ஒளவியம் பேசேல் | ஆத்திசூடி கதைகள் |Never envy and talk bad about others | tamil kathaigal
ஆற்றங்கரையோரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த பூவரசு மரத்தில் காகமும், மைனாவும் வசித்து வந்தன. காகத்தின் கூட்டின் அருகே மைனாவும் கூடுகட்டி வசித்து வந்தது.
மைனாவிற்கு பூவரசு மரத்தில் காகம் தங்குவது கொஞ்சமும் பிடிக்கவில்லை. எப்படியாவது அந்தக் காகத்தை விரட்ட வேண்டுமென்று மனதுள்ளே எண்ணிக் கொண்டிருந்தது. ஒருநாள் அந்த பூவரசு மரத்தைத் தேடிப் புறா வந்தது.
காகத்தின் நண்பனான அந்தப் புறா காகத்தின் கூட்டை நோக்கி வந்தது. கூட்டில் காகம் இல்லை. அந்த நேரத்தில் காகம் எங்கோ இரைதேடச் சென்றிருந்தது.
காகத்தின் வருகைக்காக மரத்திலேயே காத்திருந்தது புறா. அந்த நேரத்தில் இரைதேடிவிட்டு தன் கூட்டிற்கு திரும்பி வந்த குயில் புறாவைப் பார்த்துவிட்டது.
யாரிடமாவது வம்பு பேசியே பழக்கப்பட்ட குயில் மெல்லப் புறாவின் அருகே சென்றது. “புறாவே நீ யாரைத் தேடியபடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்?” என்று கேட்டது குயில்.
உடனே புறா “என் நண்பன் காகத்தைத் தேடி வந்துள்ளேன். நீயும் இந்த மரத்தில் தான் வசிக்கின்றாயா?” என்று அன்போடு கேட்டது.
அதனைக் கேட்ட குயில் “ஆமாம்! இங்குதான் வசிக்கிறேன். இந்த இடத்தைவிட்டு எப்போது செல்லலாம் என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு எப்போது நேரம் வருகின்றதோ தெரியவில்லை” என்று கவலையுடன் கூறியது.
அதனைக் கேட்ட புறா “குயிலே! உன் பேச்சினைக் கேட்கின்ற போது, ஏதோ மனம் வெறுத்தபடி பேசுகிறாய் என்று தோன்றுகிறதே!
அருகில் ஆற்றுநீர் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த மரம் எந்த நேரமும் பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றது. நீ அதனை அனுபவிக்காமல் இந்த மரத்தை விட்டே செல்ல நினைக்கின்றாயே” என்று ஆச்சர்யமாகக் கேட்டது புறா.
உடனே குயில் கவலையுடன் தன் முகத்தைத் தொங்கப் போட்டபடி “என்ன செய்வது? உன் நண்பன் காகம் இருக்கின்ற வரையிலும் எனக்கு நிம்மதியில்லை. காகம் இந்த மரத்தைவிட்டு எப்போது வெளியேறுகிறதோ, அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.
அதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகிறது” என்று கவலையுடன் கூறியது குயில். அதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்த புறா “என் நண்பன் காகம் மிகவும் நல்லவனாயிற்றே! அவனால் உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டது.
உடனே குயில் “புறாவே! காகம் இந்த மரத்திலிருந்து அடிக்கடி கரைந்து கொண்டிருப்பதால் என் தூக்கமே கலைந்து போகிறது. நான் பகலில் தூக்கம் போட்டே பல நாட்கள் ஆகின்றது.
இந்த காகத்தால் என் பகல் தூக்கமே கெட்டுவிட்டது” என்று கூறியது. உடனே புறா “குயிலே! சோம்பேறிகள் தான் பகலில் தூங்குவார்கள. நீ உனது சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளவேண்டி காகத்தைக் குறை கூறாதே!” என்றது.
குயில் தன் மனதுக்குள் வஞ்சக எண்ணத்தை ஓடவிட்டது. இந்தப் புறாவிடம் காகத்தைப் பற்றி பழி கூறினால், புறா எப்படியும் அதனை காகத்திடம் தெரியப்படுத்தும். அதன் பின் காகம் இந்த மரத்தில் தங்காது.
நாம் மட்டும் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தபடி புறாவிடம் மேலும், மேலும் காகத்தைப் பற்றி குறை கூற ஆரம்பித்தது. இனிமேலும் இந்தக் குயிலிடம் பேசினால் நம் நண்பனுக்கும், நமக்கும் அவமானந்தான் ஏற்படும் என்று நினைத்த புறா அமைதியோடு குயிலின் பேச்சைக் கேட்டும் கேட்காதது போல் காகத்தின் கூட்டின் அருகிலேயே நின்றது.
சிறிது நேரத்தில் காகம் அங்கே பறந்து வந்தது. காகத்தைக் கண்ட குயில் உடனேயே தன் கூட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டது. காகம் புறாவை அன்போடு வரவேற்றது.
“நண்பனே! சௌக்கியமாக இருக்கின்றாயா? நாம் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டதே” என்று புன்னகையுடன் கேட்டது. உடனே புறா “நண்பா ! என் சௌக்கியம் இருக்கட்டும்.
முதலில் உன் சௌக்கியத்தைப் பற்றிப் பார்ப்போம்! நீ முதலாவது உன்னை இழிவாக நினைக்கும் குயிலின் அருகில் இருக்காதே. துஷ்டனைக் கண்டால் தூரம் விலகிச் செல்ல வேண்டும்.
நீ வருவதற்கு முன்னர் சற்று நேரம் அந்தக் குயிலோடு பேசிக் கொண்டிருந்தேன். குயிலின் பேச்சு உன்னைக் குறை கூறுவதாகவே அமைந்திருந்தது. அதனால் நீ என்னோடு புறப்பட்டு வந்துவிடு.
நான் வசிக்கின்ற இடத்தில் உனக்கு எல்லா வசதியும் பாதுகாப்பும் இருக்கின்றது” என்று கூறியது. தன் நண்பன் பேச்சுக்கு கட்டுப் பட்ட காகமும் உடனேயே பூவரசு மரத்தைவிட்டு புறாவோடு பறந்து சென்றது.
சிறிது நேரத்தில் கூட்டை விட்டு வெளியே வந்த குயில் காகமும், புறாவும் அங்கு இல்லாமல் திருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தது. பூவரசு மரத்திலேயே தனிமையில் வசித்து வந்த குயில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்க. ஒருநாள் குயில் கூட்டுக்குள் இருந்த நேரம் கழுகு ஒன்று பறந்து வந்து குயிலின் கூட்டின் அருகே நின்றது.
கூட்டுக்குள் குயில் இருப்பதைப் பார்த்த கழுகு, உடனே தன் கூரிய அலகினால் குயிலைக் கொத்தியெடுத்து குயில் பறக்க முடியாத வண்ணம் அதன் இறக்கைகளை கொத்தியெடுத்து, அதன்பின் தனக்கு இரையாக்கியது.
குயில் கதறி அழுதது. இந்த நேரத்தில் தன் அருகே காகம் இருந்தாலாவது மற்ற காகங்களையும் கா… கா… என்று கரைந்து அழைத்து நம்மைக் காப்பாற்றியிருக்கும். நம் வஞ்சக எண்ணத்தால் காகத்தை விரட்டியதற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது என்று கண்ணீர்விட்டபடி கழுகுக்கு இரையாகியது.
நீதி:
வஞ்சக எண்ணத்தோடு வாழ்ந்தால் வாழ்வே அழிந்துவிடும்.