விதியையே மாற்றிய அரச குமாரன் | The prince who changed the destiny | tamil story

விதியையே மாற்றிய அரச குமாரன் | The prince who changed the destiny | tamil story

Animation forrest

ஒரு பெரிய காட்டின் நடுவில் குமரன் என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய பையனும், அவன் தாயாரும் வசித்து வந்தார்கள். சுற்றப்புறத்தில் வெகு தூரத்திற்கு ஒரு குடிசை கூட கிடையாது. 

எங்கு பார்த்தாலும் ஓங்கி அடர்த்தியாய் வளர்ந்த மரங்கள்தான். ஓடைகளின் சலசலப்பும், காட்டு மிருகங்களின் கத்தல்களும், பறவைகளின் ஒலியும்தான் அவன் காதில் படும் ஓசைகள். 

வேலை செய்யும் வயது வந்தவுடன், குமரன் நாள் தோறும் மாலையில் பல வலைகளை அங்கங்கே விரித்து வைப்பான். காலைக்குள் ஏதாவது ஒரு வலையில் ஒரு கஸ்தூரி மான் சிக்கியிருக்கும். இரண்டு மூன்று நாளுக்கு ஒருமுறை, தொலைவிலிருந்து ஒரு வியாபாரி வருவான். அவன் மான்களை எடுத்துக் கொண்டு, பதிலுக்கு உணவும் துணிமணிகளும் கொடுத்துவிட்டுப் போவான். குமரன் படிப்பதற்கு ஏதாவது ஓலைச்சுவடிகளும் அவன் கொண்டு வருவான். 

Deer_animation

எப்போதாவது தொலைதூர கிராமத்திலிருந்து, குமரனின் வயதையொத்த பையன்கள், காட்டில் பழங்களும், வேர்களும், மயில் இறகுகளும் சேகரிக்க வருவார்கள். அவர்களுக்குக் குமரனிடம் வெகு பிரியம். 

ஒருநாள் அவனிடம், “உன்னோடு தினமும் ஆடிப்பாடி விளையாட எங்களுக்கு ஆசையாய் இருக்கிறது. ஆனால், நினைத்தால் காட்டுக்கு வந்துவிட முடியாது. தூரமும் அதிகம், அபாயமும் அதிகம். நீதான் எங்களோடு வந்து வசியேன். இங்கே தனித்திருந்து வாழ்வதன் அர்த்தம் என்ன?” என்று கூறினார்கள். 

நண்பர்கள் சென்ற பிறகு குமரன் அன்னையிடம் ஓடினான். “அம்மா, அம்மா ! நாம் ஏன் இந்த இருட்டுக் காட்டில் வசிக்க வேண்டும்? என் சினேகிதர்கள் எல்லாம் ஊருக்கு உள்ளே கிட்டக்கிட்ட வசிக்கிறார்கள். நாமும் அங்கே போய்விட்டால் என்ன?” என்று கேட்டான். 

தாயார் மௌனமாய் இருந்தாள். குமரன் திரும்பத் திரும்பக் கேட்டான். பிறகு தாய் வாய் திறந்தாள். “நாம் இந்தக் காட்டில் தான் என்றைக்கும் வாழ்ந்தாக வேண்டும். மற்ற மக்களோடு போய் வசிப்பது முடியாது. அது ஆபத்து. இதற்குமேல் நான் உனக்கு ஒன்றும் சொல்ல முடியாது” என்றாள். “சொல்லியே ஆக வேண்டும்” என்று குமரன் கெஞ்சினான். “வேண்டாமடா குழந்தை! மேலே கேட்டால் உனக்கு வருத்தமாயிருக்கும்.

“இல்லையம்மா ! உன் கதை எவ்வளவு துக்கமாயிருந்தாலும் நான் அழ மாட்டேன்” என்று குமரன் உறுதியளித்தான். 

தாயார் திரும்பவும் மௌனமாயிருந்தாள். அவள் கண்களில் நீர் வழிந்தது. உடனே குமரன், “அம்மா, அவ்வளவு வேதனையாக இருந்தால், ஒன்றும் சொல்லவேண்டாம் அம்மா” என்றான். தாயார், “பரவாயில்லையடா, ராஜா ! உனக்கும் தெரிந்து கொள்ளும் வயதாகிவிட்டது. ஒருவேளை, நீயும் தெரிந்து கொண்டால், இனிமேல் ஜாக்கிரதையாய் இருப்பாய்” என்றாள். பிறகு அவள் தன் கதையைச் சொன்னாள். 

“உனக்கு ஒரு வயது ஆனதிலிருந்து நாம் இங்கே தான் வசித்து வருகிறோம். அதற்கு முன்னால் எங்கே வாழ்ந்தோம் என்பது உனக்கு நினைவிருக்காது. ஒரு பெரிய அரண்மனையில் வசித்தோம் என்றால் ஆச்சரியப்படுவாய்.உன் அப்பாதான் நாட்டுக்கே ராஜா என்றால் உனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கும், அவருடைய ஒரே குழந்தை நீ. 

நாட்டுக்கே ராஜாவாய் விளங்க வேண்டியவன். விதி நமக்கு எதிராகப் போய்விட்டது. ” நீ பிறந்த அன்று இரவு அரண்மனையே மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருந்தது. நானோ நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். 

நள்ளிரவு வாக்கில் விழிப்புக் கொடுத்தது. தாதிகளும் மருத்துவப் பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள், மெள்ளக் கண்களைத் திறந்தேன். 

என் கண்களை நம்பவே முடியவில்லை, ஒளி மயமான உருவம் ஒன்று அறையிலிருந்து போய்க் கொண்டிருந்தது! ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், விதித்தேவன் வந்து, அதன் வாழ்க்கையில் நடக்கப் போகிறதையெல்லாம் அதன் நெற்றியில் எழுதிவிட்டுப் போவான் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். 

Animation-god

சாதாரணமாய் யார் கண்ணிலும் படாமல்தான் வந்து போவானாம். ஆனால் அபூர்வமாக தென்படுவதும் உண்டாம். இந்த ஒளிமயமான உருவம் விதித் தேவன்தான் என்று எனக்குப் புரிந்துவிட்டது. உடனே பரபரவென்று எழுந்து அவன் காலில் விழுந்து, என் குழந்தைக்கு என்னப்பா எழுதியிருக்கிறாய், சொல்லிவிடு, என்று கெஞ்சினேன். 

அவன் சொல்லவே, மாட்டேன் என்றான். நான் விடவில்லை. சொல்லாவிட்டால் காலை விடமாட்டேன் என்று அடம் பிடித்தேன். கடைசியில் மசிந்தான். ஆனால் எனக்கோ, ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது. அவன் சொன்னது இடிபோல என் காதில் விழுந்தது. 

வாழ்நாள் முழுவதும் ஏழையாய் வாழ்வது தான் உன் தலைவிதி என்று சொன்னான். சிறிது காலத்தில் உன் தந்தையான அரசர், ஒரு விபத்தில் திடீரென்று இறந்துவிட்டார். மந்திரியின் மீது உன் தந்தையார் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் வல்லமை அடைந்திருந்த பிரதம மந்திரி, நம் இருவரையும் கொன்றுவிடப் பார்த்தான் நல்ல வேளையாக அவன் சதி எனக்கு முன்னாலேயே தெரிய வந்தது. 

எனக்குக் கோடி ராஜ்யத்தைவிட என் குழந்தையின் உயிரே பெரிதல்லவா! ஒருநாள் இரவு காட்டுக்குத் தப்பி ஓடிவந்துவிட்டேன். அந்த மோசக்கார மந்திரியே இப்போது ராஜாவாகி விட்டான். நாம் இங்கே இருப்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்தால் கொன்று விடுவான். 

இதனால் தானப்பா இங்கிருந்து போவதை நான் விரும்பவில்லை. அன்றைக்கு விதித்தேவன், நீ ஏழையாயிருந்தாலும் ஒரு நாளும் பட்டினி கிடக்கமாட்டாய் என்று உறுதியளித்தான். கட்டாயம் ஒவ்வொரு இரவும் உன் வலையில் ஒரு கஸ்தூரி மானாவது பிடிபடும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருப்பதாய்ச் சொன்னான். 

பல ஆண்டுகளாய், நான் ஒவ்வொரு நாள் மாலையும் வலையைப் போட்டு வந்தேன். இப்போது நீ தலையெடுத்து அந்த வேலையை செய்துக் கொண்டிருக்கிறாய். நினைத்தாலே நெஞ்சு வெடிக்கிறது. என்றாலும், என்ன செய்வது, நீ வாழ்க்கையையெல்லாம் காட்டில்தான் கழிக்க வேண்டும்” என்றாள். 

அம்மா சொன்ன கதையைக் குமரன் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் யோசித்தான். பிறகு உறுதியாகப் பேசினான் “அம்மா, ஒரு சமயம் பட்டத்து ராணியாக இருந்த நீ, இப்படி காட்டில் வனவாசம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதைப் பார்த்தால் தான் வேதனையாயிருக்கிறது. 

எனக்கென்ன! ஆரம்பத்திலிருந்தே காட்டாள் தான். வேறு வாழ்க்கையே அறிந்திராததால் எனக்குக் காட்டு வாழ்க்கை கலக்கம் அளிக்கவிலலை. இப்போது என் வரலாறு தெரிந்து விட்டதால், உனக்காகவாவது, என் தந்தையின் ராஜ்யத்தை, அபகரித்துக் கொண்ட கொடியவனிடமிருந்து மீட்க நான் ஏதாவது செய்தாக வேண்டும்”என்றான். “குழந்தாய், பதறாதே ! உன் தலையெழுத்து இப்படி இருக்கிறதே, நீ என்ன செய்ய முடியும்?” என்றாள் தாயார். 

“அந்தத் தலையெழுத்தையே மாற்றுவேன்” என்ற குமரனின் திடக் குரலைப் பார்த்து, பேசாமலிருப்பதே மேல் என தாயார் இருந்துவிட்டாள். குமரன் வெகு நேரம் மௌனமாய் சிந்தனை செய்தான். பிறகு திடீரென்று அவன் முகம் பிரகாசம் அடைந்தது. “திரும்பச் சொல்லம்மா ! தினம் ஒரு கஸ்தூரி மான் எனக்குக் கிடைக்கும் என்று தானே விதித் தேவன் கூறினான்” என்று கேட்டான். “ஆமாம்” என்றாள். 

Deer

“சரி. அந்த இலக்கிலேயிருந்து விதியோடு என் போரை ஆரம்பிக்கிறேன்” என்றான் குமரன். அன்று மாலையே, வழக்கம்போல வெவ்வேறு இடங்களில் பத்து வலைகளை விரிப்பதற்கு பதிலாக, ஐந்து வலைகளை மட்டும் குமரன் விரித்தான். அவற்றிலும் ஒரு வலையில் ஒரு மான் சிக்கியது. மறுநாள் ஒரே ஒரு வலை போட்டான். அப்படியும் ஒரு மான் பிடிபட்டது. 

அடுத்த நாள், வழக்கமான இடங்களுக்குப் பதிலாகத் தன் குடிசைக் கூரையின் மேல் வலையைப் பரப்பி வைத்தான். என்ன ஆச்சரியம்! காலையில் அங்கேயும் ஒரு மான் சிக்கிக் கிடந்தது! மறுநாள் மாலையில் ஒரு பனை மர உச்சியில் வலையைத் தொங்கவிட்டான். தப்பாமல், அங்கேயும் ஒரு மான்! அடுத்த நாள் மாலை, மறுபடியும் பனைமர உச்சியிலேயே வலையைக் கட்டிவிட்டு, மரத்தைச் சுற்றி தீயையும் மூட்டி வைத்தான் குமரன். 

அன்று இரவு குமரன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்த போது, பக்கத்தில் யாரோ இறைக்க இறைக்க மூச்சு விடுவது போல் உணர்ந்து, அவன் விழித்துக் கொண்டான். பார்த்தால், ஒளிமயமான ஒரு ஆள் நிற்கிறான். 

அவன் உடம்பும் பாதி எரிந்தாற்போல் இருக்கிறது! விதித்தேவன் தான் அது! “ஏனப்பா, நீ பாட்டுக்கு ஒரு மரத்தின் உச்சியில் வலையைக் கட்டிவிட்டு சுற்றித் தீயையும் மூட்டி விடுகிறாயே, என்ன அர்த்தம்? என்ன விஷமம் இது?” என்று அவன் கோபத்துடன் குமரனிடம் இரைந்தான். “நான் ஒன்றும் இங்கே விஷமம் செய்யவில்லை. என் தந்தையின் பிரதம மந்திரி செய்த விஷமத்தைத்தான் ஒடுக்கப் பார்க்கிறேன். என்னுடைய ராஜ்யம் எனக்குத் திரும்பி வர வேண்டும்” என்று குமரன் பதில் சொன்னான். 

“ஆனால் ஏழையாய்த்தான் வாழ வேண்டும் என்பது உன் விதியாயிற்றே” என்று விதியோன் ஆட்சேபித்தான். அதே மாதிரி தான் ஒவ்வொரு இரவும் ஒரு மான் என் வலையில் விழுந்தாக வேண்டும் என்பதும் என் விதி. எங்கே வேண்டுமானாலும் என் வலையைப் போடுவேன். நீ யார் கேட்க!” என்றான் குமரன். 

“சரி. அந்த விதிப்படி நடப்பதற்காக , நான் ஒரு மானைத் தூக்கிக்கொண்டு, நெருப்பைத் தாண்டிக்கொண்டு, மரத்தின் உச்சியில் அதை வைத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே எத்தனை நாளைக்கு நான் இந்த அவதிப்பட முடியும்?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் விதித்தலைவன். 

“நாளைக்குக் காட்டிலேயே உயரமான மரத்தின் உச்சியில் வலையைக் கட்டுவேன். மரத்தைச் சுற்றி தீயையும் மூட்டுவேன். மரத்தின் மேல் கடுகுஎண்ணெயை நன்றாய்த் தடவிவிடப் போகிறேன்” என்று குமரன் சாதாரணமாகச் சொன்னான். கலங்கினான் விதியின் வேந்தன். 

சிறிது நேரம் யோசித்தான் பிறகு புன்னகை புரிந்தான். “நீ சாமர்த்தியசாலிதான், குமரா ! உன் திடசித்தம் காரணமாக, உன் தலையெழுத்தை நான் திருப்பி எழுதித்தான் ஆகவேண்டும்!” என்றான். அப்பொழுதே விதித்தேவன் குமரனின் நெற்றியில் பழைய எழுத்தை அழித்துவிட்டு, மாற்றி எழுதிவிட்டான்.

சில நாள் கழித்து ஒரு கலகம் நடந்தது. பிரதம மந்திரியும் கொல்லப்பட்டான். குமரன் அரண்மனைக்குச் சென்றான். அவனுடைய பழைய தாதி அவனை அடையாளம் கண்டு கொண்டான். காட்டிலிருந்து அரசிளங்குமரன் திரும்பிய செய்தி காட்டுத்தி போல் பரவியது. மக்கள் எல்லாரும் அவனை ஒருமனதுடன் அரசனாய்ப் பிரகடனம் செய்தார்கள்.

Leave a Comment