நன்றி மறவேல் | ஆத்திசூடி கதைகள் | Do not forget timely help offered / gratitude | tamil story
ஆத்தியூரில் சுப்பையா என்பவர் வாழ்ந்து வந்தார். சுப்பையா கோடீஸ்வரர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தான தர்மம் செய்வதில் தலை சிறந்தவர்.
சுப்பையாவின் தானதர்மத்தை கேள்வியுற்று ஏராளமான மக்கள் அவரிடமிருந்து உதவி பெற்றுச் சென்றார்கள். சுப்பையாவும் தன்னைத்தேடி வருகின்றவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் தான தர்மங்களை செய்து வரலானார்.
நாட்கள் செல்ல செல்ல சுப்பையாவின் சொத்துக்கள் எல்லாம் தர்மங்கள் செய்தே குறைய ஆரம்பித்தன. சுப்பையாவோ அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மங்கள் செய்வதிலேயே கவனமாக இருந்தார்.
சில நாட்களில் சுப்பையாவின் சொத்துக்கள் எல்லாம் மற்றவர்களிடம் சென்று விட்டன. தனது வீடு, நிலம் எல்லாவற்றையும் கூட மற்றவர்களுக்கே தானம் செய்துவிட்டார்.
இவரிடமிருந்து உதவி பெற்றவர்களே சுப்பையாவின் பரிதாப நிலமையைக் கண்டும் கூட எந்தவித உதவியும் செய்ய முன் வராமல் சென்று விட்டார்கள். சுப்பையா தன் கையிலிருந்த பணத்தையும் இழந்து தங்குவதற்கு இடம் இல்லாமல் ஓர் சத்திரத்தின் அருகே வந்தார்.
அவர் கண்கள் இருண்டு, காதுகள் அடைத்து பசி மயக்கத்தில் மிகவும் தள்ளாடினார். அந்த நேரத்தில் சத்திரத்தில் ஒரு சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சுப்பையாவின் நிலமையைக் கண்ட அவர்கள் ஏதும் தெரியாதது போல், சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தார்கள். சுப்பையா மெல்ல மெல்ல சத்திரத்தின் திண்ணையோரம் நெருங்கினார்.
தன்னைக் கண்டு யாராவது உணவு தரமாட்டார்களா என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைப் பரிதாபமாகப் பார்த்தார். அந்த நேரம் சமையல்காரர் வேகமாக ஓடிவந்து சுப்பையாவை அடித்து விரட்டினார்.
“சாப்பாடெல்லாம் தீர்ந்து விட்டது போ… போ… இனிமேல் இந்தப் பக்கம் வராதே” என்று கூறியபடி பிடித்துத் தள்ளாத குறையாகக் கத்தினார். அந்த நேரம் சத்திரத்துக் காவலாளியானவர் சுப்பையாவைப் பார்த்துவிட்டார்.
அவர் உடனே பதறியபடி வேகமாக ஓடிவந்து சுப்பையாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் சமையல்காரரைப் பார்த்து “ஐயா! நன்றி கெட்டவர்களே! இந்த சத்திரம் இவர் பணத்தால் தான் கட்டப்பட்டது.
நீங்கள் கூட இவரிடம் எத்தனையோ முறை உதவி பெற்றுச் சென்றிருக்கின்றீர்கள்! உங்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்தே இவர் இந்த நிலமைக்கு ஆளாகிவிட்டார்.
ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள். நீங்களெல்லாம் மனித ஜென்மங்கள் இல்லை.
மிருகங்கள் கூட நன்றி உணர்ச்சியோடு வாழ்கின்றன. அந்த நன்றி உணர்ச்சி உங்களிடம் துளியளவும் இல்லை! உங்கள் முகத்தில் விழித்தாலே பாவம் வந்து சூழ்ந்து கொள்ளும்” என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.
சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நான் இதற்கு முன்னர் ஆத்தியூர் கோயிலில் காவலாளியாக வேலை செய்த நேரம் நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.
அப்போது எல்லாம் உங்களோடு பேச வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற சந்தர்ப்பம் சரியாக அமைந்ததில்லை. இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
உங்களோடு பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கினார்.
“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமிருந்து உதவி பெற்றவர்கள் எல்லோரும் என்னை மறந்துவிட்டபோது, இதுவரையிலும் என்னிடமிருந்து எந்த உதவியையும் பெறாத நீ எனக்கு உதவி செய்தாயே! மிக்க மகிழ்ச்சி.
நன்றி உணர்ச்சி நிறைந்தவர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்காக வேண்டி வானம் மழையைப் பொழிகின்றது என்று நினைக்கிறேன்” என்க் கூறினார்.
நீதி:
ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.