25. திருடர்களை ஏற்றமிறைக்க வைத்தல்! | தமிழ் கதைகள் | Keeping thieves on the rise! | tenali Raman story
தெனாலிராமனின் வீட்டைச் சுற்றியிருந்த ஒரு பெரிய தோட்டம் கோடை காலத்தில் வறட்சி கண்டிருந்தது. தோட்டத்திலிருந்த ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது தெனாலிராமனுக்குச் சிரமமாகவும், அதிக செலவை உண்டாக்கக் கூடியதாகவும் தோன்றியது.
அக்காலத்தில் நாளிரவு முரடர்களான ஆறு திருடர்கள் தெனாலி ராமனின் வீட்டில் திருடுவதற்காக கொல்லைப்புற தோட்டத்தில் மறைந்திருந்தார்கள். அதைத் தெனாலிராமன் ஜாடையாகக் கண்டதும்.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளே போய் தன் மனைவியிடம் “அடியே! இந்தப் பஞ்சகாலத்தில் திருடர்கள் நம் வீட்டில் புகுந்து திருட வருவார்களாதலால் நம் வீட்டிலுள்ள பொன் பொருளையெல்லாம் பழைய பெட்டிகளில் வைத்து நம் தோட்டத்திலுள்ள ஆழமான கிணற்றில் போட்டு வைத்தால் பத்திரமாயிருக்கும்” என்று திருடர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் கூறிவிட்டு, பெட்டிகளில் கல்லையும் மண்ணையும் அள்ளிப்போட்டு மனைவியும் தானும் சிறு மகனுமாக அப்பெட்டிகளைத் தூக்கிச்சென்று கிணற்றுக்குள் தொப்பென்று போட்டான்.
அவன் வீட்டினுள் போனதும் திருடர்கள் ஆனந்தப்பட்டு பெட்டிகளை எடுப்பதற்காக கிணற்றிலுள்ள ஏற்றத்தில் பொழுது விடியும் வரை தண்ணீரை இறைத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தார்கள்.
தெனாலிராமன் தந்திரமாகத் தோட்டத்திற்குள் சிறு மண்வெட்டியுடன் ஓசைப்படாமல் வந்து திருடர்கள் இறைக்கும் தண்ணீரையெல்லாம் தோட்டத்திலுள்ள மரங்களுக்குப் பாத்திகளில் செல்லும்படி வெட்டிவிட்டான்.
பொழுது விடிந்து மக்கள் நடமாட்டம் தொடங்கும் நேரத்தில் தெனாலி ராமன் திடீரென்று, “ஐயா! நல்லவர்களே நீங்கள் தண்ணீயிறைத்தது போதும்! மரங்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து விட்டது! அதற்குக் கூலியாகப் பெட்டிகளிலுள்ள கற்குவியல்களை எடுத்துக்கொண்டு, பொழுது விடியப் போகிறதாகையால் பத்திரமாகப் போய்ச் சேருங்கள்!” என்று கூவிச் சிரித்தான். அதைக்கேட்ட திருடர்கள் திடுக்கிட்டு, மன்னரிடம் பிடித்து கொடுக்காமல் விட்டானே என்று பயந்து ஓடிவிட்டார்கள்.
Thanks for the post