36. மைத்துனனைக் காப்பாற்றுதல்! | தென்னாலிராமன் கதைகள் | Saving the nephew! | tenali Raman story

36. மைத்துனனைக் காப்பாற்றுதல்! | தென்னாலிராமன் கதைகள் | Saving the nephew! | tenali Raman story

கிருஷ்ண தேவராயரின் அரண்மனைத் தோட்டத்தில் போர்த்துக்கீசியர்களின் நாட்டிலிருந்து வரவழைத்துப் பயிரிடப்பட்ட புது விதமான பழமரங்கள் கனிகளுடன் குலுங்கிக் கொண்டிருந்தன. 

அவ்வதிசயப் பழங்கள் அரசருக்கு ஏகபோக உரிமையாக இருந்தபடியால் அப்பழங்களைத் திருடுபவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுமென்று இராயர் அறிவித்திருந்தார்.

அந்நாளில் தெனாலிராமனின் வீட்டிற்கு கிராமத்திலிருந்து வந்த மைத்துனனான பிச்சையா அவ்வதிசயப் பழங்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துத் தின்ன ஆசைப்பட்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து பழங்களைத் திருடி “பேஷ்! பேஷ்!” என்று தின்னும் போது தோட்டக்காவலாளிகளால் சிறை பிடிக்கப்பட்டான்.

tenali Raman
tenali Rama

அதைக் கேள்வியுற்ற தெனாலிராமனின் மனைவி தன் கணவனிடம் “என் அருமைத் தம்பியை நீங்கள் தான் எப்படியும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்!” என்று கூறி அரசரிடம் அனுப்பினாள்.

அரசவைக்குள் தெனாலிராமன் வருவதைக் கண்டதும் இராயர் அவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு “ராமா! உன்னுடைய தந்திரம் எதுவும் இந்தத்தடவை பலிக்காது! பழம் திருடிய உன் மைத்துனனை என்ன செய்ய வேண்டுமென்று நீ விரும்பிக் கேட்கப் போகிறாயோ அதை நான் சத்தியமாக செய்ய மாட்டேன்!” என்றார்.

ராமன் சட்டென்று “மன்னர்பிரானே! நீங்கள் செய்த சத்தியத்தில் இருந்து அணுவளவும் தவறமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பழம் திருடிய என் மைத்துனனுக்குச் சிறிதும் கருணை காட்டி மன்னிக்காமல் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டுமென்றுதான் நான் விரும்பிக் கேட்க வந்தேன்!” என்றான். 

அரசருடைய பாதகமான வாக்கையே தனக்கு சாதகமாக மாற்றி அமைத்துக் கொண்ட தெனாலிராமனை மன்னர் வியந்தவாறு, “இராமா! என் வாக்கின் பிரகாரம் உன் மைத்துனனுக்குப் பெரிதும் கருணை காட்டி மன்னித்துத் தண்டனை விதிக்காமல் அவனை விடுதலை செய்கிறேன். ஆனால் அத்திருடன் இனி இந்நகரின் பக்கமே தலைகாட்டக்கூடாது!” என்றார்.
Leave a Comment