குள்ள நரியும் கொக்கும் | தமிழ் கதைகள் | Fox And Crane | tamil story
ஒருநாள் காட்டில் ஒரு நரி தன் இரையை வேட்டையாடி கொண்டு வந்தது. கழுகுகள் நெருங்கி வருவதை கண்ட நரி, பயத்தில் இ ரையை அப்படியே விழுங்கியது. நரியின் நேரம் சரியில்லாததால் ஒரு எலும்பு அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
அதை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நரி ரொம்பவே கஷ்டப்பட்டது. அதனால் ஒன்றுமே சாப்பிட முடியவில்லை. பேராசைபிடித்த நரிக்கு மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேறு வழி இல்லாமல் நரி, கொக்கின் உதவியை கேட்டு சென்றது.
அந்தக் கொக்கால் எலும்பை வெளியே எடுக்க முடியும் என்று உறுதியாக நரி நம்பியது. ஒருவேளை இது குள்ள நரியின் தந்திரமாக இருக்கும் என்று எண்ணிய கொக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது.
“நான் உனக்கு ஒரு கெடுதலும் செய்யமாட்டேன்” என்று நரி கொக்கிடம் சத்தியம் செய்தது. “அது மட்டுமின்றி இந்த இக்கட்டிலிருந்து என்னை காப்பாற்றினால் அதற்கு தகுந்த கைமாறு செய்வேன்” என்றும் கூறியது.
நரியின் வாய்க்குள் தன் தலையை விட கொக்கு மிகவும் பயந்தது. இருந்தாலும் இரக்க குணம் உள்ளதால் அதற்கு உதவி செய்தது. தொண்டையில் இருந்த எலும்பை எடுத்ததும் குள்ளநரி தன் வழியே போயிற்று. உடனே கொக்கு நரியை கூப்பிட்டு “எனக்கு தருவதாக சொன்ன பரிசுப்பொருள் எங்கே” என்று கேட்டது.
“பரிசா.. அதை தான் ஏற்கனவே தந்து விட்டேனே, உன் தலை என் வாய்க்குள் இருந்த போது அதை கடிக்காமல் அப்படியே விட்டதே மிகப்பெரிய பரிசுதான்” என்று தந்திரசாலியான நரி, கொக்கை கேலி செய்து கொண்டு சென்றது.
நீதி : தீயவர்களிடம் இருந்து நன்றியை எதிர்பார்க்க முடியாது.