ஊக்கமது கைவிடேல் | ஆத்திசூடி கதைகள் | Do not lose heart | Tamil kathaigal
மருங்கூர் என்னும் ஊரில் மாதவன் என்ற மரம் எறும் தொழிலாளி வாழ்ந்து வந்தார்.
சுற்றுவட்டார கிராமங்களில் தென்னந்தோப்பில் தேங்காய்களை பறித்துக் கொடுத்தும், பனை மரங்களில் ஏறி நுங்கும், பதநீர் போன்றவைகளை இறக்கிக் கொடுத்தும் அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை ஏழ்மையில்லாதவாறு நடத்தி வந்தார் மாதவன்.
ஒரு சமயம் தேங்காய்களை அறுக்கின்ற காலத்தில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. தென்னந்தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனை வரும்படி அழைத்து, தேங்காய்கள் அறுப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.
மாதவனால் சரியான நேரத்திற்கு தொழிலுக்குப் போக முடியாமல் கடுமையான காய்ச்சலினால் மிகவும் கஷ்டப்படத் தொடங்கினார். அதே நேரம் நோயை குணப்படுத்த மருத்துவரிடம் செல்லவும் பணமில்லாமல் அவதிப்பட்டார்.
மாதவனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். பத்து வயது கூட நிரம்பாத சிறுவன் மகேந்திரன் படிப்பிலும், பேச்சு சாதுர்யத்திலும் படு சுட்டியாக இருந்தான் .
சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் நிறைய காணப்பட்டன. மகேந்திரனால் தன் தந்தைப்படுகின்ற வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதே நேரம் தேங்காய்களைப் பறிப்பதற்காக, தன் தந்தை ஒத்துக்கொண்ட வேலையையும் செய்ய முடியாமல், மேலும் தந்தையார் மனக்கஷ்டப் படுவதை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான்.
தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்கள். ஆனால் மாதவனின் மகன் மகேந்திரன் வருவது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
தோப்புக்காரர்களை நெருங்கிய மகேந்திரன் “ஐயா! எல்லோரும் மன்னிக்க வேண்டும். இன்று என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் குறிப்பிட்ட நாளில் தேங்காய் அறுப்பதற்கு வர முடியவில்லை.
அதனால் அவர் செய்கின்ற வேலையை நானே செய்வதாக முடிவெடுத்து வந்துள்ளேன்” என்றான். அதனைக் கேட்ட தோப்புக்காரர்கள் ஆச்சர்ய மடைந்தனர்.
“சிறுவனே! உன்னால் எப்படி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறிக்க முடியும்? வீணாக விஷப்பரீட்சை செய்யாதே வீட்டிற்குச் சென்றுவிடு, உன் தந்தையாரின் உடல்நிலை குணமானதும் பின்னர் தேங்காய்களை அறுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்கள்.
உடனே மகேந்திரன் “ஐயா! நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், என் தந்தையின் உடல்நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.
மருத்துவரிடம் செல்லவே பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
அதனால் நான் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துத் தருகிறேன்” என்று கூறியபடி தோப்புக் காரர்களின் பதிலுக்குக் காத்திராமல் தான் கொண்டு வந்த வெட்டரிவாளினை இடையில் சொருகிக் கொண்டு வேகமாகத் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினான் மகேந்திரன்.
சிறுவயதிலேயே மரம் ஏறுவதில் தன் தந்தையுடன் பயிற்சி செய்தது சரியான நேரத்தில் உதவி செய்கிறதே! என்று மனதுள் நினைத்தபடியே மர உச்சிக்கு சென்று விட்டான் மகேந்திரன்.
தோப்புக்காரர்கள் எல்லோரும் மகேந்திரனை வியப்புடன் பார்த்து அவனின் வீரத்தைப் பாராட்டினார்கள். மகேந்திரன் தன் கடமையையே கருத்தில் கொண்டவனாக அரிவாளினால் தேங்காய்களை அறுக்கத் தொடங்கினான்.
பின்னர் மரத்தைவிட்டு கீழிறங்கி அடுத்த மரத்தில் ஏறத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே, நன்கு விளைந்த தேங்காய்களை எல்லாம் இனம் கண்டுபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுத்து முடித்து விட்டான் மகேந்திரன்.
அந்த தோப்புக்காரரிடம் குலிப்பணத்தை வாங்கிக் கொண்டு, அருகிலிருக்கும் மற்றொரு தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய்களை அறுக்கலானான் தனது தந்தையார் ஒத்துக்கொண்ட எல்லாத் தோப்புக்காரர்களின் தோப்புகளிலும் மரம் ஏறி தேங்காய்களை அறுத்துக் கொடுத்து கூலியையும் வாங்கிக் கொண்டு வீட்டையடைந்தான் மகேந்திரன்.
தான் வாங்கி வந்த கூலிப்பணத்தையெல்லாம் தந்தையிடம் கொடுத்து, தான் செய்து வந்த வேலைகளைப் பற்றிக் கூறினான் . மாதவன் அதனைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்.
பயமில்லாமல் உயரமான மரங்களில் ஏறி எப்படி நீ தேங்காய்களை அறுத்தாய் என்று மகேந்திரனிடம் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
அதற்கு மகேந்திரன் “அப்பா! தன்னம்பிக்கையும் , உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்ற மனத்துணிவும் தான் இக்காரியத்தில் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது.
இனிமேல் நீங்கள் கவலையுடன் நோயினால் படுத்திருக்க வேண்டாம். இப்போதே வைத்தியர் விட்டிற்குச் செல்லலாம் என்று கூறினான்.”
மாதவனோ தன் மகனை அன்போடு தழுவிக் கொண்டார்.
நீதி:
மன உறுதியை இழந்து விடாமல் துணிவோடு செயல்களை செய்ய வேண்டும்.