புத்திசாலி சிங்கம் | தமிழ் கதைகள் | Clever Lion | Tamil Stories In Tamil

புத்திசாலி சிங்கம் | தமிழ் கதைகள் | Clever Lion | Tamil Stories In Tamil

வெகு நாட்களுக்கு முன் காட்டில் தந்திர குணமுள்ள நரி ஒன்று இருந்தது. அந்த நரி எப்போதும் தன் புத்திசாலித்தனத்தால் கண்ணிமைக்கும் நொடியில், மற்ற விலங்குகளை பிடித்து தனக்கு தானே விருந்து வைத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் நரி காட்டின் ராஜாவாகிய சிங்கத்திடம் சென்றது. சிங்கத்தின் அருகில் சென்று, “ஓ, ராஜாவே என் வாழ்க்கையில் உள்ள மீதி நாட்களை எல்லாம் உங்களுக்கு சேவை செய்தே வாழ நினைக்கிறேன்,  நீங்கள் வேட்டையாட வேண்டிய மிருகங்களை நானே காட்டித் தருவேன்” என்றது.

புத்திசாலியான சிங்கத்திற்கு, நரியின் தந்திரம் புரிந்தது. “வேலை ஒன்றும் செய்யாமல் தான் பிடிக்கும்  இறையின் மீதியை உண்டு வாழலாம் என்று நரி நினைப்பது சிங்கத்துக்கு புரிந்தது”.  குள்ளநரிக்கு ஒரு  பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த சிங்கம், நரியின் இஷ்டத்திற்கு சம்மதித்தது.

அவர்கள் இருவரும் வேட்டையாட காட்டிற்கு சென்றனர். நரி காட்டிக்கொடுத்த மானை சிங்கம் அடித்து வீழ்த்தியது. சிங்கம் உணவை பங்கு வைக்கையில் மூன்று பங்காகப் பிரித்தது.

அதைக் கண்ட நரி ஆச்சரியப்பட்டது உடனே, “ஓ ராஜாவே ஏன் நீங்கள் உணவை மூன்று பங்காக பிரித்துள்ளீர்” என்று கேட்டது. அதற்கு சிங்கம் சிரித்துக்கொண்டே பதில் சொன்னது, “நான் காட்டின் ராஜாவானதால் முதல் பங்கு என்னுடையது, இந்த இரையை பிடித்ததும் நான்தான் அதனால் இரண்டாவது பங்கும் என்னுடையது”. உடனே நரி  மூன்றாவது பங்கு கிடைக்கும் என்று நினைத்தது. 

ஆனால் சிங்கம் சொன்னது “நீ காட்டின் பிரஜை அதனால் நீ இந்த காட்டின் ராஜாவாக எனக்கு வரி செலுத்த வேண்டும், எனவே அதற்கு இந்த மூன்றாவது பங்கும் என்னுடையதாக இருக்கும்” என்று சொன்னது.

சிங்கம் தனக்கு ஒரு பாடம் கற்பித்து விட்டது என்று நரிக்குப் புரிந்தது. எனவே தன்னுடைய உணவை தானே தேட வேண்டும் என்று முடிவெடுத்தது.

நீதி : ஏமாற்றுபவன், அதன் பலனை அனுபவிப்பான்.



Leave a Comment

%d bloggers like this: