ஞயம்பட உரை | ஆத்திசூடி கதைகள் | Speak nice and sweet | tamil kathaigal
கோவூரில் அருளப்பனும், சாந்தப்பனும் மளிகைக்கடையினை நடத்தி வந்தார்கள். அருளப்பன் கடை போட்டிருக்கும் பக்கத்துத் தெருவில் சாந்தப்பனின் கடை இருந்தது.
கோவூர் மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள ஊர். அதனால் இருவர் கடையிலுமே அமோகமாக வியாபாரம் நடைபெற்று வந்தது.
சில நாட்கள் கழித்து அருளப்பன் கடையில் வியாபாரமே நடக்கவில்லை. வாடிக்கையாளர்களில் நிறையப்பேர்கள் அருளப்பன் கடையில் பொருட்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டு சாந்தப்பனின் கடையையே நாடிச் சென்றார்கள்.
சாந்தப்பன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் வெகுநேரம் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.
சாந்தப்பனின் கடைக்கு தனது வாடிக்கையாளர்கள் எல்லோரும் செல்வது அருளப்பனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
ஒருநாள் தனது வாடிக்கையாளர் ஒருவர் சாந்தப்பனின் கடையை நோக்கி பையுடன் செல்வதைப் பார்த்த அருளப்பன் வேகமாக ஓடிச் சென்று அவரை வழி மறைத்து “ஐயா! நீங்கள் என் கடையில் பொருட்கள் வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டீர்களே! தினமும் சாந்தப்பனின் கடையை நோக்கியே செல்கின்றீர்களே! என்னை மறந்து விட்டீர்களா?” என்று பரிதாபமாகக் கேட்டான்.
அதனைக் கேட்ட வாடிக்கையாளர் “அருளப்பா! சாந்தப்பன் எல்லோருக்கும் இன்முகத்தோடு எடை பொருட்களை போட்டுக் கொடுத்து, வாடிக்கையாளர்களை அன்போடு வரவேற்று, அவர்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கேட்கும் பொருட்கள் எதுவானாலும்’ அதனை வரவழைத்து வாங்கிக் கொடுத்து அனுப்புகிறான்.
ஆனால் நீயோ, கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்களிடம் கடும் சொற்களைப் பேசி எரிந்து விழுகின்றாய் வாடிக்கையாளர்கள் தேவைப்படும் பொருட்களைக் கேட்டால் கூட, அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றாய்.
அப்படியிருக்கையில் உன்னிடம் யார் தான் பொருட்களை வாங்க வருவார்கள்? நீ வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொண்டால், சாந்தப்பனைப் போல உன் கடையிலும் வியாபாரம் நல்லபடியாக நடக்கும்.
பழைய வாடிக்கையாளர்களான நாங்களும் உன்னைத் தேடி வந்து பொருட்களை வாங்கிச் செல்வோம்” என்று கூறினார். வாடிக்கையாளரின் அறிவுரையைக் கேட்ட அருளப்பனின் புத்தி தெளிந்தது.
உடனே தன் கடைக்குச் சென்று தன்னைத் தேடி வருகின்ற வாடிக்கையாளர்களை அன்போடு வரவேற்று, அவர்களிடம் கனிவாகப் பேசி வியாபாரத்தை நடத்தினான்.
ஒரிரு நாட்களில் அருளப்பன் கடையில் முன்னை விட நன்றாக வியாபாரம் நடந்தது. வாடிக்கையாளர்களும் அவன் கடையை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.
நீதி:
எல்லோர் உள்ளமும் கனியும்படி அன்புடன் பேச வேண்டும்.