தந்தை தாய்ப்பேண் | ஆத்திசூடி கதைகள் | Care and protect your parents | tamil story
கோவிந்தன் அந்த ஊர் பள்ளியில் படிக்கின்ற மாணவன். ஆசிரியர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் அன்போடும் மரியாதையோடும் பழகிவருபவன்.
வகுப்பறையில் மற்ற மாணவர்களை விட எல்லாப் பாடத்திலுமே முதன்மையாக தேர்ச்சி பெறுபவன். ஆனால் கோவிந்தன் தினமும் பள்ளிக்கு வருகின்ற வேளையில் ஒருநாள் கூட முன்னதாக வருவதேயில்லை.
பள்ளியில் மணி ஒலித்த பின்னரே வகுப்பறைக்கு வருவான். பல நாட்களாக கோவிந்தன் காலம் கடந்து பள்ளிக்கு வருவதைக் கண்டு வகுப்பாசிரியருக்கே ஆச்சர்யமாகயிருந்தது.
ஒருநாள் கோவிந்தனை அழைத்த
வகுப்பாசிரியர் “கோவிந்தா ! நீ ஏன் தினமும் காலம் தவறி பள்ளிக்கு வருகின்றாய்? குறித்த நேத்தில் உன்னால் பள்ளிக்கு வர முடியாதா?” என்று கேட்டார்.

அதனைக் கேட்ட கோவிந்தன் வகுப்பாசிரியருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு “ஐயா! நான் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவன். என் தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கின்றார்.
என் அம்மாவோ அதிகாலையிலேயேW எழுந்து கூலி வேலைக்குச் சென்று விடுவார்கள். என் தந்தைக்குப் பணிவிடைகளைச் செய்து முடித்த பின்னர் தான் பள்ளிக்குப் புறப்பட்டு வருகிறேன்.
என் தாயார் வேலை செய்து கொண்டு வருகின்ற கூலிப்பணத்தில் தான் எங்கள் குடும்பம் வறுமையில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் என் தாயாருக்கு அதிகம் சிரமம் கொடுக்காமல் வீட்டு வேலைகளையும் நானே கவனித்து வருகிறேன்.
எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு வகுப்பறைக்கு வருகின்ற நேரம் பள்ளியில் மணி அடித்தாகிவிடுகிறது. நான் பள்ளிக்கு கால தாமதமாக வருவதற்கு இதுவே காரணம்” என்று கூறினான் மாணவன் கோவிந்தன்.
வகுப்பாசிரியர் கோவிந்தனை உற்றுப் பார்த்தார். கோவிந்தனின் பேச்சைக் கேட்டு அவர் கண்கள் கலங்கிவிட்டன.
“கோவிந்தா! இத்தனை நாட்களாக நீ வேறு ஏதோ ஒரு காரணத்தினால் தான் வகுப்பறைக்கு காலம் தவறி வந்து கொண்டிருக்கிறாய் என்று உன் மீது கோபம் கொண்டேன். இப்போது உன்னைப் பார்த்து உன் நிலைமையைப் புரிந்து கொண்ட பின்னர்தான் உண்மை நிலையை அறிந்து கொண்டேன்.
உன் தந்தையாரின் நோயை குணப்படுத்துவதற்கு எனக்குத் தெரிந்த மருத்துவர் மூலம் ஏற்பாடு செய்கிறேன். நீ படிப்பதற்கு வேண்டிய உதவிகளை பள்ளி நிர்வாகமே செய்யும்படியாக ஏற்பாடு செய்கிறேன்.
நீ உனது தந்தையையும், தாயையும் நல்லபடியாக கவனித்து வந்ததால் இத்தனை உதவிகளும் உனக்குக் கிடைக்கப்போகின்றன.
இனிமேல் நீ கவலையில்லாமல் நன்றாகப் படிக்கலாம்” என்று கூறினார். கோவிந்தன் வகுப்பாசிரியரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

“ஐயா! இத்தனை நாட்களாக என் கஷ்டத்தை யெல்லாம் எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு இருந்தேன். இன்று உங்கள் மூலம் எனது கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறந்துவிட்டது.
இனிமேல் நான் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பாடுபட்டு மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெறுவேன்” என்று உறுதியுடன் கூறினான்.
நீதி:
தந்தையையும், தாயையும் பேணிப் பாதுகாத்தால் நலமுடன் வாழலாம்.