ஓதுவது ஒழியேல் | ஆத்திசூடி கதைகள் | Never stop learning | tamil kathaigal
பள்ளி விடுமுறை நாளில் சிறுவன் மாணிக்கம் அவசரமாக எங்கோ சென்று கொண்டிருந்தான். சிறுவன் மாணிக்கம் தெருவில் வேகமாக நடந்து செல்வதைக் கவனித்த அவன் நண்பர்கள் எல்லோரும் மாணிக்கத்தின் குறுக்கே ஓடி வந்தார்கள்.
“மாணிக்கம் இன்று நமக்கு பள்ளி விடுமுறை நாள்தானே! நீ எங்களோடு விளையாட வருவதை விட்டுவிட்டு வேறு எங்கோ அவசரமாக செல்கின்றாயே!” என்று கோபத்துடன் கேட்டார்கள்.
உடனே மாணிக்கம் “நண்பர்களே கோபப்படாதீர்கள். நாம் விளையாட்டில் ஆர்வமாக இருக்க வேண்டியதுதான். ஆனால் எந்த நேரத்திலும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கக்கூடாது, அது நம் வாழ்க்கையையே பாதிப்படையச் செய்துவிடும்.
அதனால் விளையாடுவதை சற்று குறைத்துவிட்டு நம் அறிவுக்கும் வேலை கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.
மாணிக்கத்தின் பேச்சு நண்பர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் குழப்பத்துடன் மாணிக்கத்தைப் பார்த்தார்கள். உடனே மாணிக்கம் “நண்பர்களே! நாம் வாழ்க்கையில் சராசரி நிலையிலேயே ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம் என்று இருக்கக் கூடாது.
நாம் வாழ்க்கையில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும். அப்போது தான் நாம் பிறந்ததற்கே ஓர் அர்த்தம் இருக்கும்” என்று கூறினான்.
மாணிக்கத்தின் பேச்சு மீண்டும் நண்பர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவே அவர்கள் மாணிக்கத்தைப் பார்த்து “நண்பனே! நீ சொல்வது ஒன்றும் எங்களுக்குச் சரியாக விளங்கவில்லை. நாங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாகத் தெளிவாகக் கூறேன்” என்றார்கள்.
அதனைக் கேட்ட மாணிக்கம் “நண்பர்களே! நாம் வாழ்க்கையில் வெற்றி பெற அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும். அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டுமானால் நல்ல புத்தகங்களைத் தேடிச் சென்று படிக்க வேண்டும்.
நமது ஊரில் இருக்கின்ற நூல் நிலையத்தில் ஏராளமான சிறந்த நீதி நூல்கள் இருக்கின்றன. அவற்றை நாம் படித்தால் நம்மிடையே நற்பண்புகள் வளரும்.
அந்த நற்பண்புகள் நமது உயர்ந்த லட்சியங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்து விடும். மேலும், உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையெல்லாம் படித்தால் நமக்குள்ளேயே தன்னம்பிக்கை வளரும்.
நம்மாலும் அரிய பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை நீதி நூல்கள் நமக்கு நல்லவிதமாக உணர்த்தும்” என்று கூறினான். மாணிக்கத்தின் நண்பர்களின் முகங்கள் எல்லாம் தெளிவடைந்தன.
அவர்கள் ஆவலுடன் மாணிக்கத்தைப் பார்த்து “நண்பனே! நீ கூறியதுபோல் நாங்களும் அறிவுக்கு வேலை கொடுக்க விரும்புகிறோம். இப்போதே உன்னோடு நாங்களும் நூல் நிலையத்திற்கு வருகிறோம்.
நீதி நூல்கள் பல படித்து நமது நற்பண்புகளை வளர்த்து நம்மாலும் ஒப்பற்ற சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை நம் ஊர் மக்கள் மத்தியில் நிரூபிப்போம்” என்று உறுதியுடன் கூறினார்கள்.
மாணிக்கம் உடனே தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு நூல் நிலையத்திற்குப் புறப்பட்டான்.
நீதி:
நல்ல நூற்களை நாடிச் சென்று படிக்க வேண்டும். வீணாக வாழக் கூடாது.