காந்தியும் குமரேசனும் | Gandhi and Kumarasana | Tamil kathaigal

காந்தியும் குமரேசனும் | Gandhi and Kumarasana | tamil kathaigal

குமரேசன் அவன் அப்பா மாரியுடன் மார்க்கெட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் அப்பா ஒவ்வொரு மீன் வகைகளையும் கூறுகளாகப் பிரித்துக் கொண்டிருந்தார்.

“டேய் குமரேசு போய் ஒரு கட்டு காஜா பீடி வாங்கிட்டு வாடா” என்றார்.

“போப்பா முடியாது. நீ போய் வாங்கிக்க புகை பிடிச்சா கேன்சரு வந்திடும்னு வாத்தியாரு சொல்லியிருக்காரு.”

“கம்னாட்டி பெரிய கலெக்டரு மவன் கேன்சரு எனக்குத்தானே வரும் போய் வாங்கிட்டு வாடா” என்றான் மாரி மறுபடியும்.

“முடியாதுப்பா இத எல்லாம் பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்துருக்கோம்” என்றதும் மாரிக்கு கோபம் வந்தது.

திரும்பவும் கேட்டான் “நான் வியாபாரத்த பாக்கணும் போறியா… மாட்டியா”

முடியாதுப்பா.. என்றதும் சட்டென்று குமரேசனை காலால் உதைத்தான்.
எதிர்பார்க்காத குமரேசன் நிலைதடுமாறி அப்படியே குப்புற விழுந்து ‘அம்மா’ என்று கத்தினான்.

பெயர்ந்த சிறுசிறு ஜல்லிகள் முளைவிட்டிருந்த தரை அது. அதில் குமரேசன் முகம் மோதி கண்ணுக்கு அருகில் உதட்டில் என கிழிந்து ரத்தம் கொட்டியது.

“என்னய்யா மனுசன் நீ, இப்படியா உனக்கு கோவம் வரும்” என்று காய்கறிக்கடை போட்டிருந்த ஒரு பெண் ஓடிவந்து குமரேசனைத் தூக்கினாள்.

முகமெங்கும் ரத்தம் வழிந்தது. “சாவட்டும் கம்னாட்டி பயபுள்ள ஒரு வேலை சொன்னா கேக்க மாட்டேங்குது. எதுத்து எதுத்து பேசுது. பெரிய மயிறு படிப்பு படிக்குது. ஆறாம் கிளாஸ் படிக்கும் போதே அப்பனை மதிக்கமாட்டேங்குது” என்றான்.

எல்லோரும் மாரியைத் திட்டினார்கள், “புள்ள முகத்தப் பாரு ரத்தமா வழியுது. ஆசுபத்திரிக்கு அழைச்சிட்டு போங்க” குமரேசனை யாரோ அழைத்துக் கொண்டு போனார்கள்.

டாக்டர் கேட்டார், “எங்கடா விழுந்தே? எங்கப்பா உதைச்சு தள்ளிப்புட்டாரு அடிப்பட்டுடுச்சு”

“உங்கப்பா என்ன வேலை செய்யறாரு”.

“மீன் புடிச்சி விக்கிறாரு மார்க்கெட்ல”.

“நீ ஏன் மார்கெட்டுக்கு வந்தே” அவனுக்கு ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டுக்கொண்டே கேட்டார் டாக்டர்.

“ஸ்கூல்ல கட்டுரை நோட்டு சாரு கேட்டாரு. மீன் வித்து வாங்கித்தாரேன்னு எங்கப்பாதான் அழைச்சிட்டு வந்தாரு” என்றான்.

“எதுக்கு உங்கப்பா உதைச்சாரு”.

“பீடி வாங்கிட்டு வர சொன்னாரு முடியாதுன்னேன். அதுக்காக ஒதச்சாரு பீடி பிடிச்சா கேன்சரு வரும்னு எங்க சார் சொன்னாரு.
அவங்க அப்பா அப்படித்தான் செத்தாருன்னு சார் சொன்னாரு. அதை பாக்கவும், தொடவும் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கோம் பசங்க எல்லாரும்”
என்றான்.

“வெரிகுட்” என்று அவனைத் தோளில் தட்டியபடி டாக்டர் போய்விட்டார்.

குமரேசனும், அவனுடன் சென்றவர்களும் மருத்துவமனை விட்டு வெளியே வந்தார்கள். விசயம் கேள்விப்பட்டு குமரேசனின் அம்மா தனம் ஓடிவந்தாள்.

“என்னடா ஆச்சு?” என்று பதறிப்போய் கேட்டாள்.

“ஒண்ணும் இல்லம்மா அப்பா ஒதச்சிட்டாரு.”

“சரி நீ ஸ்கூலுக்கு போ” என்றாள்.

“கட்டுரை நோட்டு வாங்கணும்மா” என்றான்.

தனம் மாரிக்கு அருகில் போய் மீன்கள் கிடந்த ரெக்சின் சீட்டைத் தூக்கி அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.

“எதுக்குடி பணத்தை எடுக்கறே?” என்றார் மாரி கோபமாய் பீடிப் புகையை விட்டபடி,

“அவனுக்கு நோட்டு வாங்க” என்றாள் தனம்.

“பெரிய கலக்டரு படிப்பு படிக்குது. போ நோட்டு வாங்கிக் குடு” என்றான்.

“கலக்டருக்குத்தான் படிக்கப்போறான்.. உன்ன மாதிரி பீடி வலிச்சுக்கிட்டு மீன் விக்க சொல்றியா..” என்று கேட்டபடி வந்து பணத்தை குமரேசன் கையில் கொடுத்து “நோட்டு வாங்கிட்டுப் போ” என்றாள்.


வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லோரும் கேட்டார்கள் “ன்னடா குமரேசு ஆச்சு. கீழே விழுந்திட்டேன்” என்றான்.


வகுப்பு தொடங்கியதும் வாத்தியார் வந்து வருகைப் பதிவேடு எடுக்கையில் குமரேசன் பெயரைக் கூப்பிட்டதும் எழுந்து வணக்கம் சொன்னான். நெற்றி வலித்தது. முகமெங்கும் வீங்கிக் கிடந்தது. முனகியபடி ‘உள்ளேன் ஐயா’ என்றான்.

குரல் சரியாக விழாததால் வாத்தியார் நிமிர்ந்து குமரேசனைப் பார்த்தார்.
“இங்க வாடா” என்றார்.

அருகே போனான் “என்னடா ஆச்சு? அடிபட்டுடிச்சி சார்” என்றான்.

“எப்படி அடிபட்டுச்சி?” விவரம் சொன்னான்.

கேட்டதும் வாத்தியார் முகம் மலர்ந்தது. உடனே மாணவர்களைப் பார்த்து சொன்னார். “குமரேசன் மாதிரிதான் இருக்கணும் உறுதிமொழிப்படி நடந்திருக்கான். இப்படித்தான் தீய செயல்களை எதிர்த்து நிக்கணும்.
யார் செஞ்சாலும் தப்புத்தான் அப்பாவா இருந்தாலும் சரிதான் காந்தி இப்படித்தான் போராடுனாரு. நான் குமரேசனைப் பாராட்டறேன். எல்லாரும் கை தட்டுங்க”
என்றார்.

எல்லாரும் கைதட்டினார்கள் குமரேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வலி குறைந்தது போலிருந்தது.


Leave a Comment