18. சவுக்கடி வெகுமதி | தமிழ் கதைகள் | Whip reward | tenali Raman story

சவுக்கடி வெகுமதி | தமிழ் கதைகள் | Whip reward | tenali Raman story

குச்சிப்புடி என்னும் நாட்டிலிருந்து பிரபலமான கூத்தாடி ஒருவன் வந்து இராயரின் நர்த்தன மண்டபத்தில் கிருஷ்ணவேடம் தரித்து “கிருஷ்ணலீலா”  கூத்து நடத்திக்கொண்டிருந்தான். 

அங்கு தெனாலி ராமன் இருந்தால் கோமாளிக் கூத்தாக்கி விடுவானென்று நினைத்து ராமனை உள்ளே அனுமதிக்கக்கூடாதென்று வாசல் காப்போருக்கு இராயர் உத்தரவிட்டிருந்தார்.

அதையறிந்த ராமன் கிழட்டு இடையனைப்போல் வேடமிட்டுக் கொண்டுவந்து முதல் வாசலிலுள்ள காவலாளியிடம் “நான் அரசரிடம் வெகுமதி வாங்க உள்ளே போகவேண்டும். 

உள்ளே எனக்குக் கிடைப்பதில் சரிபாதி உனக்குத் தந்துவிடுகிறேன்!” என்று ஆசைகாட்டி அனுமதி பெற்று நுழைந்து இரண்டாவது வாசலில் காவல் இருந்தவனிடமும் அது போல் கூறி கூத்து நடக்குமிடத்திற்கு வந்து கிருஷ்ண வேஷக்காரனை அடி அடியென்று அடித்தான். அந்த வேஷக்காரன் அலறித் துடித்து “குய்யோ முய்யோ!” என்று கத்தினான்.

tenali Raman
tenali Raman

அப்போது இடையனைப்போல் வேஷமிட்டிருந்த ராமன். “ஐயா! எத்தனையோ கோபிகாஸ்திரீகள் எவ்வளவோ பெரிய மத்தால் அடித்தபோதும் கிருஷ்ணன் அழுது அலறாமல் பொறுத்துக் கொண்டிருந்தானே! 

இந்த கிருஷ்ண வேஷக்காரனோ நான் வெறும் கம்பால் அடித்ததற்கே இப்படி அலறித் துடிக்கிறானே. இவனும் ஒரு கிருஷ்ணனோ?” என்று கூறி இடி இடியென்று சிரித்தான். 

சபையும் சிரித்தது. அரசரோ ஆத்திரங்கொண்டு அங்கிருந்த அதிகாரியை நோக்கி, “இந்த கோமாளிக்கு இருபத்து நான்கு சவுக்கடிகள் தண்டனையாகக் கொடுங்கள்!” என்று உத்தரவிட்டார். அப்போது ராமன் “என் நகைச்சுவைக்கு நீங்கள் அளித்த வெகுமதிக்கு நன்றி. 

ஆனால் எனக்கு உள்ளே கிடைப்பதில் சரிபாதி கொடுப்பதாக உங்கள் வாசல் காப்போருக்கு நான் வாக்குக் கொடுத்திருப்பதால் கொடுக்கப்போகும் இருபத்து நான்கு சவுக்கடிகளில் சரிபாதியான பன்னிரெண்டை முதல் வாசலின் காவலாளிக்கும் மற்ற பாதியை இரண்டாவது வாசலின் காவலாளிக்கும் கொடுத்துவிடுங்கள்!” என்று கூறி காவலாளிகள் இருவருக்கும் இருபத்து நான்கு சவுக்கடிகளை வெகுமதியாக அளித்துவிட்டான்.



Leave a Comment