37. கத்திரிக்காய் திருட்டு! | தென்னாலிராமன் கதைகள் | brinjal theft! | tenali Raman story
கிருஷ்ண தேவராயரின் அரண்மனைத் தோட்டத்தில் தென் கன்னடத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அபூர்வமான கத்திரிச்செடிகள் பயிரிடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின.
அவற்றைத் திருடுபவர்களுக்குக் கடுமையான மரணதண்டனை விதிக்கப்படுமென்றும் இராயர் அறிவித்திருந்தார்.
ஒருநாள் இராயரின் அரண்மனையில் அவ்வகைக் கத்தரிக்காய்க் குழம்பை அரசருடனிருந்து சாப்பிட்ட தெனாலிராமன் தன் வீட்டிற்கு வந்ததும் அதனுடைய அபூர்வமான ருசியைப் பற்றி நாக்கில் ஜலம் ஊறும்படி மனைவியிடம் வர்ணித்தான்.
அவனுடைய மனைவிக்கு உடனே தானும் அந்த அபூர்வமான கத்திரிக்காய்களைச் சாப்பிடவேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை உண்டாகவே தெனாலிராமன் வேறு வழியின்றி அரண்மனைத் தோட்டத்திற்குள் நடுஇரவில் திருட்டுத்தனமாக உட்புகுந்து கத்திரிக்காய்கள் சிலவற்றைப் பறித்து வந்து இரவோடு இரவாகக் கத்திரிக்காய் குழம்பு வைக்கச் செய்து மனைவியோடு ருசித்துச் சாப்பிட்டான்.
வெளித் திண்ணையில் படுத்துறங்கும் தன் சின்னஞ்சிறு மகனுக்கும் அபூர்வ கத்திரிக்காய்க் குழம்பு கொடுக்க வேண்டுமென்ற ஆவல் தெனாலிராமனின் மனைவிக்கு உண்டாயிற்று.
அந்தப் பாலகனின் வாய் மூலமாக கத்திரிக்காய் திருட்டு வெளியாகிவிடுமோ என்று தெனாலிராமன் தயங்கினாலும் தன் மனைவியின் தாய்ப்பாசத்தைக் தட்ட முடியாமல் ஒரு யுக்தி செய்து கொண்டு வெளித்திண்ணைக்குச் சென்று, அங்கு உறங்கிக் கொண்டிருந்த தன் சிறுவன் மீது ஒரு செம்புத் தண்ணீரை மழைத்துளிகள் போல் பொழியவிட்டு, அவனை எழுப்பி மழை பெய்கிறது என்று கூறி அவனது நனைந்த உடைகளை மாற்றச் செய்தான்.
அதன் பிறகு அவனுடைய மனைவி தான் சமைத்த கத்திரிக்காய் குழம்பை ஊற்றி தன் குமாரனை ருசித்துச் சாப்பிடும்படிச் செய்தாள். மறுநாள் தோட்டத்தில் கத்திரிக்காய்களில் சில திருட்டுப்போன விஷயம் அரண்மனைக்கு எட்டியது.
அதை விசாரிக்கும் போது அமைச்சரான அப்பாஜிக்குத் தெனாலிராமனின் மீது சந்தேகம் உண்டாயிற்று! ஆனால் தந்திரசாலியான தெனாலிராமனை விசாரிப்பதால் பலன் ஏற்படாதென்று அவனுடைய பச்சிளம் பாலகனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
பொய் சொல்லத் தெரியாத அச்சிறுவன் முன்னாளிரவு கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டான். ஆனால் தெனாலிராமன் “என் பையன் நேற்றிரவு தூக்கத்தில் ஏதோ கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டதாகக் கனவு கண்டிருக்கிறான்! என்னிடம் கூட அப்படித்தான் சொன்னான்! நேற்றிரவு மழை பெய்ததா இல்லையா என்று அறிவுமிக்க அமைச்சர் அவனை விசாரித்தால் அச்சிறுவனின் கற்பனை சக்தியும் கனவின்பலனும் தெரிந்துவிடும்!” என்றான்.
அச்சிறுவனிடம் அமைச்சர், “நேற்றிரவு மழை பெய்ததில்லையா?” என்று கேட்டார். அதற்குச் சிறுவன் “ஆமாம் ஆமாம்! மழை பெய்த பிறகு நனைந்துபோன என் உடைகளை மாற்றிக் கொண்டு கத்திரிக்காய் குழம்பு சாப்பிட்டேன்!” என்றான்.
ஆனால் முந்திய இரவில் ஒரு துளி மழைக்கூடப் பெய்யாததால் சிறுவன் கனவுதான் கண்டிருக்கிறான் என்று ஒப்புக்கொண்ட அமைச்சரான அப்பாஜி தெனாலிராமனை அனாவசியமாகச் சந்தேகப்பட்டதற்கு வருந்துவதாகக் கூறினார்.