1. தெனாலிராமன் பிறப்பு | தமிழ் கதைகள் | Tenali Rama birth | tamil story

தெனாலிராமன் பிறப்பு | தமிழ் கதைகள் | Tenali Rama birth | tamil story

அவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப்போல அழவில்லை. சிரித்துகொண்டே பிறந்தான்.

அதைக்கண்டு உலகந்தான் அழுதது. ஏனெனில் அவன் பிறந்தவேளை அவனுடைய வறுமை வாய்ப்பட்ட குடும்பத்திற்கு நெருக்கடியான நேரமாகும்.

கிருஷ்ணா ஜில்லாவில் காலபடு என்னும் கிராமத்தில், சாதாரண ஏழை அந்தணர் குடும்பத்தில் இராமய்யா லஷ்மியம்மாள் இருவருக்கும் புத்திரனாகப் பிறந்தான் தெனாலிராமன்.

தெனாலியிலுள்ள இராம லிங்கசுவாமியின் பெயரால் இராமலிங்கன் என்று இயற்பெயரிடப்பட்ட அவன் பிறந்த மூன்றாம் நாளன்றே அவனுடைய தந்தை திடீரென்று காலராவினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

குழந்தையை எடுத்துக்கொண்டு லஷ்மியம்மாள் தன் பிறந்த ஊரான தெனாலியிலுள்ள தன் சகோதரன் வீட்டிற்கு வந்துசேர்ந்து குமாரனை வளர்த்து உரிய வயது வந்ததும் அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள்.

இயற்கையிலேயே குறும்பு சேஷ்டைகளும், கோமாளித்தனமும், பரிகாச அகடவிகடங்களும் அதிகமுள்ள ராமனால் பள்ளியிலுள்ள அவனது ஆசிரியர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.

தனது அறிவாற்றலையும், நகைச்சுவையுடன் பேசும் திறமையையும் பிறர் ரசிக்கச் செய்ய வேண்டுமென்பதையே ஆவலாகக்கொண்டிருந்த தெனாலிராமனுக்குப் பள்ளிப்படிப்பின் மீது கவனம் செல்லவில்லை.

ஆதரிப்பவர்கள் யாருமில்லாத ஏக்கமும், வறுமையின் கோரப்பிடியும் அவனை வாட்டியது. ஆயினும் ராமனின் தன்னம்பிக்கை தளரவில்லை!

கோமாளியாகவும், குறும்புக்காரனுமாகவே வளர்ந்த, வாலிபதசை அடைந்ததும், கமலா என்னும் ஒரு மங்கையை மணம்புரிந்து, மனைவிக்கு வறுமையிலும் சிரிக்கப் பழகிக் கொடுத்தான்.


Leave a Comment