டாக்டர் டூலிட்டிலும் விநோத விலங்கும் – தமிழ் கதைகள் | Strange animal in Doctor Dolittle – tamil kathaigal

டாக்டர் டூலிட்டிலும் விநோத விலங்கும் | Strange animal in Doctor Dolittle | tamil kathaigal

டாக்டர் டூலிட்டில் விலங்குகளை மிகவும் நேசிப்பவர். அதனால் அவர் மனித மருத்துவர் ஆகாமல் விலங்குகளை குணப்படுத்தும் மருத்துவர் ஆனார்.

அவருக்கு ” கீ கீ ” என்ற ஒரு குரங்கு நண்பனாக இருந்தது. அது அவரை ஆப்பிரிக்கா காட்டில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட குரங்குகளைக் காப்பாற்ற விரும்பி அழைத்தது.

அங்கு செல்ல நீண்ட கடல் பயணத்தை மேற்கொண்டார் மருத்துவர் டூலிட்டில். அந்தக் காட்டில் இருந்த குரங்குகளை நல்ல முறையில் குணப்படுத்தினார்.

பிறகு தான் சொந்த ஊரில் இருக்கும் தனது வீட்டுக்கு திரும்பிப் போக வேண்டும் என குரங்குகளிடம் சொன்னார். அதைக் கேட்ட குரங்குகள் வருத்தம் அடைந்தன.

அந்த மருத்துவர் வாழ்க்கை முழுவதும் தங்களுடன் தங்கி இருக்கப் போவதாக குரங்குகள் நினைத்திருந்தன. அதனால் அன்று இரவு குரங்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இதைப் பற்றிக் கூடிப் பேசின.

“ஒரு நல்ல மனிதர் இங்கிருந்து ஏன் போகவேண்டும் ? நம்முடன் இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சியாக இல்லையா?” என்று தலைமை குரங்கான சிம்பன்சி குரங்கு எழுந்து சொன்னது.

monkey gang tamil kathaigal
monkey gang tamil kathaigal

” நாம் எல்லோரும் கூட்டமாகப் போய் மருத்துவர் டூலிட்டிலை இங்கேயே தங்கச் சொல்வோம் .நாம் அவருக்காக ஒரு அழகிய வீட்டைக் கட்டுவோம்.

படுப்பதற்கு சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிலைச் செய்வோம். அவருக்கு எடுபிடியாக இருப்பதற்கு நிறையக் குரங்குகளை வேலைக்கு அமர்த்தலாம்.

இவரை இங்கு மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம் இப்படி எல்லாம் செய்தால் ஒருவேளை அவர் மனசுமாறி நம்முடன் வாழ சம்மதிக்கலாம்” என்று பெரிய கொரில்லா எழுந்து சொன்னது.

கீ… கீ… மெதுவாக எழுந்தது . மற்ற குரங்குகள் ரகசியமாக கிசுகிசுத்தன, “ஸ்…! நன்கு கவனியுங்கள்! மருத்துவர் டூலிட்டிலின் நண்பனான கீ… கீ… பேசப்போகிறது.”

” கீ… கீ… ” அமைதியாக மற்ற குரங்குகளைப் பார்த்துச் சொன்னது, “இனிய நண்பர்களே , மருத்துவரை இங்கு தங்குமாறு வற்புறுத்த வேண்டாம். ஏனெனில் ஊரில் அவருக்கு கடன் இருக்கிறது.

பணத்தை அவர் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்பியே ஆக வேண்டும்.”

குரங்குகள் கும்பலாக எழுந்து ஆச்சர்யமாகக் கேட்டன, “பணம் என்றால் என்ன?”

” கீ… கீ… ” அவர்களிடம் சொன்னது, “மனிதர்கள் வாழும் ஊர்களில் பணம் இல்லாவிட்டால் எதையும் வாங்க முடியாது, அங்கு பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது. பணம் இல்லாவிட்டால் மனிதர்களின் ஊர்களில் வாழவே முடியாது.”

குரங்குகள் மீண்டும் கேட்டன, “பசித்தால் சாப்பிடவும், தாகம் வந்தால் தண்ணீர் குடிக்கவும் கூட அங்கு பணம் தேவைப்படுமா!”

” கீ… கீ… ” மெதுவாகத் தலையை அசைத்தது. சிம்பன்சி குரங்கு திரும்பி வாலில்லாக் குரங்கிடம் சொன்னது. “சகோதரனே, இந்த மனிதர்களெல்லாம் விசித்திரப் படைப்புகளாக இருக்கிறார்களே! அவர்கள் வாழும் இடத்தில் இருக்க யார் விரும்புவார்கள்? அற்பமான பிறவிகள்!”

” கீ… கீ… ” சொன்னது, “நாங்கள் இருவரும் காட்டுக்கு கடல் கடந்துவர எங்களிடம் படகு கூட கிடையாது. அதனால் தெரிந்த நபர் ஒருவரிடம் படகு வாங்கினோம்.

அதில் பயணம் செய்து ஆப்பிரிக்கக் கரையை அடைந்தவுடன் பாறையில் மோதி படகு உடைந்துபோனது. படகுக்கு சொந்தக்காரன் ஒரு ஏழை அவனுக்குத் திரும்பப் படகு வாங்கித் தரவேண்டும்.

மேலும் உணவுச் செலவுக்காக வேறு ஒருவரிடமும் பணத்தை கடன் வாங்கி இருக்கிறோம் அதையெல்லாம் நாங்கள் திரும்பக் கொடுக்க வேண்டும்.”

குரங்குகள் மவுனமாக அமர்ந்து இருந்தன. அதற்கு மேல் அவற்றுக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை.

கடைசியாக பெரிய கொரில்லாக் குரங்கு எழுந்து சொன்னது, “மருத்துவர் டூலிட்டில் நமக்கு அற்புதமான சேவைகள் செய்து உள்ளார்.

அவரை நாம் வெறுங்கையோடு இங்கிருந்து அனுப்பக்கூடாது. நம் குரங்குக் கூட்டத்தின் நன்றியைக் காட்ட நாம் அவருக்கு ஒரு சிறந்த அன்பளிப்பு வழங்க வேண்டும்” என்று.

மரக்கிளையில் அமர்ந்து கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த சிறிய சிவப்புக் குரங்கு சத்தமாகச் சொன்னது, “நானும் அதையே நினைத்தேன்.”

குரங்குகள் அனைத்தும் ஒருமித்துக் கூறின, ஆம், ஆம் எந்த மனிதனிடமும் இல்லாத ஒரு சிறந்த அழகான அன்பளிப்பை நாம் மருத்துவர் டூலிட்டிலுக்கு வழங்க வேண்டும்.

உடனே ஒவ்வொரு குரங்கும் மற்ற குரங்குகளிடம் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டன. என்ன பரிசு தரப்போகிறோம் ஒரு குரங்கு சொன்னது.

“ஐம்பது பை நிறைய தேங்காய்கள் தரலாம்.”

மற்றொன்று சொன்னது. “நூறு குலைகள் வாழைப்பழங்கள் தரலாம். அவர் வசிக்கும் ஊரில் பணம் கொடுத்தால் தான் அதை அவர் சாப்பிடவே முடியும்.”

” கீ… கீ… ” சொன்னது, “அதையெல்லாம் இங்கிருந்து கொண்டு போவது பெரிய சுமை. மேலும் ஊர் போவதற்குள் பாதிப் பழங்கள் அழுகிக் கெட்டுவிடும்.”

பிறகு மெதுவாக கீ… கீ… சொன்னது, “வேண்டுமானால் நீங்கள் அவருக்கு ஒரு விலங்கைப் பரிசாகத் தாருங்கள் அவர் விலங்குகளிடம் அன்பு செலுத்துபவர்.

ஆனால் அவருக்கு நீங்கள் தரப்போகும் விலங்கு மிருகக் காட்சி சாலைகளில் காண முடியாததாக இருக்கவேண்டும்”

உடனே குரங்குகள் ஆச்சர்யத்துடன் கேட்டன. “மிருகக் காட்சிசாலை என்றால் என்ன?”

“கீ… கீ… ” விளக்கிச் சொன்னது. “மிருகக் காட்சிசாலை மனிதர்கள் வாழும் நகரங்களில் இருக்கும்.

அங்கே விலங்குகளை கூண்டுகளில் அடைத்து காட்சிக்கு வைத்து இருப்பார்கள் மனிதர்கள் கூட்டமாக வந்து அவற்றைக் கண்டு களிப்பார்கள்.”

இதைக்கேட்டு குரங்குகள் அதிர்ச்சியடைந்து ஒன்றுக் கொன்று பேசிக்கொண்டன. “ச்சே ! இந்த மனிதர்கள் சிந்தனையற்ற முட்டாள்கள் . கருணை இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள்.”

பிறகு முன்பு யாரும் பார்த்திராத எந்தவித அதிசயமான விலங்கை மருத்துவர் டூலிட்டிலுக்கு பரிசாகத் தரலாம் என ” கீ… கீ… ” யிடம் மற்ற குரங்குகள் கேட்டன.

” கீ – கீ ” மவுனமாக இருந்தது. உடனே ஒரு குரங்கு எழுந்து சொன்னது. “மலை உடும்பு பரிசாகத் தரலாம்.”

” கீ – கீ ‘ சொன்னது, “அது லண்டன் மிருகக் காட்சி சாலையில் இருக்கிறது.”

மற்றொரு குரங்கு சொன்னது, “ராட்சத வெள்ளை எறும்பு பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?”

” கீ – கீ ” உடனே “அது பெல்ஜியத்தில் கூட இருக்கிறது. பார்த்து இருக்கிறேன்” என்றது.

வேறொரு குரங்கு “ஆமாம், நீங்கள் புஸ்மீ புல்யூ பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டது.

” கீ – கீ ” மகிழ்வுடன் “இல்லை. எந்த மனிதரும் பார்க்காத விலங்கு புஸ்மீ புல்யூ தான். அதையே மருத்துவர் டூலிட்டிலுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அவர் மிகவும் மகிழ்வார்.”

புஸ்மீ புல்யூ அழிந்து போய் விட்ட விலங்கினம், ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளில் மிகவும் அரிதாக ஒன்றே ஒன்று காணப்படலாம்.

புஸ்மீ புல்யூ என்ற அந்த விலங்கிற்கு வால் கிடையாது. ஆனால் இரண்டு பக்கமும் தலை இருக்கும்.

pushmi-pullyu tamil kathaigal
pushmi-pullyu tamil kathaigal

இரண்டு தலைகளிலும் கூர் கொம்புகள் இருக்கும். அந்த விலங்கு மிகவும் கூச்ச சுபாவம் கொண்டது.

அதை யாராலும் பிடிக்கவே முடியாது. ஆனாலும் காட்டுவாசிகள் தந்திரமாக அவைகளைப் பிடித்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் புஸ்மீ புல்லியூவை பிடிப்பது மிக மிக கஷ்டம் தான். ஏனெனில் அதற்கு இரண்டு தலைகள் இருப்பதால் நான்கு புறமும் கவனித்தபடியே மேய்ச்சலில் இருக்கும்.

மேலும் அதனுடைய ஒரு தலை தூங்கிக்கொண்டு இருக்கும் சமயத்தில் மற்ற தலையின் கண்கள் கொட்ட கொட்ட விழித்தபடியே இருக்கும். அதனால் அதை யாராலும் பிடிக்க முடியாது.

அந்த விலங்கை நீங்கள் மிருகக் காட்சி சாலையில் ஒருக்காலும் பார்த்திருக்கவே முடியாது.

பல பெரிய வேட்டைக்காரர்களும், புத்திசாலித் தனம் மிக்க மிருகக் காட்சி சாலை நிபுணர்களும் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணாக்கி அடர்ந்த காடுகளின் உட்புறங்களில் பல்வேறு தட்ப வெப்பநிலைகளில் சுற்றித் திரிந்திருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு புஸ்மீ புல்யூ கூட அவர்களிடம் அகப்படவில்லை. அது மட்டுமே இந்த உலகத்தில் இரண்டு தலைகள் இருக்கும் அபூர்வ விலங்கு.

குரங்கு கூட்டங்கள் ஒன்றுசேர்ந்து புஸ்மீ புல்யூவை பிடிக்க பயணப்பட்டன. பலநூறு மைல்கள் இருண்ட காடுகளில் சுற்றி அலைந்தன.

ஒரு நதிக் கரையில் விநோதமான பாதச்சுவடுகள் இருப்பதை ஒரு குரங்கு கண்டு கொண்டது. புஸ்மீ புல்யூ இங்கே எங்கேயோ அருகில் தான் இருக்கவேண்டும் என குரங்குகள் தீர்மானித்தன.

அவை நதிக்கரையில் சிறிது தூரம் நடந்தன. ஓரிடத்தில் வளர்ந்த கட்டைப் புற்கள் காணப்பட்டன. அதன் உள்ளேதான் அது இருக்கவேண்டும் என நினைத்தன.

குரங்குகள் எல்லாம் கைகளை இணைத்துக் கொண்டு, அந்த புல் வெளியைச் சூழ்ந்து பெரிய வட்டமாகச் சுற்றி நின்றன. புஸ்மி புல்யூ அவர்களின் வருகையை அறிந்து கொண்டது.

குரங்குகளின் வட்டத்தைப் பொத்துக் கொண்டு வெளியே வர முயற்சி செய்தது. ஆனால் அது தப்பிக்க முடியவில்லை.

குரங்குகளிடமிருந்து தப்பிக்க முயற்சிப்பது வீணான வேலை என்றும் தெரிந்து கொண்டது. அது அப்படியே தரையில் அமர்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று காத்திருந்தது.

“நீ மருத்துவர் டூலிட்டிலுடன் சேர்ந்து அவரது நாட்டுக்குப் போக விருப்பமா?” என்று குரங்குகள் கேட்டன.

புஸ்மி புல்யூ தலையை பலமாக அசைத்தது, “நிச்சயமாக என்னால் முடியாது” என்றது.

“அவர் உன்னை கூண்டில் அடைத்து வைக்க மாட்டார் அவர் மிகவும் அன்பானவர் . ஆனால் அவரிடம் பணம் கிடையாது.

இரு தலைகள் கொண்ட உன்னைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்கள் அப்போது தரும் பணத்தைச் சேர்த்துக் கடனை அடைத்துவிடுவார்.

அவர் ஆப்பிரிக்காவுக்கு எங்களை காண்பதற்காக வந்த படகு உடைந்து போய்விட்டது . அதற்கான பணத்தையும் உரிமையாளரிடம் கொடுத்துவிடுவார்.”

உடனே புஸ்மி புல்யூ சொன்னது, “ஐயோ நான் கூச்ச குணமுள்ள பிராணி. என்னை யாராவது உற்றுப் பார்த்தால் எனக்குப் பிடிக்காது.”

புஸ்மி புல்யூ கொஞ்சம் கொஞ்சமாக அழத் தொடங்கியது. மூன்று நாட்கள் அதைக் குரங்குகள் சமாதானப்படுத்தி சம்மதிக்கச் செய்தன.

கடைசியில் அது “நான் முதலில் மருத்துவர் டூலிட்டிலைச் சந்தித்து அவர் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்” என நிபந்தனை வைத்தது.

உடனே குரங்குக் கூட்டம் புஸ்மி புல்யூவை அழைத்துக் கொண்டு பயணம் செய்தது மருத்துவர் டூலிட்டில் தங்கி இருந்த புற்களால் வேயப்பட்ட சிறு வீட்டை அடைந்து கதவைத் தட்டின கதவு திறந்தது.

அவரது பயணச் சாமான்களை பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த வாத்து சொன்னது, “வாருங்கள் உள்ளே”

“கீ – கீ” பெருமையுடன் எல்லா குரங்குகளையும் புஸ்மி புல்யூவையும் உள்ளே அழைத்துச் சென்றது.

அந்த விசித்திர விலங்கை மருத்துவர் டூலிட்டில் ஆச்சர்யத்துடன் பார்த்து, “இது எந்த உலகத்தில் இருந்து வந்திருக்கிறது?” என்றார்.

“இது எப்படி தன் மூளையை உபயோகிக்கிறது?” என வாத்து கத்தியது.

அங்கு இருந்த ஜிப் என்ற நாய் சொன்னது, “இது எனக்கு புதுமையாக தெரிகிறது.”

duck-dog tamil kathaigal
duck-dog tamil kathaigal

” கீ – கீ ” மருத்துவரைப் பார்த்துச் சொன்னது, “இந்த விலங்கின் பெயர் புஸ்மி புல்யூ ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டும் காணப்படும் மிக அரிதான விலங்கு இது இரண்டு தலைகள் கொண்ட அதிசயப் பிறவி.

நீங்கள் இதை உங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லலாம். இந்த அதிசய விலங்கைப் பார்க்க வரும் மனிதர்கள் உங்களுக்கு பணத்தை வாரி வழங்குவார்கள். உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்” என்றது.

“எனக்குப் பணம் எதுவும் தேவையில்லை”

“நாம் பசிக் கொடுமையால் துன்பப்பட்டது ஞாபகமில்லையா? கசாப்புக் கடைக்காரனுக்குப் பணம் தர முடியாமல் இருந்தோமே அதை மறந்துவிட்டீர்களா?

நீங்கள் சொல்லியபடி படகுக்காரனுக்கு புதுப்படகு எப்படி வாங்கித் தருவீர்கள்?” என்றது ஜிப் நாய்க்குட்டி.

“அவனுக்கு புதிய படகை நானே தயார் செய்வேன்.”

டாப் டாப் வாத்து சற்று கோபமாகவே கத்தியது . “மருத்துவரே, யோசித்துப் பேசுங்கள் படகை செய்வதற்கான அவ்வளவு மரத்திற்கும், ஆணிகளுக்கும் எங்கே போவீர்கள்? எப்படி நாம் வாழ்க்கையை ஓட்டுவது.

” கீ – கீ ” சொல்லியபடியே அந்த அபூர்வ விலங்கை நம்முடன் அழைத்து வாருங்கள் நம் வறுமை நீங்கிவிடும்.”

“நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நமக்கும் ஒரு புதிய அற்புதமான நண்பர் கிடைத்து இருக்கிறார். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து நமது நாட்டுக்கு வர சம்மதம் தருவாரா?” என்றார் டூலிட்டில்.

புஸ்மி புல்யூ சொன்னது, “நான் உங்களுடன் வர சம்மதம் தருகிறேன். மருத்துவர் டுலிட்டிலின் அன்பை அறிந்துகொண்டேன். அவரை நம்புகிறேன்.

ஆனால் மனிதர்கள் வாழும் அந்த ஊரில் எனக்கு வாழப்பிடிக்காவிட்டால் என்னை மறுபடியும் இதே காட்டுக்கு திரும்பக் கொண்டு வந்துவிடவேண்டும். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்.”

மருத்துவர் டூலிட்டில், “நிச்சயமாக, நிச்சயமாக உனது விருப்பம்போல நாங்கள் இருப்போம். சரி , இன்னொரு தகவலை நான் அறிய விரும்புகிறேன், நீ மான் இனத்தைச் சேர்ந்தவன் தானே!” என்றார்.

புஸ்மி புல்யூ விவரமாகச் சொல்லத் தொடங்கியது. “ஆமாம். அபிஸினியாவின் அரேபிய மான்களும், ஆசியாவின் மலை சாதி மான்களும் எனது அம்மாவழி சொந்தங்கள்.

எனது அப்பாவின் கொள்ளுத் தாத்தா யுனிகார்ன் எனும் மான் வகையைச் சேர்ந்தது. அது புராணப் புத்தகங்களில் மட்டும் காணக்கூடியது. அதற்கு மானின் கால்களும், குதிரையின் முகமும் , சிங்கத்தின் வாலும் இருக்கும்.”

“ஆகா ! எவ்வளவு அற்புதமான சொந்த பந்தங்கள்.”

டாப் டாப், புஸ்மி புல்யூவிடம் கேட்டது, “நீ உன் ஒரு வாயால் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறாய். இன்னொரு வாயாலும் பேச முடியுமா உன்னால்.”

“நிச்சயமாக முடியும். ஆனால் நான் இன்னொரு வாயை சாப்பிடும்போது உபயோகப்படுத்துவேன். ஒரு வாயால் சாப்பிட்டுக்கொண்டே மறு வாயால் பேச முடியும் என்னால்.”

ஊருக்குப்போக மூட்டை முடிச்சுகளைக் கட்டும் வேலை முடிந்தது. குரங்குகள் மருத்துவர் டூலிட்டிலுக்கு விருந்து ஏற்பாடு செய்தன.

காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் விருந்தில் கலந்துகொள்ள வந்தன. அங்கே அன்னாசிப் பழங்கள், மாங்கனிகள், தேன் முதலியவை பரிமாறப்பட்டன.

விருந்து முடிந்தது. டாக்டர் டூலிட்டில் எழுந்து பேசினார், “என் பிரியமான நண்பர்களே, விருந்துக்குப் பிறகு சொற்பொழிவு நடத்தும் அளவுக்கு நான் ஒரு கனவான் அல்ல, பேச்சுக்கலையில் நான் திறமையானவனும் அல்ல.

நீங்கள் தந்த கனிகளை தின்றேன் தேனை அருந்தினேன், இனிமையான விருந்து, உங்களை விட்டுப் பிரிவதில் எனக்கு வருத்தம் தான் எனக்கு ஊரில் கடமைகள் இருக்கிறதே.

ஆனாலும் சில வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லிப்போக விரும்புகிறேன். உணவுப் பண்டங்கள் மீது ஈக்களை மொய்க்கவிடாதீர்கள். மழைபெய்யும் நாட்களில் வெறுந்தரையில் படுத்து உறங்காதீர்கள். நீங்கள் மகிழ்வான வாழ்க்கை வாழ நான் விரும்புகிறேன்.”

மருத்துவர் டூலிட்டில் பேசி அமர்ந்ததும் அனைத்து குரங்குகளும் நீண்ட நேரம் கைகளைத் தட்டி ஆரவாரித்தன.

“ஒரு பெரிய மர நிழலின் கீழ் நம்முடன் அமர்ந்து ஒரு சிறந்த மனிதர் விருந்து உண்டு இருக்கிறார். நிச்சயமாக அவர் ஒரு உயர்ந்த மனிதர்” என்று குரங்குகள் தங்களிடையே சொல்லிக்கொண்டன.

பெரிய கொரில்லா குரங்கு எழுந்து, அதன் மயிர் அடர்ந்த கைகள் ஏழு குதிரைகள் பலம் வாய்ந்தவை. அது ஒரு பாறையை விருந்து நடந்த இடத்திற்கு உருட்டி வந்தது .

அந்தக் கொரில்லா மகிழ்வுடன், “இந்தப் பாறை ஒரு நினைவுச்சின்னம்” என்றது.

அந்தப் பாறை என்றென்றும் அந்த அடர்ந்த வனத்தின் இதேப்பகுதியில் வீற்றிருக்கும்.

பிற்காலத்தில் அவ்வழியே கடந்து போகும் தாய்க்குரங்குகள் கிளைகளில் அமர்ந்தபடியே தங்களது குட்டிகளுக்குச் சொல்லுமாம்,

“அதோ அந்தப் பாறையைப் பாருங்கள். அந்த இடம் முக்கியத்துவம் உடையது. நமது முன்னோர்களை கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றிய ஒரு நல்ல மனிதன் நம் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ட இடம்தான் அது.”

மருத்துவர் டூலிட்டிலும் அவரது விலங்கு மற்றும் பறவை நண்பர்களும் பயணப்பட்டு கடற்கரைக்குச் சென்றார்கள். அவர்களது பெட்டியையும், பைகளையும் சுமந்தபடி வழியனுப்ப சென்றன குரங்குக் கூட்டங்கள்.

Leave a Comment