22. வாக்குறுதி பெறுதல் | தமிழ் கதைகள் | Getting the promise | tenali Raman story
தெனாலிராமனின் கோமாளித்தனமும் தொல்லையும் அதிகரித்து வருவதைக் கண்டு அரசருக்கும் இராஜகுருவுக்கும் அடிக்கடி கோபம் உண்டாகியது. அவர்களால் தனக்கு பிராணாபாயம் ஏற்படாதபடி வாக்குறுதி பெற விரும்பிய தெனாலி ராமன் ஓர் தந்திரமாக செயல்பட எண்ணினான்.
அவன் ஒரு நாள் இராயரிடம் சென்று, அந்தரங்கமாக பெண்ணின் சுகத்தைப் பற்றிய பேச்செடுத்து, “என் வீட்டிற்கு ஆண் ஒருவனும், வடதேசத்திலிருந்து ஒரு அழகான பருவமங்கை ஒருத்தியும் வந்திருக்கிறார்கள்.
அந்த மங்கையோடு ஒரு நாளாவது மகிழ்ந்திராத ஆண்மகன் இந்த உலகத்தில் எந்த சுகத்தையும் கண்டறியாதவனாவான்” என்றெல்லாம் கூறி, இராயருக்கு மோகத்தைத் தூண்டிவிட்டான்.
“அரசே! அந்த மங்கை தன் அறையை விட்டு எங்கும் நகரமாட்டாள். அவளோடு வந்திருக்கிற ஆணோ அந்தப் பெண்ணின் அருகில் வேறு ஆண்களை நெருங்க விடமாட்டான்.
அதனால் நீங்கள் இன்றிரவு பத்தரை மணிக்கு மேல் பெண் வேஷமிட்டுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாருங்கள். அந்த மங்கையின் அறையிலேயே அவளோடு மகிழ்ந்திருக்கலாம்!” என்று கூறிவிட்டுச் சென்று, இராஜகுருவிடம் தனியாகப் பேசி அவருக்கும் மோகத்தை உண்டாக்கினான்.
“குருவே! இன்றிரவு பத்து மணிக்கு மேல் நீங்கள் அழகான பெண் வேஷமிட்டுக் கொண்டு என் வீட்டிற்கு வந்து நான் குறிப்பிடும் அறையில் மறைந்து இருங்கள்.
அந்த மங்கையை உம்மிடம் அனுப்புகிறேன்!” என்று கூறிச் சென்றான். அதுபோல் இராஜ குருவும் பெண் வேஷத்துடன் தெனாலி ராமனின் வீட்டிற்கு வந்து ஒரு அறையில் படுத்தவாறு விளக்குகளை அணைத்துவிட்டு அழகிய மங்கையை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தார்.
இரவு பத்தரை மணிக்கு மேல் இராயரும் பெண் வேஷமிட்டுக் கொண்டு வந்ததும் அவரை அந்த அறைக்குள் தெனாலிராமன் அனுப்பி விட்டு அறைக் கதவை வெளியே பூட்டிவிட்டான்.
உள்ளே அரசரும் இராஜகுருவும் ஒருவரையொருவர் பெண் என்று எண்ணி சரசமாட முயன்று உண்மைச் சொரூபங்களை அறிந்ததும் அவமானப்பட்டுத் தலைகுனிந்தார்கள்.
பிறகு அவர்கள், “தெனாலிராமா? அறைக்கதவை திறந்து எங்களை வெளியே விடு” என்று கெஞ்சினார்கள். தெனாலிராமனோ, “நான் என்ன குற்றம் செய்தாலும் நீங்கள் கோபம் கொள்ளாமல் நாளொன்றிற்கு நூறு குற்றங்கள் வரை பொறுப்பதாக உங்கள் ஆண்டவன் மீது ஆணையிட்டு வாக்குறுதி கொடுத்தால்தான் கதவை திறப்பேன்!” என்று கூறி வாக்குறுதி பெற்ற பிறகே கதவைத் திறந்து அவர்களை வெளியேவிட்டான்.