அஃகம் சுருக்கேல் | ஆத்திசூடி கதைகள் | Do not be stingy in selling food grains | tamil kathaigal
மகாதேவனின் எண்ணெய்க் கடையில் எந்த நேரமும் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வந்தது. வாடிக்கையாளர்கள் தன் கடைக்கு அதிகமாக வருவதை கவனித்த மகாதேவன், அவர்களிடமிருந்து அதிகமாகப் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்று திட்டமிட்டான்.
அதனால் எண்ணெய் வியாபாரத்தோடு அரிசியும், பருப்பும் சேர்த்து வியாபாரம் செய்தான். மகாதேவன் எதிர்பார்த்தபடியே வியாபாரம் அமோகமாக நடைபெறத் துவங்கியது.
வியாபாரம் நன்கு நடப்பதை கவனித்த மகாதேவன், எண்ணெய், அரிசி, பருப்பு முதலியவற்றில் கலப்படம் செய்து விற்க ஆரம்பித்தான்.
ஒரு கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு நூறு கிராம் எடையைக் குறைத்துக் கொடுத்தான். எண்ணெய்யிலும் அளவைக் குறைத்து விற்பனை செய்தான். மகாதேவனின் வியாபார முறை கேடுகள் நாட்பட, நாட்பட மக்களுக்குத் தெரியத் தொடங்கின.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து மகாதேவனைக் கண்டித்து, நியாயமான முறையில் பொருட்களை விற்பனை செய்யும்படி கூறினார்கள். மகாதேவனோ அவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் எடையைக் குறைத்தே பொருட்களை விற்பனை செய்தான்.
மகாதேவனின் கடையை விட்டால் வேறு கடையில் பொருட்களை வாங்க வழியில்லாததால் வேறு வழியில்லாத கிராம மக்கள் மகாதேவனைத் திட்டிக் கொண்டே அவன் கடையில் பொருட்களை வாங்கினார்கள்.
மகாதேவன் பொதுமக்களின் கஷ்டத்தை உணராமல் பணம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்து வந்தான்.
ஒருநாள் இரவு நேரம் மகாதேவனின் கடைக்குள் திருடர்கள் புகுந்துவிட்டார்கள். கடையில் இருந்த பணம், அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.
மறுநாள் காலையில் கிராமத்து மக்கள் எல்லோருமாக மகாதேவனின் கடையின் முன்னே கூடிவிட்டார்கள். தன் கடைப்பொருட்கள் எல்லாம் திருட்டுப் போய்விட்டதை அறிந்த மகாதேவன், அலறி அடித்துக் கொண்டு கடையை நோக்கி ஓடி வந்தான்.
வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு “ஐய்யோ… அம்மா..!” என்று அழ ஆரம்பித்தான். அதனைப்பார்த்த கிராமத்து மக்களுக்கு சிரிப்புதான் வந்தது.
மகாதேவனைப் பார்த்த அவர்கள் “மகாதேவா! நேர்மையான முறையில் நீ வியாபாரம் செய்திருந்தால் உனக்கு சொந்தமான பொருட்களை நீ இழந்திருக்கமாட்டாய்!
நீ எங்களை ஏமாற்றி பொருட்களை எடை குறைத்து வியாபாரம் செய்து அநியாயமாக பணம் சம்பாதித்ததால், உன் முதலும் அநியாயமாக திருட்டுப்போய் விட்டது, இனிமேலாவது நியாயமான முறையில் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்” என்று கூறினார்கள். கிராமத்து மக்களின் அறிவுரைகளை மகாதேவனும் ஏற்றுக் கொண்டான்.
நீதி:
பொருட்களை அளவு குறைத்து விற்பனை செய்தால் துன்பம் நேரிடும்.