உண்மையான நண்பன் | கதைகள் தமிழ் | True friend | Friendship Story Tamil
ஒரு நாட்டின் அரசரிடம் பெரிய யானை ஒன்று இருந்தது. அது எப்ப பார்த்தாலும் சேட்டை பண்ணிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் சேவகர்கள் அந்த யானைக்கு சாப்பாடு கொடுக்கும் போது அந்த யானை அதை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது.
“இந்த யானைக்கு என்னதான் ஆச்சு இன்றைக்கு குளிக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை அழுது கொண்டே இருக்கிறது” என்று சேவகர்கள் தங்களிடையே பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் அரசனிடம் சென்று, “அரசே யானை இன்று குளிக்கவும் இல்லை, சாப்பிடவும் இல்லை எப்போ பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறது. அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்குமோ” என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்று கூறினார்கள்.
உடனே அரசர், அமைச்சரிடம் என்ன பிரச்சனை என்று சென்று பார்க்க கட்டளையிட்டார். அமைச்சரும் யானையுடன் சென்று,” உனக்கு என்ன ஆச்சு ஏன் சோகமாக இருக்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு யானை எந்த பதிலும் கூறாமல் அழுது கொண்டே இருந்தது. அப்போது அமைச்சர் சேவகர்களிடம், “இந்த யானையின் தினசரி வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா” என்று கேட்டார்.அதற்கு சேவகர்கள் அப்படி எல்லாம் இல்லை.
ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டி ஒன்று இந்த யானையிடம் மிகவும் நட்பாக பழகியது. அதை இந்த ஊரில் உள்ள ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த நாய் குட்டியை விலைக்கு கேட்டார், நாங்களும் அவரிடம் அந்த நாய்க்குட்டியை விற்றுவிட்டோம் என்று கூறினார்கள். அமைச்சர் தான் கேட்டவை அனைத்தும் அரசரிடம் சென்று கூறினார்.
அமைச்சர், அரசரிடம் “அந்த நாய்க்குட்டி மீண்டும் திரும்பி வந்தால், இந்த யானை பழையபடி மாறிவிடும்” என்று கூறினார். அப்போது அரசர் அந்த நாய்க்குட்டியை கொண்டு வர கட்டளையிட்டார். சேவகர்கள் ஊர் மக்களிடம் சென்று அரசர் கட்டளை பிறப்பித்துள்ளதை கூறினார்கள்.
“யார் அந்த நாய்க்குட்டியை கொண்டு சென்றார்களோ அவர்கள் இன்றைக்கு அந்த நாய்க்குட்டியை மீண்டும் அரசரிடம் கொண்டு ஒப்படைக்க வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட அந்த நபர் எதற்கு வம்பு என்று அந்த நாய் குட்டியை மீண்டும் கொண்டு அரசவையில் ஒப்படைத்தார். அந்த நாய்க்குட்டியை பார்த்த யானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மீண்டும் அந்த யானையும் நாய்க்குட்டியும் நண்பர்களாகவே இருந்தனர்.
நீதி : நட்பை வாங்கவோ விற்கவோ முடியாது.