அரவம் ஆட்டேல் | ஆத்திசூடி கதைகள் | Do not play with snakes | tamil story
ஏரிக்கரையோரத்தில் தவளை ஒன்று வசித்து வந்தது. அந்தத் தவளையோடு பாம்பு மிகவும் நட்பாக இருந்தது.
ஒரு நாள் பாம்பு எங்கெல்லாமோ இரைதேடி அலைந்தது. பாம்புக்கு எந்த இரையும் கிடைக்க வில்லை. மிகவும் உடல் சோர்ந்து போய் ஏரிக்கரைப் பக்கம் வந்தது.
அந்தநேரம் ஏரியின் உள்ளேயிருந்து வெளிவந்த தவளை பாம்பைப் பார்த்து “நண்பனே, நீ ஏன் இன்று சோர்வோடு காணப்படுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது?” என்று அன்போடு கேட்டது.
தவளையைப் பார்த்த பாம்புக்கு திடீரென்று ஓர் யோசனை தோன்றியது. எனக்கு இப்போது அதிகப் பசியாக இருக்கின்றது.
இந்தத் தவளையைப் பிடித்து என் இரையாக்கிக் கொள்ளலாமே என்று நினைத்த பாம்பு, திடீரென தன் வாயைப் பிளந்து கொண்டு தவளையைப் பிடிக்கத் தாவியது.
அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்ட தவளை “நண்பனே! இது என்ன விளையாட்டு, என்னை ஏன் பிடித்து விழுங்க நினைக்கின்றாய்?” என்று ஆத்திரத்துடன் கேட்டது.
அதனைக் கேட்ட பாம்பு “தவளை நண்பா! என்னை மன்னித்துவிடு! உன்னைப் பார்க்கையில் எனக்கு இரக்கமே ஏற்படுகிறது. வெகுநேரமாக இரை எதுவும் கிடைக்காமல் நான் பசியோடு வாடிக் கொண்டிருக்கின்றேன்.
அதனால் தான் உன்னைப் பிடித்து உண்ணப்போகிறேன்” என்றது. அதனைக்கேட்ட தவளைக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. பாம்பின் நம்பிக்கை துரோகத்தை நினைத்து மனம் வெம்பியது.
இந்த ஆபத்திலிருந்து எப்படியாவது நாம் தப்பிக்க வேண்டுமென சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது. உடனே பாம்பைப் பார்த்து “நண்பா நீ என்னை மட்டும் சாப்பிட்டால் உன் பசி அடங்கிவிடும் என்று நினைக்கின்றாயா? நிச்சயமாக உனக்குப் பசி அடங்காது.
அதனால் ஏரிக்குள் சென்று என் நண்பர்கள் இரண்டு பேரை அழைத்து வருகிறேன். அவர்களையும் சேர்த்து நீ சாப்பிடு” என்று கூறியது . பாம்பு மனம் மகிழ்ந்தது.
“நண்பன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்! உடனேயே உன் நண்பர்களை அழைத்துவா! எனக்கு இப்போது இன்னும் அதிகமாகப் பசியெடுக்கிறது. நான் கரையிலேயே காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறியது.
தவளையோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஏரிக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கி எங்கோ சென்றுவிட்டது. இனிமேல் இந்தக் கொடிய நண்பனிடம் பழகக்கூடாது என்று முடிவெடுத்தது.
நீதி:
பாம்பைப் போன்று விஷத்தன்மை உள்ளவர்களிடம் பழகக்கூடாது.