சகோதரர் வந்திருக்கிறார் என்று கூறுங்கள்” என்றார்.
அவரது சிப்பாய்கள் மகாராஜாவிடம் சென்று “மகாராஜா நம் கோட்டைக்கு ஒரு பிச்சைகாரர் வந்திருக்கிறார். அவர் உங்களுடைய சகோதரர், உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்” என்று சொன்னார்கள்.
மகாராஜாவும் “சரி, அவரை உள்ளே வரச் சொல்” என்றார். சிப்பாய்கள் அவரிடம், “சரி மகாராஜா உன்னை சந்திக்க வேண்டுமாம் உள்ளே செல்” என்றார். அந்த மகாராஜா பிச்சைக்காரரிடம், “வணக்கம் என்னுடைய சகோதரர் பிச்சைக்காரரே எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டார்.
அப்போது அந்த பிச்சைக்காரர், மகாராஜாவிடம் “மகாராஜா நான் எந்த நல்ல செய்தியுடன் வரவில்லை. என்னிடம் முப்பத்தி இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர் இப்போது அவர்கள் எல்லாம் சென்று விட்டனர். எனக்கு ஐந்து மகாராணிகள் இருந்தனர், அவர்களும் வயதானதால் சென்றுவிட்டனர்” என்றார்.
அப்போது மகாராஜா, “இவருக்கு ஐம்பது பொற்காசுகளை கொடுத்து அனுப்புங்கள்” என்றார். அதற்கு அந்த பிச்சைக்காரர், “ஐம்பது பொற்காசுகள் தானா.. அது எனக்கு பத்தாது” என்றார்.
அதற்கு மகாராஜா, “இங்கே பாருங்கள் பிச்சைக்கார சகோதரரே எங்கள் ராஜ்யத்தில் இப்போது போதுமான செல்வம் இல்லை. எனவே வேண்டும் என்றால் இந்த ஐம்பது பொற்காசுகளை எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.
அதற்கு அந்த பிச்சைக்காரர் சொன்னார், “அப்படி என்றால் நீங்கள் என் கூட வரலாமே. ஏழு கடல் தாண்டினால் தங்க மணல் கொட்டிக் கிடக்கிற இடம் ஒன்று உள்ளது. அந்த தங்க மணலை நீங்க எடுத்திட்டு வந்து உங்க சொத்தா வச்சுக்கலாம்” என்றார்.
“ஆனா ஏழு கடல் தாண்டி நான் எப்படி வருவது சொல்லுங்க” அப்படிக் கேட்டார் மகாராஜா. அதற்கு அவர் சொன்னார், “நீங்க என் கால்ல இருக்க மாயாஜாலத்தை பாருங்க. நான் எங்கே கால் வைத்தாலும் சரி, அது கடலாக கூட இருந்தாலும் அந்த இடம் வற்றி போய்விடும்”.
உடனே மகாராஜா மந்திரியாரிடம், “மந்திரியாரே அவருக்கு ஐந்நூறு பொற்காசுகளை எடுத்துக் கொடுங்கள்” என்றார். மந்திரியார் மகாராஜாவிடம் “மகாராஜா நீங்க சொல்றது எனக்கு எதுவும் புரியல. எதுக்காக இப்போ அவருக்கு ஐந்நூறு பொற்காசுகள் கொடுக்க சொன்னீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு மகாராஜா சொன்னார், “பிச்சைக்காரர் புத்திசாலிதான். ஆனால் பாவம் துரதிர்ஷ்டசாலி கூட. பொற்காசுக்கு இரண்டு பக்கம் உள்ளது ஒரு பக்கம் ராஜா இன்னொரு பக்கம் பிச்சைக்காரர். ஒரு நாள் நீ மகாராஜாவாக இருக்கலாம் ஆனால் இன்னொரு நாள் பிச்சைக்காரராக கூட மாறி விடலாம்.
அவருடைய குரலை கேட்டாலே அவருடைய நிலைமை புரிகிறது. அவர் சொன்ன முப்பத்திரண்டு வேலைக்காரர்கள் அவருடைய பற்கள் தான். அவர் சொன்ன ஐந்து மனைவிகள் அவருடைய ஐந்து புலன்கள். அவர் எந்தக் கடலில் கால் வைத்தாலும் அந்த கடல் வற்றி போகும் என்று சொன்னாரே. அதே போல தான் நம்ம ராஜ்யத்தில் கால் வைத்தார் நம்முடைய செல்வமும் வற்றிப் போய்விட்டது”. இதை கேட்ட மந்திரி மகாராஜாவின் பதிலை கேட்டு ஆச்சரியப்பட்டார்.
நீதி : ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்வது அவனுடைய கடைசி நாட்களில் பயன்படும்.