அறிவாளியான அப்பாஜியை டில்லி பாதுஷா கௌரவிக்க விரும்பினார் அவரை டில்லிக்கு தம்முடைய அரச சபைக்கு அனுப்பி வைக்கும்படி இராயருக்கு கடிதம் அனுப்பினார்.
இராயரும் தனது மந்திரி சபையில் அறிவாளியாய் விளங்கும் ஒருவருக்கு வடக்கே வரவேற்புக் கிடைக்கிறதென்று, புகழ்ந்து அப்பாஜியை வாயாற வாழ்த்தி டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
டில்லி ராஜ சபைக்கு அப்பாஜி வரும் சமையத்தில் டில்லி பாதுஷா தனது சிம்மாசனத்தில் அமர்ந்திராமல் மந்திரி வேடத்தில் எண்ணற்ற மந்திரி பிரதானிகளோடு ஒருவராக அமர்ந்து கொண்டு தமக்குப் பதிலாக ஒரு காவலாளியை அரசவேடம் போட்டு, தனது சிம்மாசனத்தில் அமர்த்தி வைத் திருந்தார்.
ஆனால் அப்பாஜி அரச சபைக்கு வந்ததும் சிம்மாசனத்திலிருந்த அந்தப் போலி பாதுஷாவைப் பொருட்படுத்தாமல் மந்திரிப் பிரதானிகளின் வரிசையில் அமர்ந்திருந்த உண்மையான பாதுஷாவைப் பார்த்து வணங்கி தமது அரசரின் வாழ்த்துக்களை கூறினார்.
அசந்து போனபாதுஷா, ஆச்சர்யத்துடன் “அப்பாஜி எம்மைப் பாதுஷா என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு அப்பாஜி “அரசே அதை கண்டுபிடிப்பது ஒன்றும் எனக்கு பெரிய காரியமாக இருக்கவில்லை. மொத்த சபையோரின் கவனமெல்லாம் தாங்கள் இருந்த திசைப் பக்கமே திரும்பி இருந்தது. அவர்களின் கண்களெல்லாம் ராஜ பக்தியோடும் வியப்போடும் தங்களையே கவனித்துக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் கதிரவனையே நோக்கியிருப்பதில்லையா ? அதைப் போல, நான் அதன் மூலந்தான் தாங்கள் தான் உண்மையான பாதுஷா என்பதை கண்டு பிடித்தேன்” என்றார்.
அப்பாஜியின் சமயோசித அறிவைப் பாராட்டிப் புகழ்ந்த டில்லி பாதுஷா அப்பாஜிக்கு நிறைய சன்மானங்கள் வழங்கிக் கௌரவித்து வழியனுப்பி வைத்தார்.
பின்பு தம் சபைேையாரை நோக்கி “சபையோரே ! அப்பாஜியைப் போன்ற அறிவுக் கூர்மை வாய்ந்த அமைச்சர் கிருஷ்ணதேவராயரிடம் இருப்பதால் தான் அந்நகரின் மன்னர் மற்றவர்களைப் போல நமக்குக் கப்பம் கட்டாமல் சுதந்திரமாக அரசாள்கிறார். அரசருக்கு வரும் எல்லா ஆபத்துகளையும், அப்பாஜி தனது சாதுர்யத்தால் நீக்கி விடுகிறார். அப்பாஜி போன்ற புத்திசாலிகள் இருக்கும் வரை விஜயநகரம் தாழ்வுறாது. அதனால் தான் அவர்களை நான் நண்பர்களாக ஆக்கிக் கொண்டேன்” என்றார்.
சபையோரும் தலை அசைத்து அதை ஆமோதித்தனர்.