வரத்திலெல்லாம் சிறந்த வரம் | Everything is the best gift for the gift | Tamil story

வரத்திலெல்லாம் சிறந்த வரம் | Everything is the best gift for the gift | Tamil story

Horse

ஒரு நாள் இரவு, நல்ல மழை பெய்துகொண்டு, கும்மிருட்டாய் இருந்தபோது, ஒரு அரசன் குறுகிய ஒரு சந்தில் குதிரை மேல் அமர்ந்து போய்க் கொண்டிருந்தான். அவன் மாறுவேடம் போட்டிருந்தான். குடிமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்பதற்காக சாதாரண ஆள்போல வேடம் புனைந்து ஊர் சுற்றுவது அவன் வழக்கம். 

மழையில் அவன் சொட்டச் சொட்ட நனைந்து விட்டான். ஆனால் நல்ல திடமானவன். ஆதலால் மழைக்கும், குளிருக்கும் அவன் அஞ்சவில்லை. தைரியசாலி ஆதலால் இருளைக் கண்டும் மிரளவில்லை. சாவகாசமாக இருந்தாலும் சர்வ ஜாக்கிரதையாக, சவாரி செய்து கொண்டிருந்தான். 

அவனுக்குத் தெரியாமல் பின்னால் சில கொள்ளைக்காரர்களும் குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். யாரோ ஆள் அருமயான குதிரைமேல் தனியே போகிறான். குதிரையைத் தட்டிக்கொண்டு போய்விடலாம் என்பதே அவர்கள் எண்ணம்.

திடீர் என்று திருடர்கள் அரசனைச் சூழ்ந்து கொண்டார்கள். திடீர் ஆபத்தாலும் அவன் திகில் அடையவில்லை. இருந்தாலும், கொள்ளையர் பத்துப் பதினைந்து பேர் இருந்ததால் தப்பிச் செல்வதே நல்லது என்று எண்ணிக் குதிரையைத் தட்டிவிட்டான். ஆனால் தெருவில் இருந்த ஒரு விரிசலில் குதிரயின் கால்கள் சிக்கிக் கொண்டது. 

Robbery-gang

சிக்கினான் ஆள் என அவன்மீது கொள்ளைக்காரர்கள் பாயப்போனார்கள். அப்போது இன்னொரு திடீர் சம்பவம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஆறு இளைஞர்கள் வந்தார்கள். ஒற்றை ஆள், திருடர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து, எதிரிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதே என்று பார்க்காமல் அவர்கள் மீது பாய்ந்து வேகமாகச் சண்டை போடத் துவங்கினார்கள்.

மன்னன் மாறுவேடம் போட்டுச் சுற்றும்போது, அவனுடைய மெய்க்காவலர்களில் மிகச்சிறந்த சிலர், கொஞ்ச தூரம் பின்னாலேயே வருவது வழக்கம். இப்போது அவர்களும் வந்துவிட்டார்கள். தப்பினால் போதும் என திருடர்கள் ஓடப் பார்த்தார்கள், முடியவில்லை. எல்லாரும் பிடிபட்டார்கள்.

தங்கள் உயிரை மதியாமல் தன்னைக் காப்பாற்ற முன் வந்த இளைஞர்களிடம் மகிழ்ச்சி மிகக் கொண்டான் மன்னவன். அவர்களுக்கோ, மன்னனுக்கா இந்த மாசேவை புரிந்தோம் என மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் போயிற்று. அரசன் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, எல்லாரும் என்னுடன் அரண்மனைக்கு வாருங்கள், என்று அழைத்துச் சென்றான். 

அந்த இளைஞர்கள், தொலைதூர கிராமங்களிலிருந்து வந்தவர்கள். ஒரே சத்திரத்தில் தங்கியதால் நண்பர்கள் ஆகியிருந்தார்கள். இரவில் நடந்த சம்பவம் காலைக்குள் ஊரெல்லாம் பரவி விட்டது. நம் உத்தம அரசர் ஒரு கேடுமில்லாமல் தப்பினாரே என எல்லாரும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள். அரசனின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், அரசவைப் பிரபுக்களும், பொதுமக்களும் என எல்லாரும் நாட்டுப்புற இளைஞர்களின் தைரியத்தையே ஓயாமல் புகழ்ந்தார்கள்.

அரசவை நடைபெறும் மண்டபத்திற்கு அரசன் வந்தவுடன் அந்த ஆறு வீர இளைஞர்களும் அவன் முன்னே கொண்டுவரப்பட்டார்கள். சிம்மாசனத்திலிருந்தே இறங்கி வந்து ஒவ்வொருவரையும் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான் அரசன். செய்த உதவிக்கு அவர்களுக்குச் சன்மானம் அளிக்க விரும்பினான்.

“ஒவ்வொருவரும், உங்களுக்கு எது மிகவும் மகிழ்ச்சி அளிக்குமோ, அதைத் தயங்காமல் கேளுங்கள். என் சக்திக்கோ, ஆற்றலுக்கோ அப்பாற்பட்டதாய் இருந்தால் அன்றி, இக்கணமே கொடுத்திடுவேன், இது சத்தியம்” என்று உரைத்தான் 

நண்பர்களில் மூத்தவன் முதலில் தன் விருப்பத்தைத் தெரிவிக்கக் கோரப்பட்டான். கணப்பொழுது அவன் யோசித்துவிட்டுச் சொன்னான்: “மாமன்னா, வசதியான வீடொன்றில் வசித்திட வேண்டும் என்பதே ஏழையென் வெகுநாள் விருப்பம். அருள் புரிந்திடுவீர்.” உடனே அரசன் ராஜாங்கச் சிற்பியை அழைத்து, “இவனுக்கு ஒரு பளிங்கு மாளிகை கட்டித்தா” என பணித்திட்டான். 

அடுத்த இளைஞன், அரசவைப் பிரபு ஆக வேண்டும் என ஆசை வெளியிட்டான். அரசனும் அவனுக்குச் சில பட்டங்களை அளித்து, தன்னுடைய பிரபுக்களில் ஒருவனாய் ஆக்கிக் கொண்டான். 

மூன்றாமவன், “அரசே, என் கிராமத்து மக்கள் கறிகாய் விற்பதற்காக வாராவாரம் பட்டினத்துச் சந்தைக்கு வருகிறார்கள். வருவதற்கு ஒரு நல்ல சாலை இல்லாமல் வருந்துகிறார்கள். மழைக்காலத்திலோ மகா கஷ்டம். நகரத்துக்கும் கிராமத்திற்கும் இடையே நல்ல சாலை போட்டுத் தந்தால், அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்றான். “அப்படியே ஆகுக” என்று அரசனும் தலையைசைத்திட, சாலைத்துறை அமைச்சர் ஓலை நறுக்கில் குறித்துக் கொண்டார். 

நான்காவது ஆளின் ஆசையைக் கேட்டபோது, அவன் நாணிக்கோணிக்கொண்டு, “நானிலத்தோர் தந்தையே! தந்தையினும் சாலப் பரிந்து அடியேனுக்கு ஒரு அழகான பெண்ணைத் தேடி மணம் முடித்து வைத்தால் மனமகிழ்வேன்” என்றான். அரசனின் விதூஷகனுக்கே ஒரு அழகான பெண் இருந்தாள். நல்ல மாப்பிள்ளை, நங்கையைக் கொடுத்திடு என்றான் அரசன். விதூஷகனும் குதூகலத்தோடு ஒப்புக் கொண்டான்.

 ஐந்தாம் இளைஞன் பணம் வேண்ட, அவனுக்கு மூட்டை மூட்டையாகத் தங்கத்தைக் கொடுத்தார்கள். 

கடைசியில் ஆறாவது இளைஞனின் முறையும் வந்தது. அவன் சொன்னான் : “அரசே, ஆண்டுக்கொருமுறை அடியேன் குடிசையில் நீர் விருந்தாளியாக எழுந்தருள வேண்டும்.” இந்த விசித்திர வேண்டுகோளைக் கேட்டு எல்லாருக்கும் வியப்பாய்ப் போயிற்று. அரசனுக்கும் கொஞ்சம் வேடிக்கையாகவேபட்டது. இருந்தாலும், தன் ஆற்றலுக்கு உட்பட்ட எதையும் தருவதாய் வாக்களித்திருந்தான். ஆகையால், ஆண்டிற்கு ஒரு பகலும் இரவும் அவன் வீட்டில் தங்குவதாய் ஒப்புக்கொண்டான். 

ஆண்டிற்கொரு முறை அரசன் அந்தக் கிராமத்தானின் விருந்தாளியாய்த் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்வது, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாக ஆயிற்று. முதலாவதாக, ராஜாவின் தேர் ஜோராய்ச் செல்வதற்கு நல்ல சாலை போட வேண்டியிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறைதான் என்றாலும், வதுமைமிக்க ஒரு குடிசையில் வேந்தன் வசிப்பதும் தூங்குவதும் எப்படி என்று இன்னொரு கேள்வி முளைத்தது. சரி, அரசன் தங்குவதற்கேற்ற ஒரு ஆடம்பரக் கோட்டையை அவனுக்குக் கட்டிக்கொடு என்றார்கள். அவன் ஏழை ஆயிற்றே? கோட்டையைக் கட்டிக் காப்பதற்கும், அரசனையும் பரிவாரங்களையும் உபசரிப்பதற்கும் பணத்துக்கு எங்கே போவான்? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அவனுக்கு மூட்டை மூட்டையாய் தங்கமும் வருடாந்திர மானியமும் வழங்கப்பட்டன.

Big-house

வழி வழியாய் வந்த ஒரு வழக்கத்தின்படி ஒரு பிரபுவின் வீட்டில் தான் அரசன் விருந்தாளியாய்த் தங்கலாம். அதற்காக, அந்த இளைஞனுக்கு விதவிதமான பட்டங்களுடன் பிரபுப் பதவியும் அளிக்கப்பட்டது. ஒரு ராஜபுத்திரன் போல அவனை எல்லாரும் கௌரவிக்கத் துவங்கினார்கள்.

இன்னும் ஒன்றே ஒன்று பாக்கி. அரசனின் ருசியறிந்து, நாசூக்கான பழக்க வழக்கமறிந்து, அன்புடன் விருந்தோம்ப, அவன் வீட்டுப் பெண்மணிக்கு நாலும் தெரிந்திருக்க வேண்டாமா? அரசனின் மகளைவிட அவையனைத்தும் தெரிந்தவர் யார் இருக்க முடியும்? எனவே இளவரசியை இளைஞனின் இல்லத்தரசி ஆக்குவதற்கு ஜாம் ஜாம் என்று ஏற்பாடுகள் நடந்தன. 

இவ்வாறு ஒரே ஒரு வரம் கேட்ட அந்தக் கெட்டிக்கார இளைஞன், தன்னுடைய ஐந்து துணைவர்களும் பெற்றதை எல்லாம் பெற்றான். ஏன், இன்னும் நிறைய அதிகமாகவே பெற்றான்!

Leave a Comment