சிங்கத்தை ஏமாற்றிய தந்திர நரி | தமிழ் கதைகள் | The Cunning Fox Who Deceived The Lion | Tamil Neethi Kathaigal
முன்னொரு காலத்தில் காட்டில் ஒரு வயதான சிங்கம் இருந்தது. வயதானதால் தனக்கு உதவியாக ஒரு மிருகத்தை வைத்துக்கொள்ள எண்ணியது. வயதான சிங்க ராஜா தன்னுடைய மந்திரி பதவியை ஒரு நரிக்கு கொடுத்தது.
நரிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் காட்டின் ராஜா கொடுத்த பதவியை மறுக்க முடியவில்லை. மந்திரியின் பொறுப்பு என்னவென்று சிங்கம் நரிக்கு சொல்லிக்கொடுத்தது. “வயதானதால் என்னால் இரையைத் தேடி அலைய முடியாது எனவே நீ தினமும் எனக்கு இறையை கொண்டு வரவேண்டும்” என்று கூறியது.

வேறு வழி இல்லாமல் நரி காட்டுக்குள் சென்று இறையைத் தேடி அலைந்தது. அப்போது அங்கு ஒரு கழுதையை கண்டவுடன் நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. “காட்டின் ராஜாவாகிய சிங்கத்திடம் ஒரு மந்திரி பதவி இருக்கிறது அது உனக்கு வாங்கித் தருகிறேன்” என்று கூறி அந்த கழுதையை சிங்கத்திடம் அழைத்துச் சென்றது அந்த நரி.
மிகவும் பசியுடன் இருந்த அந்த சிங்கம் கழுதையை கண்டவுடன் கர்ஜித்துக்கொண்டு அந்த கழுதையின் மேல் பாய்ந்து அதைக் கொன்றது. “என்னுடைய புத்திசாலித்தனத்தினால் இந்தக் கழுதையை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக கொண்டு வந்தேன், எனவே இதில் நல்ல ஒரு பங்கு எனக்கு சாப்பிட கிடைக்க வேண்டும்” என்று நரி எண்ணியது.

சிங்கம் சாப்பிட உட்கார்ந்ததும் நரி ஒரு யோசனை சொன்னது, “ராஜா நீங்க மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் எனவே உணவு அருந்துவதற்கு முன்பு குளிப்பது நல்லது அல்லவா” என்று யோசனை சொன்னது. சிங்கமும் அதற்கு சரி என்று சொல்லி குளிக்க சென்றது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நரி கழுதையின் மூளையை தின்றது.
குளித்து முடித்த சிங்கம் வந்து கழுதையை சாப்பிட உட்கார்ந்தது. அப்போது கழுதையின் மூளையை காணாததால் அதைப்பற்றி நரியிடம் கேட்டது. புத்திசாலியான நரி “ஹா ஹா ஹா, கழுதைக்கு மூளை இருந்திருந்தால், அது சிங்கத்திடம் மந்திரி பதவி இருக்கிறது, என்று நான் சொன்னதை நம்பி இங்கு வந்து இருக்குமா” என்று கேட்டது.