20. கற்பனைக் கலைஞனான வினோதம்! | தமிழ் கதைகள் | Imaginary weirdness! | tenali Raman story
கலைஞானம் மிகுந்த கிருஷ்ண தேவராயர் தம்முடைய வசந்த மாளிகையின் ஒருபுறம் புதிதாக ஒரு சித்திரகூடம் கட்டி முடித்தார்.
வடக்கேயிருந்து வந்த ஒரு சித்திரக்காரன் அந்தக் கூடத்தின் சுவர்களில் அழகிய மங்கையரின் முன்புறத் தோற்றங்களைத் தத்ரூபமாக வரைந்து விட்டு “இது போன்ற உயிரோவியங்களைத் தென்னகத்திலுள்ள எந்தக் கலைஞனாலும் தீட்டமுடியாது!” என்று அகம்பாவத்துடன் சொன்னான்.
அதைச் சகிக்க முடியாத இராமன் “இந்தத் தத்ரூபமான ஓவியங்களின் முன்புறந்தான் தெரிகிறதே தவிர பின்புற அவயவங்கள் எங்கே?” என்று கேட்டபோது, அந்த ஓவியக் கலைஞன், “உனக்குக் கலையறிவு கொஞ்சமாவது இருந்தால் அந்த ஓவியங்களின் பின்புறத் தோற்றங்களையும் அவயவங்களையும் உன் கற்பனைக் கண்ணால்தான் காண வேண்டும்!” என்று கூறினான்.
அதைக்கேட்ட இராயரும் அதை ஆமோதிப்பவர்போல் சிரித்து “தெனாலிராமா! உனக்கு விகடம் மட்டுமே செய்யவரும். சித்திரக் கலையை ரசிக்க தனியான மனோபாவனையும் கற்பனை வளமும் வேண்டும்!” என்று கூறிவிட்டார்.
அப்போது மௌனமாக இருந்த தெனாலிராமன் சில நாட்கள் கழித்ததும் இராயரிடம் வந்து தான் சித்திரக் கலையைக் கற்றுக் கொண்டு விட்டதாகவும் வட நாட்டு ஓவியனையும் மிஞ்சும் படியாகக் கற்பனை வளமுள்ள சித்திரங்களை அந்தச் சித்திரக்கூடத்தில் தன்னால் வரைய முடியுமென்றும் கூறி அரசரிடம் அனுமதிப் பெற்று அந்தக் கூடத்தில் வடநாட்டு ஓவியன் வரைந்த ஓவியங்களனைத்தையும் அழித்துவிட்டுப் புதிதாகச் சித்திரங்கள் வரையலானான்.
அவை மிகவும் விசித்திரமாக இருந்தன. ஒரு கையும் ஒரு காலும், ஒரு தோளும், இடையுமாக ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தனித்தனி அங்கங்களாகச் சுவர் முழுவதும் கைக்கு வந்தபடியெல்லாம் கிறுக்கி வைத்தான்.
அவற்றைப் பார்வையிட பழைய சித்திரக்காரனோடும் கலைஞர்களோடும் வந்த இராயர் கோபமுற்று, “இராமா! மற்ற அங்கங்கள் எங்கே?” என்று கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன், “அரசே! மற்ற அங்கங்களெல்லாம் அங்கங்கு மறைந்திருப்பதாகப் பாவனை! கலையறிவுள்ளோர் அவற்றைக் கற்பனைக் கண்ணால்தான் காணவேண்டும்!” என்றான் குறும்பாக.
உடனே இராயருக்கு ஆத்திரத்திடையே சிரிப்பு வந்தாலும் அதை உள்ளடக்கிக்கொண்டு புதிய சித்திரக் கூடத்தைப் பாழாக்கிய தெனாலிராமன் மீது அளவற்ற சினமுற்று. “இந்தக் குறும்பனின் தலையை வெட்டிவிடுங்கள்!” என்று கட்டளையிட்டார்.