தங்க எச்சமிடும் பறவை | தமிழ் கதைகள் | The Golden Residual Bird | tamil story books
வெகுகாலத்திற்கு முன்பு மலை அடிவாரத்தில், ஒரு பெரிய மரத்தில் அழகான பறவை ஒன்று வசித்து வந்தது. அது அதிசயமான ஒரு பறவை. அதன் உடலில் இருந்து வெளியேறும் ஏச்சம் நிலத்தில் விழுந்தால் அது தங்கமாக மாறிவிடும்.
ஒரு நாள் வேடன் ஒருவன் அந்த பறவை வசித்து இருந்த மரத்தின் அடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்திருந்தான். அங்கு நிலத்தில் கிடந்த தங்கை எச்சத்தை கண்டு ஆச்சரியப்பட்டான். மேலே மரத்தில் பார்த்தான், அங்கே அந்தப் பறவை இருப்பதை கண்டான். உடனே அவனுக்கு புரிந்தது இந்த பறவையின் எச்சம் தான் நிலத்தில் விழுந்ததும் தங்கமாக மாறுகிறது என்று.
நேரத்தை வீணாக்காமல் அந்த பறவையை பிடித்து கூண்டிற்குள் அடைத்தான். வீட்டுக்குத் திரும்பும்போது “இந்தப் பறவை என் கையில் இருப்பது அபாயம் போல் இருக்கிறது” என்று அவன் எண்ணினான்.
விலை உயர்ந்த அந்தப் பறவை தன்னிடம் இருப்பது அரசருக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். எனவே மறுநாள் வேடன் அந்த பறவையை கொண்டு அரசனுக்கு பரிசாகக் கொடுத்தான். அந்தப் பறவையின் விசேஷ குணத்தையும் அரசருக்கு எடுத்துரைத்தான் அவன்.
வேடனின் இந்த நல்ல குணத்திற்காக அரசன் அவனுக்கு கை நிறைய பரிசுகள் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரிகள் அரசரிடம், “அரசே! ஒரு முட்டாள் வேடன் கூறுவதை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள். நம் நாட்டில் இதுவரை ஏதாவது பறவை தங்க எச்சம் இட்டுள்ளதா” என்று கேட்டார்கள்.
உடனே அரசன் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதாக எண்ணி அந்த பறவையை கூண்டில் இருந்து வெளியே திறந்து விட்டார். வெளியே வந்த பறவை ஒரு கதவின் மீது ஏறி உட்கார்ந்து எச்சம் போட்டது. அந்த எச்சம் தரையில் விழுந்ததும், அது தங்கமாக மாறியது. அதை பார்த்த அரசனும் மந்திரிகளும் திகைத்துப்போயினர். அந்தப் பறவை அங்கு இருந்து பறந்து சென்றது.
அப்போது அது யோசித்தது, “ஒரு வேடன் பிடிக்கும் அளவுக்கு நான் முட்டாளாக இருந்துள்ளேன். என்னை அரசனிடம் கொண்டு ஒப்படைத்த வேடனும் ஒரு பெரிய முட்டாள், என்னை கூண்டிலிருந்து வெளியே திறந்துவிட்ட அரசனும் மந்திரிகளும் அதற்குமேல் முட்டாள்கள்” என்று எண்ணியபடி பறந்து சென்றது.
நீதி :சில நேரங்களில் பெரிய புத்திசாலியும் கூட முட்டாள் ஆகின்றார்கள்.