35. வட்டி குட்டி போடும் அதிசயம் | தமிழ் கதைகள் | The miracle of petting interest | Tenali Raman story
விஜய நகரத்தில் இராதன் சந்த் என்பவன் ஒரு வட்டிக்கடை வைத்திருந்தான். ஈவு இரக்கம் சிறிதுமின்றி அவன் தன்னிடம் கடன் கேட்க வரும் ஏழைகளிடம் நூற்றிற்கு ஐம்பது வீதம் வட்டி வாங்கினான்.
அது அநியாயம் என்று சொல்பவரிடமெல்லாம் “உங்கள் ஆடு மாடுகள் குட்டிப்போடுவதுபோல என் பணமும் குட்டி போடும்” என்பான்.
அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய தெனாலிராமன் தன் நண்பனான ஜோக்கைய்யா என்னும் மிராசுதாரோடு சேர்ந்து ஒரு தந்திரம் தீட்டினான்.
அதன்படி இராதன் சந்திடம் ஜோக்கைய்யா சென்று தன் வீட்டில் நடக்கப்போகும் ஒரு விசேஷத்திற்காக பன்னிரெண்டு பித்தளைப் பாத்திரங்களை பத்து தினங்களுக்குக் கடனாக வாங்கிச் செல்ல வேண்டும்.
விசேஷம் முடிந்ததும் அசலான பெரிய பித்தளைப் பாத்திரங்கள் பன்னிரெண்டுடன் சிறு பித்தளை பாத்திரங்களையும் கொண்டுவந்து இராதன்சந்திடம் கொடுத்து, “ஐயா! உம்முடைய பெரிய பாத்திரங்கள் பத்து தினங்களுக்குள் இச்சிறு பாத்திரங்களைக் குட்டிப்போட்டன” என்று கூறினான்.
இதைக் கேட்ட இராதன் சந்த் அவனது முட்டாள் தனத்தைக் கண்டு மனதிற்குள் நகைத்துக்கொண்டு “ஆமாம்! ஆமாம்! நான் உன்னிடம் அந்தப் பாத்திரங்களைக் கொடுக்கும் போது அவை கருவுற்றிருந்தன என்பதை மறந்துவிட்டேன்! நீ மிகவும் நேர்மையானவன்!” என்று புகழ்ந்து பேசினான்.
சில நாட்கள் சென்றன. ஜோக்கைய்யா மறுபடியும் இராதன் சந்திடம் வந்து பாத்திரங்கள் கடன் கேட்டான்.
பேராசை மிக்க இராதன்சந்த் இத்தடவை அவனிடம் ஒரு டஜன் பெரிய தங்கப் பாத்திரங்களும் ஒரு டஜன் வெள்ளிப் பாத்திரங்களும் கடனாகக் கொடுத்து “இவை இப்போது பிரசவிக்கும் தருணத்தில் இருப்பதால் இவற்றைத் திருப்பித் தரும்போது இவை குட்டி போடும் பாத்திரங்களுடன் கொடுக்க வேண்டும்!” என்று கூறியனுப்பினான்.
ஆனால் பாத்திரங்கள் வாங்கிச் சென்ற ஜோக்கைய்யா தெனாலிராமனின் ஆலோசனைப்படி அவற்றைத் திருப்பித் தராமல் இராதன் சந்திடம் “ஐயா! உம்முடைய பாத்திரங்கள் அனைத்தும் பிரசவத்தின் போது குட்டிகள் போடாமல் அசலோடு இறந்து விட்டன!” என்று கூறிவிட்டான்.
கோபம் கொண்ட இராதன்சந்த் அவனை இழுத்துக் கொண்டு அரசனிடன் சென்று “இவன் கூறுவது அதிசயமாய் இருக்கிறது!” என்று முறையிட்டு வழக்கிட்டான்.
அப்போது தெனாலிராமன், “அரசே! நாணயங்கள் குட்டி போடும் போது பாத்திரங்கள் குட்டி போடுவதில் என்ன அதிசயம்? மேலும், இராதன் சந்த் அம்மாதிரி குட்டி போட்ட பித்தளைப் பாத்திரங்களை ஒரு முறை ஜோக்கைய்யாவிடமிருந்து வாங்கியிருப்பது அதிசயமில்லை என்றால் இப்போது பிரசவத்தினால் தங்க வெள்ளிப் பாத்திரங்கள் இறந்து விட்டன என்பது மட்டும் எப்படி அதிசயமாகும்?” என்று கேட்டான்.
உண்மையை அறிந்து கொண்ட அரசர் இராதன் சந்தின் பேராசையைக் கண்டித்து அனுப்பினார்.