8. பேராசையினால் பரிசுத்தத்தைக் கைவிடுபவர்கள் | தெனாலி ராமன் கதைகள் | Those who forsake holiness out of greed | tenali Raman stories

பேராசையினால் பரிசுத்தத்தைக் கைவிடுபவர்கள் | தெனாலி ராமன் கதைகள் | Those who forsake holiness out of greed | tenali Raman stories

கிருஷ்ணதேவராயர் “அமுக்தமால்யதா” என்னும் நூல் எழுதிக் கொண்டிருக்கும் போது “ஒரு நாட்டின் செழிப்பிற்கும், சிறப்பிற்கும் அதிமுக்கியமான காரண புருஷர் யார்?” என்ற கேள்வி சபையில் எழுந்தது.

அதற்கு “அதிமுக்கியமானவன் அரசன் தான்” என்றனர் இராஜப்பிரியர்கள். “இல்லை அமைச்சர்கள் தாம்” என்றார் அமைச்சர் அப்பாஜி. “இல்லை நாட்டு மக்கள் தாம்” என்றாள் இளவரசி. 

“இல்லை ஒரு நாட்டின் சிறப்பிற்கு அதிமுக்கியமானவர்கள் பரிசுத்தவாதிகளான அந்தணர்கள்தாம்!” என்று இராஜகுரு தாத்தாச்சாரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

அவர் சொன்னதை எதிர்க்கும் விதமாகத் தெனாலி ராமன் துள்ளியெழுந்து “இல்லை அந்தணர்கள் போஜனப் பிரியர்கள். அவர்களில் பலர் பொன் பொருள் தானத்திற்குப் பேராசைப்பட்டுத் தங்கள் பரிசுத்தத்தையும் கைவிடத் தயங்கமாட்டார்கள். இதை நான் நாளையே நிரூபிக்காவிட்டால் அந்தணர்களை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகிறேன்!” என்று கூறிச் சென்றான்.

Tenali Raman

அவனுடைய அக்கிரகாரத்திலுள்ள சில அந்தணர்களின் நினைவு வந்தது. முன்பு ஒரு சமயம் அவர்கள் ராமன் உதவி கேட்ட போது அவனை அவமானப்படுத்தியிருந்தனர். அவர்களைப் பதிலுக்கு அவமானப்படுத்த இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது என்று நினைத்தான்.

மறுநாள் அதிகாலையில் அவ்வந்தணர்கள் எல்லாம் காலைக்கடனை முடிக்க ஆற்றங்கரைக்குச் சென்று மலம் கழித்துக் கொண்டிருந்தபோது தெனாலிராமன் அவர்களிடம் சென்று “நீங்கள் எட்டுப்பேரும் உடனே அரசரிடம் ஓடிவாருங்கள். அரசர் இன்று உதயத்திற்குள் எட்டு அந்தணர்களுக்குப் பெரும் மானிய தானம் செய்ய விரும்புகிறார்கள்!” என்று அவசரப்படுத்தினான்.

பேராசைப்பட்டு அவ்வந்தணர்கள் அந்த அவசரத்தில் தந்தச்சுத்தி முதலானவை செய்து கொள்ளாமலும், ஆற்றில் நீராடாமலும் தண்ணீரை மட்டும் தலையைச் சுற்றித் தெளித்துக் கொண்டு தாங்கள் நீராடிப் பரிசுத்தமாகிவிட்டதாகப் பாவித்துக் கொண்டு அரசவையில் அசுத்தத்துடனே வந்து நின்றனர்.

அவர்கள் பரிசு பெற வந்த விபரத்தை தெனாலி ராமன் விவரித்துக் கூறி “அரசே! இவ்வந்தணர்கள் மானியம் பெறப் பேராசையினால் பரிசுத்தத்தைக் கைவிட்டு வந்திருக்கிறார்கள். 

இவர்களைப் போன்று சாஸ்திர ரீதியாக சிறிது தண்ணீரைத் தலையைச் சுற்றித் தெளித்துக் கொள்வதின் மூலம் சுத்தமாக நீராடிப் புனிதமடைந்து விட்டதாகக் கருதுபவர்களும், தங்களிடம் இல்லாத குணங்களை இருப்பதாகக் கருதுபவர்களும், பழிப்பிற்கு ஆளாவார்களே தவிர ஒரு நாட்டின் சிறப்பிற்குக் காரண புருஷர்களாக மாட்டார்கள்! அன்று நம் இராஜகுருவிடம் சவால் விட்டபடி நான் கூறியதை இப்போது நிரூபித்துவிட்டேன்!” என்றான்.

சபை கொல்வென்று சிரித்தது. இராஜகுரு அவமானத்தால் தலை கவிழ்ந்தார். அரசரோ, “இப்படிப்பட்ட அசுத்தர்களுக்கா நிலதானம் செய்தேன்?” என்று சினந்து அந்தணர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த மான்யங்களையெல்லாம் பறிமுதல் செய்தார்.



Leave a Comment