அறியா ஊருக்குப் பயணம் | Travel to the city of ignorance | tamil story

“மகனே, இவ்விரு குதிரைகளும் மிக அரிய இனத்தவை. மிக நன்றாய் வளர்த்திருக்கிறோம். ஆகையால், நல்ல குதிரைகள் கிடைக்காத நாடொன்றில் ஒவ்வொன்றிற்கும் நூறு தங்கக் காசுகள்கூடக் கிடைக்கும். அப்படிப்பட்ட நாடு ஒன்று தெற்கே தொலைவில் உள்ளது. எனக்கோ வயதாகி விட்டது. நான் அங்கே போக முடியாது. ஆனால் தெரியாத பிரதேசங்கள் வழியே தொலைதூரப் பயணம் செய்யும் துணிவு உனக்கு இருந்தால், அந்த நாட்டு அரசனிடம் இந்த உயர்சாதிக் குதிரைகளை எடுத்துச் செல்வாய். அவன் சந்தோஷப்பட்டு, நூற்றுக்குமேல் விலை கொடுக்கக்கூடும்” என்று ஒரு முதிய வியாபாரி தன் மகனிடம் கூறினான். 

தொலைதூர நாடுகளுக்குச் செல்லப்போகிறோம் என்று மகனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் தகப்பன் மேலும் சொன்னான்: 

“ஒன்றை மறக்காதே, மேற்கே மட்டும் போகவே போகாதே. போனாயோ, எல்லாரும் பொல்லாதவரான ஒரு நாட்டில் அகப் பட்டுக்கொள்வாய், வெளியாள் ஒருவர்கூட வேதனைப்படாமல் அங்கிருந்து திரும்பியதே கிடையாது. நான்கூட ஒரு சமயம் அந்த அயோக்கியர்கள் நாட்டுக்குப் போய்விட்டேன். ஒரு முறைதான், ஆனால் என் மடமைக்கு நான் கொடுத்த விலை மிகப் பெரிது, மறக்க முடியாத விலை.” 

அது என்ன என்று சொல்லும்படி தகப்பனை மகன் வேண்டிக்கொள்ள, கிழவனும் சொன்னான்.

“ஞாபகமிருக்கிறதா, சின்னக் குழந்தையாயிருந்தபோது ஒரு அண்ணனோடு நீ விளையாடுவாயே? பதினைந்து வருடங்களுக்கு முன்னால், வியாபார நிமித்தமாய் நான் பல இடங்களுக்குச் சென்றேன். 

அப்போது உன் அண்ணனுக்குப் பதினான்கு வயது. சின்ன வயதில் பிரயாணம் செய்தால் நல்லது என்று அவனையும் கூட்டிக் கொண்டு போனேன். நாங்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் அதுவரை பார்த்திராத ஒரு புதிய நாட்டிற்குள் நுழையும் கெட்ட காலம் நேர்ந்துவிட்டது. 

மாலையில் அங்கு போய்ச் சேர்ந்த நாங்கள் இரவை ஒரு சத்திரத்தில் கழித்தோம். அங்கே இருந்த மக்களின் பேச்சையும் நடத்தையையும் பார்த்தால், என்னடா இது, மற்ற பிரயாணிகளிடமிருந்து நாம் அடிக்கடி கேள்விப் பட்ட அந்த அயோக்கியர்கள் ஊருக்கல்லவா வந்து விட்டோம் போல் இருக்கிறது என்று பயப்பட்டேன். சரி, இங்கிருந்து உடனே புறப்பட வேண்டியதுதான் என்று நிச்சயித்தேன். 

ஆனால் காலையில், சத்திரக்காரனிடம் கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்கிறேன் அவனுடைய தம்பி ஓவென்று கூப்பாடு போட்டுக்கொண்டு என்னைப் பார்க்க ஓடிவந்தான். அவன் மனைவி இறந்துபோன ஒரு குழந்தையைப் பெற்றாளாம், அதற்கு நான்தான் காரணம் என்று ஒரே போடாய்ப் போட்டான். 

எனக்கோ தலைகால் புரியவில்லை. முதல் நாள் மாலை நான் குதிரையிலிருந்து இறங்கியபோது பெரிதாய் மூச்சு விட்டேனாம்.

அப்போதுதான் சத்திரத்திலிருந்து வெளியே பறந்து வந்து கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு பூச்சி, என் மூச்சு வேகம் தாளமல் திசை தடுமாறி, தம்பியின் கர்ப்பிணி மனைவி உட்கார்ந்திருந்த ஒரு அறைக்குள் புகுந்து விட்டதாம். 

அது நேரே அவள் மூக்குக்குள்ளே நுழைய, அவள் தும்மல் போட அதன் விளைவாய் கருவில் இருந்த சிசு செத்து விட்டதாம். இப்படி அந்தப் போக்கிரி கயிறு திரித்தான். 

இந்த அபத்தக் குற்றச்சாட்டிற்கு என்னதான் பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்குள், அங்கே பெரிய கும்பல் கூடிவிட்டது. எல்லாரும் பொய்யனை ஆதரிக்கிறார்கள். 

நானோ திக்பிரமை பிடித்து நின்றேன். கருவிலிருந்த குழந்தை செத்ததற்கு நீதான் காரணம், கொடு உன் குழந்தையை என்று என் மகனைப் பிடுங்கிக் கொண்டார்கள். பாவம், உன் அண்ணன் இன்றும் அவர்களின் அடிமையாய் உழைத்துக் கொண்டிருப்பான்.” 

கதையைச் சொல்லிவிட்டுக் கிழவன் அழுதான். துக்கத்தில் ஆழ்ந்த மகனும் “பயப்படாதே அப்பா, அந்தக் கெட்டவர்கள் நாட்டின் பக்கத்தில் கூட நான் போகவேமாட்டேன்” என்றான். 

பிறகு இளைஞன், அழகிய இரு குதிரைகளையும் ஒட்டிக் கொண்டு, தொலைதூர தெற்கத்திய நாட்டுக்குப் புறப்பட்டான். இரண்டு நாள் கழித்து, வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. 

ஆற்றிலே வெள்ளம். படகுத் துறையில், “இந்தப் பெரிய குதிரைகளை என் பழைய படகு தாங்காதப்பா” என்று படகுக்காரன் சொல்லிவிட்டான். 

“மேற்கே போனால் நல்ல பலமான படகுடன் ஒரு ஆள் இருக்கிறான்” என்றும் சொன்னான். மேற்கே செல்லுகையில் ஒரு பெரிய புயல் வந்துவிட்டடது. ஒதுங்க இடம் தேடி ஓடினான். கொஞ்ச தூரம் போனால் ஒரு சிறிய மலைக்கு மறுபக்கத்திலிருந்து ஒருபுகை மண்டலம் தென்பட்டது. 

ஏதாவது வீடு இருக்கும் என்று குதிரைகளுடன் கஷ்டப்பட்டு மலையின் மேல் ஏறினான். இதற்குள் புயல் ஓய்ந்துவிட்டது. கீழே பார்த்தால் ஒரு கிராமம் தெரிந்தது. 

இவ்வளவு தூரம் மேற்கே வந்துவிட்டதால், அயோக்கியர் நாட்டின் ஒரு ஊராயிருக்கலாம் இது என்று அவனுக்குத் தோன்றியது. சரி, உடனே திரும்ப வேண்டியதுதான் என நிச்சயித்தான். என்றாலும், இந்த மக்கள் எப்படித்தான் இருக்கிறார்கள், பார்க்கலாமே என ஒரு நப்பாசையும் வந்தது. நன்றாய்ப் பார்க்கலாம் என சிறிது எம்பிப் பார்த்தான்.

அப்போது கொஞ்சம் ஆட்டமாயிருந்த ஒரு கல்லின்மேல் தவறிப் போய் காலை வைத்துவிட்டான். கல் நழுவ, கால் நழுவ, அவ்வளவுதான் ! இவனும் விழுந்து கடகடவென்று உருண்டு நேரே அந்த கிராமத்தின் நடுவில் போய் விழுந்தான். 

எசமான் கதியைப் பார்த்த குதிரைகளும், நாலுகால் பாய்ச்சலில் கீழே ஓடி வந்து அவன் அருகே நின்றுகொண்டன. அந்த வழியே போய்க் கொண்டிருந்த ஒரு வயோதிகன் அங்கே வேகமாய் வந்தான். 

இளைஞனும் தன் உடம்பைத் தட்டிக்கொண்டு எழுந்துவிட்டான். அதிகம் அடிபடவில்லை. இருந்தாலும் யாரோ கிழவன் இவ்வளவு கரிசனத்தோடு பார்ப்பது குறித்து அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

அயோக்கியர் நாட்டில் கூட அயலாருக்காகக் கவலைப் படுபவர்கள் இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான். பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படலாம் என நினைத்தான். 

அதற்குள் அந்த ஆசாமி, இளைஞன் விழுந்தபோது அவன் கீழ் நசுங்கிச் செத்துக் கிடந்த ஒரு தவளையைப் பார்த்தான். “ஐயோ செல்லக்குட்டித் தவளையே! என் அருமை மகனே! மாண்டாயோ, யாரை நான் பழிவாங்குவேன்?” என்று அலற ஆரம்பித்துவிட்டான்.

அவன் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கும்போது கிராமவாசிகள் நிறையக் கூடிவிட்டார்கள் கிழவனிடம் ஏதோ மர்ம மொழியில் பேசினார்கள். பிறகு, குழந்தை இல்லாத கிழவன், தவளையை தத்துப் பிள்ளையாக எடுத்துக் கொண்டிருந்தார் என இளைஞனுக்கு விளக்கினார்கள். 

வீட்டுப் பிள்ளையாகிவிட்ட தவளையும், “இப்படி ஒரு பின்ளையுண்டா, அப்பனிடம் இவ்வளவு பய பக்தியா!” என ஊரெல்லாம் வியக்கும் உத்தமபுத்திரனாய் விளங்கியதாம். 

இப்பேர்ப்பட்ட உலகம் காணா அதிசயத்தவளை அநியாயமாய்ச் செத்துவிட்டதால், கிழவன் உயிரே போய் விட்டது போலத் துடிப்பது ஆச்சரியமில்லை என்றார்கள். இப்படிச் சொல்லிவிட்டு எல்லாருமே ஒப்பாரி பாட ஆரம்பித்தார்கள். ‘என்னடா செய்வோம்’ என்று பையன் திகைத்தான். 

இங்கிருந்து போனால் போதும் என்று ஆகிவிட்டது. “பெரியவரை எப்படித்தான் சாந்தப்படுத்துவது” என்று கேட்டான். 

“உன் குதிரைகளில் ஒன்றைத் தந்துவிடு” என்றான் கிழவன். தேம்பிக்கொண்டே “ஆ ஒரு தவளைக்குக் குதிரையா!” என்று இளைஞன் நெஞ்சடைக்கக் கேட்டான். 

“என்னடாப்பா நீ சொல்கிறாய், இந்தக் கிழவனுக்கு ஒன்றுமே புரியவில்லையே? எங்கேயாவது கேவலம் ஒரு குதிரை, ஒருமகனைவிட உசத்தியாய் இருக்க முடியுமா?” என்றான் கிழவன்.

கடைசியில் நம் இளம் வியாபாரி அழகிய குதிரைகளில் ஒன்றை அந்த எத்தனுக்குப் பறி கொடுக்க நேர்ந்தது கனத்த நெஞ்சத்துடன் கிராமத்தை விட்டுச் சென்றான். திரும்பவும் மலையேறுவது கஷ்டமாயிருந்ததால், மறுபக்கம் போவதற்கு ஏதாவது கணவாய் கிடைக்கிறதா என மலை ஓரமாய் நடந்தான். 

விரைவிலேயே மலையடிவாரத்தில் இன்னொரு கிராமம் வந்தது. பையனுக்கு நல்ல பசி, தாகம். ஒரு வீட்டின் முன் நின்றான். அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு ஒற்றைக்கண் ஆளிடம் கொஞ்சம் உணவும் தண்ணீரும் கேட்டான்.

 சாப்பாடு ஒன்றும் தரமுடியாது. வயிற்றை நிரப்பிக் கொள்ள நிறையத் தண்ணீர் தருகிறேன். எப்படியாவது வயிற்றை நிரப்பிக் கொள்வதுதான் முக்கியம், இல்லையா? என்றான் அந்த ஆள். 

சரியென்று தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, நன்றி சொல்லிவிட்டு அவன் கிளம்ப இருந்தான். அப்போது, அவன் ஊர் என்ன, அப்பா பெயர் என்ன, என்று ஒற்றைக்கண்ணன் விசாரித்தான். இளைஞன் சொன்னவுடன், “அப்பாடா, கடைசியில் ஒரு வழியாய் நீ கிடைத்து விட்டாய்!” என்று கூறினான் ஒற்றைக் கண்ணன். 

பிறகு சொன்னான்: “கேள், இளைஞனே! இருபது வருஷம் முன்னால் நான் வியாபாரத்துக்காக உன் ஊருக்குப் போனேன். அப்போது, கஷ்டகாலம், என் பணமெல்லாம் திருட்டுப்போய் விட்டது. உன் அப்பா எனக்கு மிக நன்றாய்த் தெரிந்தவர். அவரிடம் இரண்டு தங்கக்காசு கடன் கேட்டேன். கடன் கொடுக்கலாம். ஆனால் ஏதாவது அடைமானம் வேண்டுமே என்றார். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. 

இரண்டு கண் இருக்கிறதே, ஒரு கண்ணை அடகு வையேன் என்று அவர் சொன்னார். எனக்கு எப்படியாவது பணம் தேவைப் பட்டதால், சம்மதித்தேன். அவரும் ஒரு கண்ணை நோண்டி எடுத்துக் கொண்டார். ஒரு வருஷம் கழித்து எங்கள் ஊருக்கு வரும்போது கண்ணைத் திருப்பித் தந்து விடுவதாய்ச் சொன்னார். இருபது வருஷம் ஆச்சுதப்பா, ஆளைக்காணோம்.

இப்போது அவர் மகன் வந்திருக்கிறாய், என் கண்ணைக் கேட்கிறேன். தந்தை சொல் காப்பது தனயன் கடமை அல்லவா ! கடன் வாங்கிய இரண்டு தங்கக்காசைத் தருகிறேன், வட்டிக்கு ஒரு தங்கக்காசு சேர்த்துத் தருகிறேன் என் கண்ணைக்கொடு “ என்று முடித்தான் ஒற்றைக் கண்ணன். 

வழக்கம்போல, அவனுக்கு ஒத்துப்பாடுவதற்கு அங்கே பெரிய கும்பல் சேர்ந்துவிட்டது. நம் பையனுக்கு அழுகையே வந்துவிட்டது. “உன் கண்ணைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, ஐயா ! இருந்தாலும் நான் என்ன செய்ய வேண்டும், சொல், என்னைப் போகவிடு” என்றான். 

“நீ போகலாம் உன் குதிரையை விட்டுவிட்டு” என்றான் ஒற்றைக்கண்ணன். இளைஞன் குதிரையை விட்டுக்கொண்டு அந்த கிராமத்தை விட்டு நடந்து சென்றான். 

மலையிலிருந்து உருண்டதால் உடம்பில் வலி, அருமையான குதிரைகள் இரண்டையும் பறி கொடுத்ததால் நெஞ்சில் வலி, பசி வேறு. அவனால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தன் கதியை நினைத்து அழுதான். 

அந்தப் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்த ஒரு இளைஞன், “நீ யாரப்பா, ஏன் அழுகிறாய்? என்று கேட்டான்.” இப்போது நம் இளம் வியாபாரிக்கு, அங்கே யாரிடமும் வாய் கொடுக்க பயம். இருந்தாலும், இந்த ஆளைப்பார்த்தால் மிகவும் அன்பு கொண்டவனாகத் தோன்றியதால், தான் குதிரைகளைப் பறி கொடுத்த கதையைச் சுருக்கமாய்ச் சொன்னான். 

புது ஆள் கொஞ்ச நேரம் பேசாமல் யோசித்தான். பிறகு, “வா ராஜாவிடம் போவோம். உன் குதிரைகளை மீட்டுத் தருகிறேன்” என்றான்.

இளைஞன் முதலில் கொஞ்சம் யோசித்தான். பிறகு, இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லையே என்று, அவனோடு புறப்பட்டான். வழியில், அரசனிடம் அவன் என்ன கூற வேண்டும் எனப் புது நண்பன் சொல்லிக் கொடுத்தான் அவர்களுடைய புகாரின் பேரில் அரசன், கிழவனையும் ஒற்றைக் கண்ணனையும் கூப்பிட்டனுப்பினான். 

வழக்கு ஆரம்பமாயிற்று. செத்த தவளை தன் தத்துப்பிள்ளை என்று கிழவன் கூறியவுடன், இளைஞன் தன் தலைப்பாகையிலிருந்து ஒரு உயிருள்ள தவளையை எடுத்து மன்னனைப் பார்த்துச் சொன்னான், “அரசே, அதற்கப்புறம் நான் இந்தத் தவளையை என் பிள்ளையாகச் சுவீகாரம் செய்து கொண்டேன். இப்போது நான் சொல்வது என்னவென்றால், இந்தத் தவளையை மலையடியில் நான் வைக்கிறேன். கிழவன் மலை உச்சிக்குப் போய், அங்கிருந்து உருண்டு விழுந்து என் தவளைப் பிள்ளையை நசுக்கிக் கொன்று விடட்டும்.” என்றான். 

“ஆஹா, சந்தேகமில்லாமல் இதுவே விவேகமான யோசனை! கிழவர் இதைச் செய்வதே சாலப் பொருந்தும்” என்று அரசனும் கூவினான். ஆனால் கிழவன் இதைச் செய்வானா! ஆளைவிட்டால் போதும் என்று, குதிரையைத் திரும்பக் கொடுத்துவிட்டு வீட்டைப் பார்க்க ஓடினான். 

பிறகு ஒற்றைக்கண்ணன் தன் வழக்கைக் கூற, இளைஞன் சொன்னான்: “வேந்தே, விந்தையான சில பொழுதுபோக்குகள் என் தந்தைக்கு இருந்தது உண்மையே. மனிதர்களின் கண்களைச் சேர்ப்பதும் அவற்றில் ஒன்று. சொல்லப்போனால், எங்கள் வீட்டு அறையில் கணக்கற்ற கண்கள் இருக்கின்றன. இந்தக் கனவானின் கண்ணைத் திருப்பித்தர நான் தயார்தான். ஆனால் எண்ணற்ற கண்களில் இவருடைய கண்ணை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி ஒப்பிட்டுப்பார்ப்பதற்கு இன்னொரு கண்ணைக்கொடுத்தார் என்றால் வசதியாயிருக்கும். எனவே உத்தரவு கொடுத்தால், அவருடைய இன்னொரு கண்ணையும் நோண்டி எடுத்துக்கொண்டு, ஒரே ஓட்டமாய் எங்கள் ஊருக்குப் போய், இரண்டு கண்களையும் விரைவில் திருப்பி விடுகிறேன்.” 

“சரியான யோசனை !” என்றான் அரசன். ‘உள்ளதும் போச்சு ஒற்றைக் கண்ணா’ என்ற பதிக்கு ஆளாக விரும்பாத இந்த ஆசாமியும் குதிரையைக் கொடுத்துவிட்டு ஓடினான். 

இளைஞன் இரண்டு குதிரைகளையும் பெற்ற பிறகு, “இன்னும் யாரிடமாவது நீ மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு, நானும் உன்னோடு நாட்டு எல்லைவரை வருகிறேன்” என்று புது நண்பன் கூறினான். அவர்கள் பேசிக்கொண்டே நடந்து போகையில், பல்லாண்டு முன் தொலைந்துபோன தன் அண்ணன் தான் இவன் என்று இளைஞன் கண்டுகொண்டான். 

அவனை இத்தனை நாளும் அடிமையாய் வைத்திருந்த அயோக்கியனும் அவன் மனைவியும் சமிபத்தில் தான் செத்துப்போனார்கள். அப்போதிலிருந்து அவனும் சொந்த ஊருக்குத் தப்பி ஓட ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தான். 

அயோக்கியர்களின் தந்திரங்கள் எல்லாம் அவனுக்குப் பழக்கமாதலால் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. பிறகு இரு சகோதரர்களும் அந்தப் பொல்லாத நாட்டை விட்டுப் போய், தெற்கே சென்று இரண்டு குதிரைகளையும் நல்ல விலைக்கு விற்று, கை நிறையப் பணத்துடன் பதினைந்து நாளில் ஊருக்குத் திரும்பினார்கள்.

 இரண்டு மகன்களையும் பார்த்த தகப்பனும், இந்த உலகத்தில் என்னைப்போல பாக்கிய சாலி யார்! என பரமானந்தம் அடைந்தான்.

3 thoughts on “அறியா ஊருக்குப் பயணம் | Travel to the city of ignorance | tamil story”

Leave a Comment