ஏற்பது இகழ்ச்சி | ஆத்திசூடி கதைகள் | Acceptance is contempt | tamil kathaigal

ஏற்பது இகழ்ச்சி | ஆத்திசூடி கதைகள் | Acceptance is contempt | tamil kathaigal

தனது கூடையில் அடுக்கி எடுத்துச் சென்ற மாம்பழங்களை எல்லாம் விற்பனை செய்தபடி ஏதோ ஓர் கிராமத்துப் பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான் பார்த்திபன்.

அப்போது அவன் எதிரே யாரோ ஒருவர் தட்டுத் தடுமாறியபடி வந்து கொண்டிருந்தார். அவரின் எதிரே சென்ற பார்த்திபன் அவரையே கூர்ந்து கவனித்தான்.

பார்ப்பதற்கு சற்று வயதான தோற்றத்தில் இருந்த அவருக்கு கண்பார்வை சற்றுக் குறைவாக இருப்பதை உணர்ந்த பார்த்திபன் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தான்.

உடனேயே அவர் அருகில் சென்று அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி நடக்கலானான். தன்னை ஒரு இளைஞன் வழி நடத்திச் செல்வதை உணர்ந்த அவர் “தம்பி! தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்ய வந்தாய்! நான் அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கின்றேன்.

என் உறவினரைப் பார்த்துவிட்டு வருகிறேன். வண்டியில் எறிச் செல்வதைவிட நடந்து சென்றால் உடற் பயிற்சியும் செய்தது போல் இருக்குமே, என்று தான் நடக்கத் தொடங்கினேன்.

வரும் வழியில் என் மூக்குக் கண்ணாடி தவறி விழுந்து உடைந்துவிட்டது. அதனால் தான் என்னால் சரியாக நடந்து செல்ல முடியவில்லை.

நான் தடுமாறியபடியே செல்ல வேண்டியதாயிற்று. நல்லவேளை நீ வந்ததால் எனக்கு இப்போது உதவியாக இருக்கின்றது” என்று கூறினார்.

உடனே பார்த்திபன் அவரை மேலும் கீழும் பார்த்தான். அவர் கழுத்திலும், கைகளிலும் தங்க நகைகள் மின்னின.

old men by tamil kathaigal
old men by tamil kathaigal

பார்ப்பதற்கு வசதியானவர் போலத் தெரிந்தார் . பார்த்திபன் அவரிடம் எதுவும் பேசிக் கொள்ள விரும்பாமல், அவரைப் பாதுகாப்பாகக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த கிராமத்தை நெருங்கினான்.

அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி, ஒருவர் வேகமாக ஓடி வந்து பார்த்திபனின் அருகில் நின்றிருந்த வரை நெருங்கினார்.

“பண்ணையாரய்யா வணக்கம்! நீங்க வண்டியில் வராமல் நடந்து வருகின்றீர்களே!” என்று ஆச்சர்யமாகக் கேட்டார்.

பார்த்திபனுக்கு இப்போது தான் அவர் அந்த ஊர் பண்ணையார் என்று தெரிந்தது. பண்ணையார் தனது மூக்குக் கண்ணாடி தொலைந்த விபரத்தை விவசாயிடம் கூறினார்.

பின்னர் பார்த்திபனைப் பார்த்து “தம்பி! தக்க சமயத்தில், நீ என்னை சந்தித்து என் ஊருக்கே என்னை பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டாய்! நீ செய்த உதவிக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியபடியே தன் கைவிரலில் கிடந்த தங்க மோதிரத்தைக் கழற்றி பார்த்திபன் முன்னர் நீட்டினார்.

பார்த்திபனோ அந்த மோதிரத்தை வாங்க மறுத்துவிட்டான். பின்னர் பண்ணையாரைப் பார்த்து, “ஐயா! பிறரிடம் கையேந்தி உதவி பெறுவது பாவமான செயலாகும்.

அதிலும் செய்த உதவிக்கு உடனேயே மறு உதவியை எதிர்பார்ப்பது அதனைவிடப் பாவமான செயலாகும்” என்று கூறியபடி அந்த மோதிரத்தை வாங்க மறுத்து விட்டான்.

அதனைக் கண்டு வியப்படைந்த பண்ணையார் “தம்பி! இது நான் உனக்குக் கொடுக்கின்ற அன்பளிப்பு! இதனை வாங்கிக் கொள்” என்று மீண்டும் வற்புறுத்தினார் .

அதனைக் கண்ட விவசாயி பார்த்திபனைப் பார்த்து “ஐயா! பண்ணையார் கொடுக்கின்ற பொருள் எதுவானாலும் அதனை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பண்ணையாருக்கு உங்கள் மேல் கோபம் வந்துவிடும்” என்று கூறினார்.

அதனைக் கேட்டு பார்த்திபனுக்கு சிரிப்புதான் வந்தது. அந்த விவசாயியைப் பார்த்த அவன் “ஐயா! பண்ணையார் இதனை அன்பளிப்பாக கொடுக்கிறேன் என்கிறார். நான் அவருக்கு உதவி செய்ததால் தானே, எனக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

ஆக மொத்தத்தில் உதவியால் உதவி பெற என் மனம் இடம் கொடுக்கவில்லை” என்று கூறினான்.

அதனைக் கேட்ட பண்ணையார் பார்த்திபனின் பேச்சைக் கேட்டு வியப்படைந்தார். “தம்பி ! பொருள் மீது ஆசையில்லாத உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென நினைத்துவிட்டேன்.

former by tamil kathaigal
former by tamil kathaigal

அதனை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. அதனால் உனக்கு என் பண்ணையில் நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.

நீ உன் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வாங்கிக் கொள். இதனையாவது ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டார்.

உடனே பார்த்திபன் “ம்… தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன். என் உழைப்பின் மூலம் எனக்கு கிடைக்கும் செல்வமே எனக்கு நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு” என்று கூறியபடி, பண்ணையில் வேலைக்கு சேர்ந்தான்.

நீதி:

பிறரிடமிருந்து இனாமாக ஒன்றைப் பெறுவது இழிவான செயல்.

Leave a Comment