ஒரு வாய் பேரம் | A word of mouth bargain | tamil story

ஒரு வாய் பேரம் | A word of mouth bargain | tamil story

Singing-baby

ஒரு நாள் மனோகரமான மாலைப்பொழுதிலே முதியவன் ஒருவன் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தான். மாலையின் மோகனத்தைக் கூட்டுவதாய் இனிமையான கீதம் ஒன்று, ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து வந்தது. சொக்கிப்போன கிழவன், பாட்டு முடிகிறவரை பாதையிலேயே நின்று கேட்டான். 

பிறகு வீட்டருகே சென்று உள்ளே பார்த்தான். பாடியவள் ஒரு சின்னப்பெண். அன்புடன் அவளைத் தட்டிக்கொடுத்து, தங்கக்காசு ஒன்றை பரிசாகக் கொடுத்தான். பெண்ணின் தந்தை பொன்னன் அப்போது அருகே இருந்தான். நம் மகள் பாடிய பாட்டுக்கு தங்கக் காசா! என மகிழ்ந்தான்.

உடனே பெண்ணின் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டான். பிறகு கிழவன் புறப்படத் துவங்கியதும், “நில்லும் ஐயா, எனக்குச் சேரவேண்டிய பாக்கி எங்கே?” என்று பொன்னன் கத்தினான். வயோதிகன் வியப்பு மிகுதியுடன் அவனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், இதோ பார்,கிழவனாரே.. என் பெண்ணின் பாட்டைக் கேட்டு மகிழ்வதற்கு விலை, ஒரே ஒரு தங்கக் காசு இல்லை.பத்து காசுகளாக்கும். பாக்கியைக் கீழே வை நீ சீக்கிரம்” என்றான். இந்த ஆள் ஒரு போக்கிரி என்பதைப் புரிந்து கொள்ள கிழவனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. 

Gold-coin

இருந்தாலும் அப்பாவி போல் நடித்துக் கொண்டு, “சிறு இசைவாணியின் பெரும் புகழ்த் தந்தையே,இந்தச் சிறியேனிடம் தங்கக் காசு மேலும் இல்லை, அதற்காக வருந்துகிறேன், இப்போது நான் என்ன செய்வேன்” என்றான். “உன்னுடைய குல்லாவையும்,தங்கச் சங்கிலியையும் செருப்பையும் கொடேன்”என்றான் பொன்னன். 

“இவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்த தலைக்கு கட்டாயம் குல்லா வேண்டியது தான். அந்தத் திருத்தலையைத் தாங்கிடும் பொன்னான கழுத்திற்குத் தங்கச் சங்கிலியும் வேண்டியதுதான். ஆனால் நண்பா, இவை பழையவை, மதிப்பற்றவை. என் வீட்டுக்கு வாயேன்! சொக்கத் தங்கமாய் ஒரு நூறு தந்திடுவேன்! இப்போது நான் கொடுத்த தங்கக் காசு கூட அவ்வளவாய் நல்லது இல்லை. என்னோடு வருவதானால் அந்த காசும் உனக்கு வேண்டாம், அதை என்னிடமே தந்துவிடு நான் உனக்கு நல்ல காசை தருகிறேன்” என்றான் கிழவன். 

“நூறு தங்கக்காசுகளா! நிஜமாகவே நீ நல்லவன் தான். வா, உன் வீடு எவ்வளவு தூரம்? அட தூரம் என்ன, நூறு தங்கக் காசு கிடைக்கும் என்றால் ஆயிரம் மைல் நடக்க மாட்டேனா என்ன!” என்றான் பொன்னன்.

“அதெல்லாம் வேண்டாம். இதோ, மூன்று மைல்தான் என் வீடு” என்றான் முதியவன். பொன்னன் தான் வாங்கிய தங்கக் காசை அவனிடமே திருப்பித் தந்துவிட்டு, நூறு காசுகளை வாங்கிக் கொள்வதற்காக அவனோடு போனான். 

மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்த பொன்னன் வழியெல்லாம் என்னென்னவோ பிதற்றிக் கொண்டே போனான். சந்தோஷம் தாங்காமல் வெடித்தே விடுவான் போல் இருந்தது பொன்னனுக்கு. “நூறு தங்கக் காசுகளை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வேன், தெரியுமா? ” என்று கேட்டான்.

“நான் எப்படிச் சொல்ல முடியும்!” என்றான் முதியவன். “ராஜாவின் அரண்மனையை விட ஜோராய் ஒரு கோட்டை கட்டுவேன். அப்புறம் ராஜாவையே, உன் பெண்ணை எனக்குக் கல்யாணம் கட்டிக்கொடு என்று கேட்பேன்.” என்றான்

Palase

“ஆனால் உனக்கு ஏற்கெனவே கல்யாணமாகி, ஒரு பெண்ணும் இருக்கிறாளே !”  

“அதனால் என்ன? திரும்பவும் கல்யாணம் செய்கிறேன். இந்த முறை இளவரசியையே கட்டிக் கொள்வேன்!”

“ஓஹோ,பலே,பலே!” இதற்குள் நகரமும் வந்துவிட்டது.இருவரும் அரசனின் அரண்மனைக்கு எதிரில் வந்தார்கள்.

நேரே அரண்மனை வாயிலுக்குக் கிழவன் போவதைப் பார்த்து, “அந்தப் பக்கம் ஏன் போகிறாய்?”என்று பொன்னன் கேட்டான். “அது தான் என் வீடு” என்றான் கிழவன். கிழவனை உன்னிப்பாய்ப் பார்த்தான் பொன்னன். திடீரென அடையாளம் புரிந்து விட்டது. அவன் அரசனே! மாறுவேடத்தில் இருந்ததால் முதலில் அடையாளம் தெரியவில்லை.

பொன்னன் வாயடைத்து நின்றான். அப்பொழுது அரசன் மிக மரியாதையுடன் சொன்னான் “சிறு இசை வாணியின் பெரும் புகழ்த் தந்தையே, இப்போது நீ செல்லலாம்! உன் மகளின் பாட்டு எனக்கு ஐந்து நிமிட நேரத்திற்கு ஆனந்தம் கொடுத்தது. பதிலுக்கு, நூறு தங்கக் காசுகள் என்ற வாக்குறுதியால், நான் உனக்கு ஒரு முழு மணி நேரத்திற்கு ஆனந்தம் தந்தேன் அல்லவா? 

உன் மகள் வாயால் பாடிய பாட்டு எனக்கு ஆனந்தம் கொடுத்தது. என் வாயால் கொடுத்த வாக்குறுதி உனக்கு ஆனந்தம் அளித்தது. இது நியாயமான பேரம்தானே! அப்புறம், என்னுடைய ஆனந்தத்துக்குப் பின், நீ உன் பேராசையைக் காட்டியதால், எனக்கு ஏமாற்றம் வந்தது. 

நம் பேரத்தை மேலும் நியாயமாக்குவதற்கு, உன்னுடைய ஆனந்தத்துக்குப் பிறகு உனக்கும் ஏமாற்றம் வரும்படி செய்துவிட்டேன். இனி நடையைக்கட்டு.” 

கிடைத்த ஒரு தங்கக் காசும் போயிற்றே என நொந்த மனத்துடன் பொன்னன் சொந்த ஊர் திரும்பினான்.

Leave a Comment