மந்திர மரம் | தமிழ் கதைகள் | Magical Tree | Story In Tamil

மந்திர மரம் | தமிழ் கதைகள் | Magical Tree | Story In Tamil

ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விறகு வெட்டி சந்தையில் விற்று வந்தனர். அண்ணன்காரன் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தான். ஆனால் தம்பிக்காரன் அண்ணன் சொல்வதை எல்லாம் கேட்டு அதன்படி கீழ்ப்படிந்து நடந்தான்.

ஒருநாள் அண்ணன்காரன் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றான். வரிசையில் விறகுகளை வெட்டி வரும்போது அங்கே ஒரு மந்திர மரம் இருந்தது. அது மந்திர மரம் என்று தெரியாமல் அவன் அதன் மேல் ஏறி அதன் கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். அப்போது அந்த மரம் தன் கிளைகளை வேகமாக அசைத்தது. 

அதில் அவன் மேலே இருந்து கீழே விழுந்தான். அதை பொருட்படுத்தாமல் அவன் மீண்டும் மரத்தின் மேல் ஏறி அந்த கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். அப்போது அந்த மரம் அவனிடம் பேசியது, “ஐயா தயவு செய்து என் கிளைகளை வெட்டாதீர், அதற்கு பதிலாக நான் உங்களுக்கு தங்க மாம்பழம் தருகிறேன்” என்றது.

அண்ணன்காரன் தங்க மாம்பழமா! என்று ஆச்சரியத்துடன் அந்த மரம் சொன்னதற்கு சம்மதித்தான். அந்த மரமும் அவனுக்கு சில தங்க மாம்பழங்களை கொடுத்தது. அவன் அதை பார்த்து கோபத்துடன் “எனக்கு இன்னும் நிறைய மாம்பழங்கள் வேண்டும், இல்லை என்றால் உன் கிளைகளை நான் வெட்டி தங்க மாம்பழத்தை எடுத்துக் கொள்வேன்” என்றான். அந்த மரம் அவரிடம் சொன்னது “எனக்கு நிறைய மந்திர சக்திகள் இருக்கின்றது, என்னிடம் நீ இப்படி பேசினாய் என்றால் உன்னை நான் தண்டிப்பேன்” என்றது.

அந்த மரம் கோபத்தில் தன் வேர்களை எல்லாம் சேர்த்து அவனை மரத்தோடு கட்டிப்போட்டது. அவனால் அதிலிருந்து அசையவே முடியவில்லை. சூரியனும் மறைய ஆரம்பித்தது, அண்ணன்காரன் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மரத்திடம் தான் செய்தது அனைத்தும் தவறு தான் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினான்.

அதற்கு அந்த மரம், “நானும் என் கிளைகளை வெட்ட வேண்டாம் என்று கெஞ்சினேன் நீ என்னை விட்டாயா” என்று கேட்டது.  இவ்வளவு நேரமாகியும் அண்ணனை காணவில்லையே என்ற பயத்தில் தம்பி அண்ணனை தேடி காட்டுக்குள் சென்றான்.

அண்ணன் மரத்தில் வேர்களால் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து தம்பி மிகவும் ஆச்சரியப்பட்டான். அண்ணனை அதில் இருந்து விடுவிக்க ரொம்ப முயற்சி பண்ணினான். அப்போது அண்ணன் சொன்னான், “நான் மிகவும் பெரிய தவறு பண்ணிட்டேன் இந்த மரம் கிட்ட ரொம்ப முரட்டு தனமா நடந்துகிட்டேன், அதனால இந்த மரம் என்னை சும்மா விடாது. அது மட்டும் இல்ல உன்னையும் நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்.” என்று அவன் தன் தம்பியிடம் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டான்.

 தம்பி அந்த மரத்திடம் தன் அண்ணன் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டி தன் அண்ணனை விடுவிக்குமாறு கெஞ்சினான். அந்த மரமும் அண்ணன் தான் செய்த தவறை உணர்ந்து மனம் மாறியதற்காக அவனை விடுவிக்க சம்மதித்தது. அந்த மரம் அவர்களுக்குத் தேவையான தங்கம் மாம்பழத்தை அளித்தது. அதன் பிறகு அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தனர்.



Leave a Comment