உயிர் காப்பான் தோழன் | தமிழ் கதைகள் | Lifeguard Friend | Siruvar Kathaigal

உயிர் காப்பான் தோழன் | தமிழ் கதைகள் | Lifeguard Friend | Siruvar Kathaigal

ஒரு பெரிய ஏரிக்கரை பக்கத்தில் ஒரு காக்கை, ஆமை, மான், எலி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவை தினமும் காலையில் ஒரு மரத்தின் அடியில் சந்தித்தனர். ஒரு நாள் மாலை மான் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு வரவில்லை. மற்ற மூவரும் வெகு நேரம் காத்திருந்தனர். மானுக்கு என்னவாயிருக்கும்.? என்று கவலைப்பட்டனர். 

“ஒருவேளை வேடனின் வலையில் சிக்கி இருக்குமோ” என்று ஆமை சந்தேகப்பட்டது. “நான் உடனே சென்று பார்க்கிறேன்” என்று காக்கை பறந்தது. காக்கை காட்டுக்குள் வெகுதூரம் பறந்து சென்றது. அப்போது மான் ஒரு வலையில் மாட்டியிருப்பதை கண்டது.

Crow

காக்கை உடனே மற்ற நண்பர்களிடம் சென்று மான் வேடனின் வலையில் மாட்டி இருப்பதாக சொன்னது. சிறிது நேரம் யோசித்த பிறகு, ஆமை எலியிடம் கேட்டது” உன் கூர்மையான பற்களால் அந்த வலையை உன்னால்  கடிக்க முடியுமா?”. அதற்கு எலி, “நிச்சயமாக என்னால் முடியும். ஆனால் நான் எப்படி அந்த இடத்திற்கு செல்வது” என்று குழப்பத்துடன் கேட்டது.

 “சீக்கிரம் என் முதுகின் மேல் ஏறி உட்கார் “என்று காக்கை சொன்னது. உடனே எலி காக்கையின் முதுகில் ஏறி உட்கார்ந்தது. அவர்கள் தங்களுடைய அன்பு தோழனை காப்பாற்ற சென்றனர்.

அந்த இடத்திற்கு சென்ற பிறகு எலி தன்னுடைய கூர்மையான பற்களால் வலையைக் கடித்து கிழித்தது. மானும் வலையிலிருந்து தப்பித்தது. ஆமையும் மெதுவாக அந்த இடத்திற்கு வந்தது. நான்கு நண்பர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். அப்போது வேடன் அங்கே வந்தான். 

நான்கு நண்பர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். மான் தன்னுடைய வலையிலிருந்து தப்பியதை பார்த்த வேடன் மிகவும் கோவப்பட்டான். வேடன் அங்கே வந்ததை பார்த்த காக்கை மரத்தின் மீது பறந்து சென்றது. மானும் ஓடி ஒரு புதருக்குள் மறைந்தது.

எலி ஒரு பொந்துக்குள் நுழைந்தது. ஆமை மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அந்த வேடனின் கோபமான கண்கள் ஆமையின் மேல் விழுந்தது. அந்த ஆமையை அவன் பிடித்து தன் பைக்குள் போட்டான்.

 இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூன்று நண்பர்களும் எப்படியாவது ஆமையை காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டனர். அப்போது மான் தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாகக் கூறியது, “வேடன் வரும் வழியில் நான் புல் தின்பதுபோல் நின்று கொண்டிருப்பேன் அப்போது வேடன் தன் பையை கீழே வைத்துக்கொண்டு என்னைப் பிடிக்க வருவான்.

அந்த நேரத்தில் எலி வந்து தன்னுடைய கூர்மையான பற்களால் அந்த பையை கிழித்து ஆமையை காப்பாற்றவேண்டும். என்னை வேடன் பிடிக்க வரும்போது நான் வேகமாக ஓடி செல்வேன்” என்று திட்டமிட்டனர். 

திட்டமிட்டபடியே மான் குறுக்கே வந்து புல் தின்று கொண்டு இருந்தது. வேடன் மானைப் பிடிக்க தன் பையை கீழே வைத்துக் கொண்டு சென்றான். எலி தன் பற்களால் பையை கிழித்து ஆமையை காப்பாற்றியது. மானும் தப்பித்து ஓடியது. வேடனுக்கு அன்றைக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அவன் மிகவும் சோகமாக தன் வீட்டிற்குத் திரும்பினான்.நண்பர்கள் நால்வரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 

நீதி : உயிர் காப்பான் தோழன்.



Leave a Comment