3. அரச குருவின் பேட்டி! தெனாலிராமன் கதைகள் | Interview with the arasa Guru | Tenali Raman story

3. அரச குருவின் பேட்டி! தெனாலிராமன் கதைகள் | Interview with the arasa Guru | Tenali Raman story

காளியிடமிருந்து விகடகவியாக வரம் பெற்ற தெனாலிராமன், பல கலைகளையும் ஆதரித்து வரும் ஜயநகரமன்னர் கிருஷ்ணதேவராயரிடம் செல்வது என்று முடிவு செய்தான்.

இராஜகுரு தாத்தாச்சாரியிடம் இராயர் மிகவும் மதிப்பு வைத்திருந்ததை அறிந்த தெனாலிராமன் முதலில் இராஜகுருவையே பேட்டி கண்டு அவருடைய சிபாரிசைப் பெறவேண்டும் என்று தீர்மானித்து தன் வீடு வாசல்களை விற்றுப் பிரயாணத்திற்குப் பணமாக்கிக் கொண்டான். 

தன் தாயாரையும் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கால் நடையாகவே விஜய நகரம் சென்று தன் குடும்பத்தினரை விடுதியில் தங்கியிருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு இராஜகுருவின் மாளிகையை அடைந்தான்.  

இராஜகுருவின் தயவை நாடி எண்ணற்ற கலைஞர்கள் வாசலில் குழுமியிருந்தனர். காவலரைத் தாண்டி அவரைப் பேட்டி காண்பது கஷ்டமாய் இருந்ததால், “நான் ராஜகுரு தாத்தாச்சாரியாரின் பரமசிஷ்யன்!” என்று புளுகிக்கொண்டே காவலரை மீறி உள் நுழைந்து இராஜகுருவை நெருங்கிவிட்டான்.

Tenali Raman

அவரைக் கண்டவுடன் அவர் தற்புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று எளிதில் உணர்ந்துகொண்டு அவரைக் “கருணை வள்ளல்! தியாகி!” என்றெல்லாம் புகழ்ந்த ராமன் இறுதியில், “குருதேவா! நான் தெனாலி உம்முடைய சிடனாகையால் நீர் சிபாரிசு செய்து அரசவையிலே எனக்கு விதூஷகன் வேலை வாங்கித் தரவேண்டும். 

அப்போது உம்மை இன்னும் அதிகமாகப் புகழ்வேன்!” என்றான். அவனுடைய புத்தி சாதுரியத்தைக் கண்ட இராஜகுரு அவனால் அரசவையில் தனக்குள்ள செல்வாக்கு குன்றிவிடுமோ என்றஞ்சி அவனுக்கு உதவி செய்யவிரும்பாமல் “இந்த முட்டாளை எனக்குத் தெரியாது! இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள்!” என்று காவலருக்கு உத்தரவிட்டார். 

அவ்வாறு ராமன் வெளியே பிடித்துத் தள்ளப்பட்டபோது அருகிலிருந்தோரெல்லாம் சிரித்தனர். அதனால் அதிகம் அவமானப்பட்டுவிட்ட ராமன் “ஆமாம் நான் முட்டாள் தான்! மன்னர் பெருமானின் சந்நிதானத்திற்கு நானே நேரில் செல்லாமல் நந்திபோல் வழிமறித்திருக்கும் இராஜகுருவின் சிபாரிசை நாடிவந்த நான் முட்டாள்தான்! 

ஆனால் இனிமேல் என்னைவிட எல்லோரும் அதிக முட்டாள்கள் என்பதை நிரூபிப்பேன்!” என்று குமுறியெழுந்து என்றாவது ஒருநாள் இராஜகுருவைப் பழிவாங்காமல் விடுவதில்லை என்று மனதில் வஞ்சினம் பூண்டு நேரே அரசவைக்குச் சென்றான்.Leave a Comment