பேசும் குகை | சிறுவர் கதைகள் | Speaking Cave | Moral Stories In Tamil

பேசும் குகை | சிறுவர் கதைகள் | Speaking Cave | Moral Stories In Tamil

வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.

உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது. 

மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.

“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.

நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.

“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.

அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.

நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.Leave a Comment