மன்றுபறித்து உண்ணேல் | ஆத்திசூடி கதைகள் | Do not grab other’s land for your needs | tamil Story

மன்றுபறித்து உண்ணேல் ஆத்திசூடி கதைகள் | Do not grab other’s land for your needs | tamil story

கோவிந்தனூரில் மாதவன் என்பவர் வட்டிக்கடை வைத்திருந்தார். கிராமத்தில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் எல்லோரும் ஏதாவது பணக் கஷ்டம் ஏற்பட்டால் மாதவனிடம் சென்று பணம் வாங்கி வந்தார்கள்.

மாதவனும் அநியாய வட்டிக்கு அவர்களுக்குப் பணம் கொடுத்து வந்தான். மாதவன் அநியாய வட்டிக்குப் பணம் கொடுக்கின்றான் என்பது தெரிந்தும், மக்களும் வேறு வழியில்லாமல் மாதவனிடமே பணம் வாங்கி வந்தார்கள்.

மாதவனின் நண்பன் பெயர் சோமு. அதே கிராமத்தில் வசிக்கும் சோமு புளி வியாபாரம் செய்து வந்தான். புளி ஊர் ஊராக எடுத்துச் சென்று, மூட்டையை வியாபாரம் செய்து வந்தான்.

சோமு நல்ல உழைப்பாளி. ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் எல்லா ஊர்களுக்கும் சென்று வியாபாரம் செய்து பெரும் பணம் சம்பாதித்தான்.

tamarind-business
tamarind-business

ஒரு நாள் சோமு மாதவனைத் தேடி அவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் மாதவனோ வயிற்றுக் கோளாறினால் அவதிப்பட்டபடி படுத்த படுக்கையாக இருந்தான்.

சோமுவைப் பார்த்ததும் மெல்லத் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான், பின்னர் “நண்பா! ஒரு மாதமாக எனக்கு அடிக்கடி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் ஆகிறது. எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் என் நோய் குணமாகவில்லை.

இந்த நோய் எதனால் வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை” என்று கவலையுடன் கூறினான். அதனைக் கேட்ட சோமு “நண்பனே! உனக்கு அடிக்கடி நோய் ஏற்படும் காரணத்தை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினான்.

மாதவன் “நண்பா! நீ என்ன சொல்கிறாய்? என் நோய்க்கான காரணத்தைக் கண்டு பிடித்துவிட்டாயா?” என்று ஆவலோடு கேட்டான்.

உடனே அதற்கு சோமு “நண்பா! நீ இந்த ஊர் ஏழை மக்களிடமிருந்து அநியாயமாக வட்டிப் பணம் வாங்கி, அந்தப் பணத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றாயல்லவா! மக்கள் உழைத்து வாங்குகின்ற பணத்தை நீ அளவுக்கதிகமாக வட்டி என்ற பேரில் பறித்தபடி வயிறு வளர்ப்பதால் உனக்கு அடிக்கடி வயிற்றுக்கோளாறு ஏற்படுகிறது.

நான் புளி வியாபாரம் செய்வது போல், நீயும் ஏதாவது ஒரு வேலை செய்து உடல் உழைத்து வியர்வை சிந்தியபடி வாழ்ந்தால் உனக்கு இந்த மாதிரி நோயெல்லாம் ஏற்படாது” என்று கூறினான்.

அதனைக் கேட்ட மாதவன் மனம் திருந்தினான். தன் தவறை நினைத்து வருந்தி ஊர் மக்களிடம் வட்டி வாங்காமலேயே பண உதவி செய்தான். தன்னிடம் இருக்கின்ற பணத்தை வைத்துக் கொண்டு தானே வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.

நீதி:
அநியாயமாக வட்டிப்பணம் வசூலித்து வாழாமல் உடல் உழைப்பால் உழைத்து வாழ வேண்டும்.

Leave a Comment