இரகசியம் | tamil short story

இரகசியம் | tamil short story

பல்லாண்டுகளுக்கு முன் ஒரு குக்கிராமத்தில் ரகு, ராஜு என்ற இரண்டு பையன்கள் இருந்தார்கள். ஒரே வயதினரான இருவரும் ஒரேபள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். 

ரகு நாணயமானவன், கஷ்டப்பட்டு உழைப்பவன். பெற்றோரும் ஆசிரியர்களும் பெருமைப்படும்படி நடந்து கொள்வான். 

ராஜு வேறு மாதிரி. அவன் சாமர்த்தியமுள்ளவன், ஆனால் நாணயமில்லாதவன். பரீட்சைகளில் ஏமாற்றுவான்; மற்ற பையன்களைப் பார்த்து எழுதுவான். தன்னைத் தவிர மற்றவர் மேல் அவனுக்கு அன்பு கிடையாது. ஆனால் வெறும் வாய்ச் சொற்களாலும் புன்சிரிப்பாலும் மற்றவர்களை ஏமாற்றுவதில் கெட்டிக்காரன். 

ரகு தனக்கு உதவி செய்ய மறுத்ததால், அவனைக் கண்டால் ராஜுவிற்குப் பிடிக்காது. திருடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் ரகுவிடம் அவன் அடிக்கடி உதவி கேட்பான். ஆனால் ரகு எப்போதும், “நல்ல காரியங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள், சந்தோஷமாய்ச் செய்கிறேன்; ஆனால் கெட்ட காரியங்களுக்கு என் பக்கத்திலேயே வராதே!” என்று சொல்லிவிடுவான். 

படிப்பு முடிந்த பிறகு ராஜு பெரிய நகரம் ஒன்றில் வசிக்கச் சென்றுவிட்டான். ரகுவோ, கிராமத்திலேயே தங்கி, தன் தந்தை விட்டுச்சென்ற சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு சிக்கனமாக வாழ்ந்து கொண்டிருந்தான். 

நல்லவன் என கிராம மக்கள் எல்லாரும் அவனை நேசித்தார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. ரகுவும் ராஜுவும் சந்தித்துக் கொள்வதற்குக்கூட சந்தர்ப்பமே நேரவில்லை.

Rich man

ஆனால் ஒரு நாள், ராஜுவின் சாமர்த்தியத்தில் ராஜா மயங்கி, அவனைப் பிரதம மந்திரியாக நியமித்துக் கொண்டதாக ரகுவின் காதில் செய்தி விழுந்தது. ராஜு யோக்கியன் இல்லை என்பது அவனுக்குத் தெரியுமாதலால் அவன் இந்தச் செய்தியால் சந்தோஷப் படவில்லை. 

ஆனால் துக்கப்படவும் இல்லை; ஏனென்றால் தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றி அவன் கவலைப் படுவதே கிடையாது. 

ஒருநாள் ஏதோ கிராமத் திருவிழாவிற்காகப் பண்டங்கள் வாங்குவதற்காக ரகு நகரத்துக்குப் போக நேர்ந்தது. நடுப்பகல் வேளையில் போய்ச் சேர்ந்ததால், அவனுக்கு களைப்பாகவும் தாகமாகவும் இருந்தது. 

பக்கத்திலே மாளிகை போன்ற ஒரு வீடு இருப்பதைப் பார்த்து, அதற்குள் நுழைந்து, பணியாளிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்கலாம் என்று போனான். அதற்குள் வீட்டுக் காரனே வந்து விட்டான். “ஆ நீயா ரகு, இங்கு எங்கே வந்தாய்?” என்று ஆச்சரியத்துடன் வீட்டுக் காரன் கூவினான். அந்த வீட்டுக் காரன் வேறயாருமில்ல ராஜு தான்.

ராஜுவை ரகுவிற்கு அடையாளமே தெரியவில்லை. அவன் தடபுடலாய் ஆடை அணிந்திருந்தான். அருமையான பட்டாடைகள் பளபளக்க, தங்கச் சங்கிலிகளும் வைர மோதிரங்களும் பகலோன் ஒளியில் தகதகக்க, மாணிக்கக்கல் மையத்தில் பதித்திட்ட சரிகைத் தலைப்பாகை சிரத்தை அலங்கரிக்க, பரங்கிப் பழமென மெல்ல நடைபோட்டு வந்தான். அவனே பரங்கிப்பழம் போல உப்பியிருந்தான். 

ராஜுவிற்கு ரகு வணக்கம் கூறினான். ராஜு பதில் வணக்கம் கூறவில்லை. ஆனால் மிகக் குத்தலாய்

“உன்னைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது ரகு. அய்யே ! உன் வேட்டி சட்டைதான் எவ்வளவு கேவலம் ! இவ்வளவு தொலைவும் நடந்துதான் வந்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஏறி வருவதற்கு ஒரு குதிரைவண்டி வேண்டாம், ஒரு கட்டை மாட்டுவண்டி கூடவா இல்லை! என்னைப் பார், அசல் ராஜா போல் இருக்கிறேன் இல்லையா; என் உடுப்பைப்பார். என் வீட்டைப்பார், தேவலோகத்தார்கூட என்னைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு பதவியும் என் திறமையால் வந்தது. உனக்கு மூளையே குறைவு, ஒரு கட்டை வண்டிக்குக்கூட வக்கில்லை!” என்றான்.

“நான் ஏழையாயிருக்கலாம், ஆனால் போதும் என்ற மனம் எனக்கு இருக்கிறது” என்று ரகு மறுமொழி கூறினான்.

தொடர்ந்து “நான் அறிவில் மந்தமானவன் இல்லை என்பதும் உனக்குத் தெரியும். விரும்பியிருந்தால், உன்னைப்போல் பணமும் அதிகாரமும் நானும் அடைத்திருப்பேன். ஆனால் உன் வழிகளை உபயோகிப்பதை நான் விஷமாய் வெறுப்பேன்.” என்றான் ரகு.

உடனே “மூடுடா வாயை அவ்வளவு சாமர்த்தியசாலி, என் வீட்டிற்குப் பிச்சை எடுக்க ஏன் வந்தாய்.” 

“நான் ஒன்றும் உன் வீட்டுக்குப் பிச்சை கேட்க வரவில்லை. தாகமாக இருந்தது, ஒரு குவளை தண்ணீர் கேட்க வந்தேன். உன்னுடைய வீடு என்றுகூடத் தெரியாது.”

“பொட்டுத் தண்ணீர் கிடையாது, போடா வெளியே ! ” என்று ஆத்திரத்தால் குரல் நடுங்கக் கத்தினான் ராஜு.” 

“சரிதானப்பா, நான் போகிறேன்.” என்று ரகு சாந்தமாகக் கூறிவிட்டுப் போகத் திரும்பினான். ஆனால் ராஜுவிற்கு அத்தோடு விடுவதில் திருப்தியில்லை. ராகுவை அப்படியே தூக்கி வெளியே தள்ளும்படி தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.

அப்போது ரகுவுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. “நான் உனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லை. வீணாய் என்னை அவமானப்படுத்தாதே, கெட்டுப்போவாய்!” என்றான். 

“ஐயோ பாவம், எனக்கு ஒரு கெடுதலும் செய்யவில்லையா? பரீட்சைகளில் எனக்கு உதவி செய்ய மறுப்பாயே, அது என்னவாம்? இப்போது ஆசை தீர அவமானப்படுத்துவேன்? நீ என்ன செய்துவிட முடியும்? சிறையில் போட்டு விடுவாயோ? நான் அரசரின் பிரதம மந்திரியாக்கும்! மற்ற எல்லா மந்திரிகளுக்கும் வேலை கொடுப்பது நான்தான். சேனாதிபதி என் சினேகிதன். தனாதிகாரி என் மாமனார். தலைமை நீதிபதி என் மைத்துனர். தெரிந்ததா?” என்று ராஜு கத்தினான். 

“நீங்கள் எல்லாருமே அழிந்து போவீர்கள்” என்று மறுமொழி கூறிய ரகுவைத் தெருவில் தள்ளினார்கள் பணியாட்கள். 

சில மாதம் கழிந்து ஒரு நாள், தாடியும் மீசையுமாய் ஒரு புதியவர், அரசன் தனியே தோட்டத்தில் இருக்கையில் அவரிடம் சென்றார். அழகான பல பொருட்களை அரசனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

King

“அரசே, ஒவ்வொரு நாளும் நான் தங்களுக்கு இரகசியமாக ஐம்பது தங்கக் காசுகள் தருவேன். பதிலுக்கு தாங்கள் அரசவையில் இருக்கையில், தங்கள் காதில் சில நிமிடம் நான் இரகசியமாய் ஏதாவது ஓதுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.” 

“ஆகட்டும் இதில் என்ன கஷ்டம் எனக்கு” என்று பதில் மொழிந்தான் மன்னவனும், மறுநாள் மந்திரிகள் புடைசூழ ராஜா அரசவையில் இருந்த போது, அந்தப் புதியவரைப் பார்த்து, கிட்ட வாரும் என கண்சாடை காட்டினான். 

அருகில் சென்றவர் அரசன் காதோடு ரகசியமாய் சொன்னார் : “இன்று அற்புதமான நாள். சூரியன் பளிச்சென்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறான்.” 

புதியவர் கிசுகிசுத்துக்கொண்டே, ராஜுவையும் அடிக்கடி நோக்கினார். பிறகு தங்கக் காசுகளை அரசன் பையில் ரகசியமாகப் போட்டுவிட்டுத் திரும்பினார்.

பிரதம மந்திரிய௧ன ராஜு அவர் பின்னாலேயே சென்று பயபக்தியுடன் கேட்டான்: 

“மன்னனிடம் சொன்னதென்ன, மாண்புமிக்க ஐயா? அடியேனை அடிக்கடி நோக்கியதும் ஏன் கொஞ்சம் சொல்லுங்களேன்.” 

இதைத்தான் எதிர்பார்த்தார் அந்த புதிய மனிதரும். ஏனென்றால், அந்த ஆசாமி, மாறுவேடம் போட்டிருந்த ரகுதான்! 

“எனக்கும் ராஜாவுக்கும் எவ்வளவோ ரகசியம் இருக்கும். உமக்குச் சொல்ல முடியுமா!” என்றான் அவன். 

ராஜுவின் பயம் பன்மடங்கானது. மண்டியே போட்டு விட்டான். ரகுவின் கையில் நூறு தங்கக் காசுகளைத் திணித்தான். “மாலையில் மற்றுமொரு நூறு தருவேன். மாமத்தை மட்டும் சொல்லிடுவீர்” என்று கெஞ்சினான். 

ரொம்பத் தயங்குவதுபோல் ரகு போக்குக் காட்டினான். ஆனால் நிறைய மன்றாடலுக்குப் பிறகு சொன்னான்: 

“விஷயம் மிகவும் தீவிரம். நீர் லஞ்சம் வாங்குகிறீர் எனப் பல பேர் அரசரிடம் புகார் செய்திருக்கிறார்கள். அரசரும் இதை விசாரி என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.” 

“இன்று அரசரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள் ஐயா!” எனத் தவிப்புடன் கேட்டான் ராஜு.

“இன்னும் விஷயத்தைக் கவனித்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறேன்” என்றான் ரகு. 

“ஏழை மீது கருணை காட்டிடுவீர் ஐயா! ஆயிரம் தங்கக் காசுகள் தருகிறேன்!” என்று ராஜு வாக்களித்தான். 

“பார்க்கலாம்,” என்றான் ரகு. மறுநாளும் ரகு மன்னனின் காதுக்குள் கிசுகிசுத்தான் “இன்று விடியலில் காற்று வடக்கேயிருந்து வலுவாய் அடித்து, இப்போது வடகிழக்காக நகர்ந்திருக்கிறது.” இரகசியம் சொல்லிக் கொண்டே ராஜுவைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். 

அபத்தச் சொற்களைக் கேட்டு அரசன் தன்னுள் சிரித்துக் கொண்டான். அவனுக்கென்ன, இந்த அற்ப தயவுக்காக அன்றாடம் ஐம்பது தங்கக் காசுகள் கிடைக்கிறதே என்று ஆனந்தம். 

தூண்டிற் புழுவினைப்போல் துடிக்கும் நெஞ்சத்துடன் ராஜு, ரகுவைத் தொடர்ந்தான். முதலமைச்சர் முறைகேடாக ஒன்றும் செய்யவில்லை என்று அரசனை இப்போதைக்குத் திருப்தி செய்திருப்பதாகக் கூறினான் ரகு. 

நடுக்கம் தீர்ந்த ராஜுவும் நன்றி கூறி ஆயிரம் தங்கக்காசுகளைச் சமர்ப்பித்தான். அடுத்த நாள் ரகு, வெளியே பனியும் தூற்றலுமாய் இருப்பதாக வேந்தன் காதில் ஓதியவண்ணம், சேனாதிபதியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். 

சேனாதிபதியின் கதையும் பிரதம மந்திரியின் கதை போலவே ஆனது; ரகுவிற்கு இன்னொரு ஆயிரம் தங்கக் காசுகள் கிடைத்தன. 

அடுத்த சில நாட்களில், எல்லா அமைச்சர்கள், தனாதிகாரி, கடைசியில் தலைமை நீதிபதி ஆகிய அனைவரையும் அவன் கிலியால் ஆடவைத்தான். ஒவ்வொரு நாளும் அரசனுக்குக் கொடுத்த ஐம்பது தங்கக் காசுகளுக்குப் பதிலாக மொத்தம் பத்தாயிரம் கறந்து விட்டான்.

பிறகு ஒருநாள், பிரபுக்களும், அதிகாரிகளும் சாதாரணக் குடிமக்களும் அரசவையில் கூடியிருந்தபோது, ரகு நின்று கொண்டு சொன்னான். 

“என் அரசே, இத்தனை நாளும் உங்கள் காதுகளில் அர்த்தமற்ற சொற்கள் எத்தனையோ சொல்லி வந்தேன். இன்று இந்தப் பை அர்த்தமுள்ள ஒன்றைச் சொல்லும்!” என்று கூறி அவன் மன்னன் முன்னே பட்டுப்பை ஒன்றைப் போட்டான்.

பத்தாயிரம் தங்கக் காசுகளின் கிண்கிணிச் சத்தம், இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல இருந்தது மன்னவனுக்கு ஆசாமி கொஞ்சம் கிறுக்கு போலும் என நினைத்தாலும், “தயவுசெய்து சற்று விளக்குவீர் “ எனக் கேட்டான் மன்னன். 

நடந்ததையெல்லாம் ரகு சொன்னான். “தங்கக் காசுக் குவியலைப் பாரும். உம்மைச் சூழ்ந்துள்ள பொய்க்கு, மெய்யான சான்று இதுவே. முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் மனத் தூய்மை உள்ளவராயிருந்தால், தளபதி தம் பணியை உளமாரச் செய்திருந்தால், தனாதிகாரியும் தலைமை நீதிபதியும் லஞ்சம் வாங்காதவராயிருந்தால், நான் அவர்களிடம் கூறிய பொய்களுக்கு கிலி பிடித்து நடுங்கியிருக்க மாட்டார்கள்” என்றான். 

தன் அதிகாரிகள் கும்பலில் ஒரு ஆள்கூட பதவிக்குத் தகுதியில்லை என்று அரசன் உடனே புரிந்து கொண்டான். எல்லாரும் லஞ்ச ஊழல் பிடித்தவர்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதால் சதா கிலியில் ஆழ்ந்திருந்தார்கள். ராஜுவும் அவன் தோழர்களும் கள்ளம் கபடத்தால் கட்டியிருந்த அதிகாரக்கோட்டை மண்கோட்டை போல் சரிந்தது. 

ரகு முதலமைச்சர் ஆக்கப்பட்டான். மதி தெளிந்த மன்னனின் கீழ், கடமைப்பற்றுடன் கண்ணியமாய்ப் பணி புரிந்திட நல்லவர் குழு ஒன்றை ரகுவும் விரைவிலேயே சேர்த்துக் கொண்டான்.

Leave a Comment