எண் எழுத்து இகழேல் | ஆத்திசூடி கதைகள் | Number writing should not be lost | Tamil kathaigal
மாலையப்பனும், மணிகண்டனும் பள்ளி நண்பர்கள். இருவரும் அந்த ஊரில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள்.
மாலையப்பன் பள்ளிக்குக் காலம் தவறாமல் சென்றுவிடுவான் பள்ளியிலும், வீட்டிலும் எப்போதும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து படிப்பிலும் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வரலானான்.
மணிகண்டனோ படிப்பில் அக்கறையில்லாமல் வீணாகப் பொழுதைக் கழிக்கலானான். வகுப்பறைக்கு ஒழுங்காக வருகை தரமாட்டான்.
வீட்டில் பெற்றோர்களிடம் பள்ளிக்குச் செல்வதாகப் பொய் கூறிவிட்டு, அந்த நேரத்தில் பொழுதுபோக வேண்டிவேறு எங்கோ சென்று விடுவான்.
தான் ஒரு பள்ளி மாணவன் என்பதையே மறந்து கடமைகளை சரிவரச் செய்யாமல் காலம் கடத்தலானான்.
நண்பன் மணிகண்டனின் போக்கைக் கண்டு மாலையப்பன் மிகவும் கவலையடைந்தான் ஒருநாள் மணிகண்டனை அழைத்த மாலையப்பன்.
“நண்பா! நீ பள்ளிக்கு வராமலும், பாடத்தைப் படிக்காமலும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றாயே! படிக்கும் காலத்தை நீ பயனுள்ளதாக ஆக்காவிட்டால் பின்னாளில் மிகவும் கஷ்டப்பட வேண்டிய தாயிருக்கும்.
அதனால் நீ வகுப்பறைக்கு ஒழுங்காக வந்து பாடங்களை முறையாகப் படித்து நல்ல மாணவனாக உன்னை மாற்றிக்கொள். நீ படிக்கும் கல்வியை மதித்து வாழக் கற்றுக்கொள்” என்று அறிவுரை கூறினான்.
அதனைக்கேட்ட மணிகண்டன் மாலையப்பனை வெறுப்போடு பார்த்தான். “நண்பா! நம் நட்பினை பேச்சு அளவிலும், விளையாட்டு அளவிலும் வைத்துக் கொள்வோம்.
இந்த மாதிரி அறிவுரை கூறும் வேலைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் வேண்டாம்” என்று கூறினான். முகத்தில் அடித்தாற்போல் தன் நண்பன் மணிகண்டன் கூறிய வார்த்தைகள் மாலையப்பனுக்கு மன வருத்தத்தைக் கொடுத்தன.
மணி இனிமேலும் நண்பனிடம் பேசி எந்தப் பயனுமில்லை. அவன் விருப்பப்படியே விட்டு விடுவோம் என்று முடிவு செய்துவிட்டான்.
காலங்கள் கடந்தன. மணிகண்டனும், மாலையப்பனும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் சென்றார்கள்.
இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கின்ற போதும் மணிகண்டனின் கெட்ட குணங்கள் மாறவில்லை.
பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றியது போல், கல்லூரியிலும் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தான் மணிகண்டன். மணிகண்டனின் ஒழுக்கமற்ற செயல்களைக் கவனித்த கல்லூரி நிர்வாகிகள், அவனை கல்லூரியை விட்டே நிறுத்தி விட்டார்கள்.
ஊருக்குள்ளும் மணிகண்டனின் தீய நடவடிக்கைகளினால் அவனின் பெற்றோர்களுக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது. அதனால் மணிகண்டனை அழைத்துக் கொண்டு, அவன் பெற்றோர்கள் ஊரை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
மணிகண்டன் ஊரை விட்டுச் சென்றதால் மாலையப்பனுக்கு மணிகண்டனை சந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. காலச்சக்கரம் வேகமாக உருண்டோடியது .
மாலையப்பன் தன் அறிவாலும், திறமையாலும், முயற்சியாலும் படித்து பட்டம் பெற்று தொழிலதிபராகி தொழிற்சங்க அதிகாரியாகிவிட்டான்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்ற ஒரு தொழிற்சாலையில், ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
விழாவிற்குத் தலைமை விருந்தினராக மாலையப்பன் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி முடிந்த பின்னர் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கத் தொடங்கினார்.
அந்த நேரம் ஒரு தொழிலாளியைக் கண்ட மாலையப்பன் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த தொழிலாளியும் மாலையப்பனை அடையாளம் கண்டு கொண்டார்.
இனிப்புகளை வழங்கி முடித்த மாலையப்பன் தனக்கு தனியாக ஒதுக்கப்பட்ட அறைக்கு அந்த தொழிலாளியை அழைத்து வருமாறு தொழிற்கூட நிர்வாகிக்கு கட்டளையிட்டார்.
அடுத்த நிமிடம் மாலையப்பனின் முன்னே அந்த தொழிலாளி நிற்க, உடனே வேகமாக ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொண்டார் மாலையப்பன்.
“நண்பா! மணிகண்டா! நலமாக இருக் கின்றாயா?” என்று அன்போடு கேட்டார்.
அதனைக்கேட்ட தொழிலாளியான மணிகண்டனோ கண்ணீர் வடித்தார்.
“நண்பா! என்னை மன்னித்துவிடு. நீ பள்ளியில் படிக்கின்ற போதே எனக்கு அறிவுரை கூறினாய் அதனை ஏற்க நான் மறுத்துவிட்டேன். கல்லூரிப் படிப்பிலும் கூட என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்.
கல்வி கற்பதன் பயனை இப்போதுதான் நான் உணர்கிறேன். நீ நன்றாகப் படித்ததினால், இன்று தொழிற்சங்க அதிகாரியாகிவிட்டாய். கல்வியை நான் நிராகரித்து விட்டதால் சாதாரண தொழிலாளியாகவே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டடது” என்று வருத்தத்துடன் கூறினார்.
மாலையப்பன் மணிகண்டனை ஆறுதல் படுத்தினார். “மணிகண்டா! எண், எழுத்து, கல்வி இவற்றையெல்லாம் நி உணராமல் வாழ்ந்ததால் இந்த துன்பத்தை அடைந்திருக்கிறாய்.
இதனை நீ அறிந்து கொள்ளவே இத்தனைக் காலங்கள் கடந்து நாம் ஒன்றாக சந்திக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார்.
மணிகண்டனும் “உண்மைதான் நண்பா! கல்வியின் பெருமையை நான் உணர்ந்து கொண்டேன். கல்வி கற்காமல் வாழ்பவருடைய வாழ்க்கை நிலை எப்படியிருக்கும் என்பதையும் அனுபவத்தில் நன்றாக உணர்ந்து கொண்டேன்” என்று கூறினார்.
நீதி:
எண், எழுத்து ( கணக்கு , கல்வி ) இரண்டையும் புறக்கணிக்காமல் கசடற கற்க வேண்டும்.