பருவத்தே பயிர்செய் | ஆத்திசூடி கதைகள் | Do things in the right time | tamil Story
பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.
இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.
மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.
அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.
சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.
அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.
அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.
இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.
நீதி:
பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.